ராஜ்டிவியின் ‘தமிழ்பேசும் கதாநாயகிகள்' ரியாலிட்டி ஷோ பட்டத்தை சஞ்சனா வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு இயக்குநர் பாலாஜி சக்திவேல் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவுக்கு நன்கு தமிழ் பேசத் தெரிந்த கதாநாயகிகளை உருவாக்கி தர ‘எச்2ஓ' எனும் நிறுவனத்தை தொடங்கியுள்ளார் ஜான் விஜய். இதற்காக ராஜ் டிவியுடன் இணைந்து ‘தமிழ் பேசும் கதாநாயகி' என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
இவரின் இந்த முதல் முயற்சியிலேயே 70 இளம்பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர், அவர்களில் 15 பேர் இறுதிச் சுற்றுக்குத் தேர்வானார்கள். அதிலிருந்து அட்டகாசமாக தமிழ் பேசும் நாயகிகளாக சஞ்சனா, அஞ்சலி, கோபிகா ஷா, ரமா, பத்மா ஆகிய 5 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், வசந்த், எஸ்.ஜே.சூர்யா, பாலாஜி சக்திவேல், எஸ்.எஸ்.ஸ்டான்லி, பாலாஜி மோகன், சாந்தகுமார் மற்றும் நடிகை வடிவுக்கரசி ஆகியோர் நடுவர்களாக இருந்து இந்த 5 பேரையும் தேர்வு செய்தனர்.
இந்த 5 நாயகிகளையும் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று சென்னையில் பிரபல நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக பங்கேற்ற அனைவரும் கலந்து கொண்டு தமிழ் பேசும் நாயகிகளை தேர்வு செய்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
ஜான் விஜய் பேசும்போது, தமிழில் திறமையான நடிகைகள் இருந்தாலும், அவர்கள் சொந்த குரலில் பேசாமல் ‘டப்பிங்' குரலில் நடிப்பதால்தான் விருதுகள் கிடைக்காமல் இருக்கிறது. அதை அறிந்துதான் இந்த முயற்சியை மேற்கொள்ள திட்டமிட்டேன். இந்த முயற்சிக்கு எனது மனைவி மாதவி மற்றும் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பாலாஜி மோகன் ஆகியோர் பக்கபலமாக இருந்தனர் என்றார்.
இறுதிச் சுற்றில் பங்கேற்ற 5 பேரில் சஞ்சனா முதலிடத்தைப் பெற்று ‘தமிழ் பேசும் கதாநாயகி' பட்டத்தை வென்றார். அவருக்கு மேடையிலேயே அதிர்ஷ்ட வாய்ப்பு அடித்தது. அதாவது, இயக்குனர் பாலாஜி சக்திவேல், சஞ்சனா விரும்பினால் தன்னுடைய அடுத்த படத்தில் கதாநாயகியாகலாம் என்று அறிவித்தார். மற்ற நால்வருக்கும்கூட படவாய்ப்புகள் கிடைத்துள்ளன.
ஓரம்போ' படத்தில் அறிமுகமாகி ‘வ', ‘மவுன குரு', ‘தில்லாலங்கடி', ‘கலகலப்பு' ஆகிய படங்களில் காமெடி கலந்த வில்லனாக கலக்கியவர் ஜான் விஜய். இப்போதும் ஏகப்பட்ட வாய்புகள் இருந்தாலும், சத்தமில்லாமல் தமிழ் பேசும் கதாநாயகிகளைத் தேடி தமிழகம் முழுவதும் வலம் வந்துள்ளார் ஜான் விஜய்.
இந்த நிகழ்ச்சி பொங்கல் பண்டிகை தினத்தில் ராஜ் டிவியில் ஒளிபரப்பாகிறது.
Post a Comment