வரி விதித்து மக்களை வாட்டுவதை விட அரசியல்வாதிகள் ஊழல் மூலம் சம்பாதித்த சொத்துக்களை மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற பயன்படுத்தலாம் என்று நடிகர் அஜீத் கூறியுள்ளார்.
சேவை வரிவிதிப்பு எதிர்த்து கடந்த 7ம் தேதி சென்னையில் திரை உலகினர் உண்ணாவிரதம் இருந்தனர். போராட்டத்திற்கு அஜீத் வரவில்லை. ஆனாலும் வரிவிதிப்பை எதிர்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அஜீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ரெயில் கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்து என்ன நடக்குமோ எனத் தெரியாது. நான் திரை உலகினர் மீது சுமத்தப்பட்டுள்ள சேவை வரி பற்றி மட்டும் குறிப்பிட வில்லை. கட்டண உயர்வு, வரி விதிப்புக்குப் பதிலாக, நமது நாட்டிலுள்ள ஊழல் தலைவர்கள் மோசடி மூலம் சம்பாதித்த பணத்தை நம் நாட்டு அடிப்படைத் தேவைகள் வளர்ச்சிக்காக செலவு செய்ய முன்வந்தாலே போதும்.
நமது நாடு வளர்ந்த நாடுகளில் ஒன்றாகவோ, ‘டாப் டென்' பணக்கார நாடுகளில் ஒன்றாகவோ மாறும். ஆங்கிலேயர்கள் நமது நாட்டை ஆண்டு இங்கிருந்து மொத்த வளங்களையும் வாரிச் சுருட்டிக் கொண்டு சென்றனர். இந்த உண்மையை நாம் மக்களுக்கு புரிய வைத்தால் அவர்கள் மீண்டும் சிந்திப்பார்கள். ஆனால் ஆங்கிலேயரை விட நமது நாட்டில் உள்ள ஊழல் தலைவர்கள் இன்னும் அதிகமாகவே சுரண்டி உள்ளனர்.
கடவுள்தான் இந்தியாவை காப்பாற்ற வேண்டும். 1947-ல் இங்கிலாந்தின் பாராளுமன்றத்தில் இந்தியா, பாகிஸ்தானுக்கான சுதந்திரம் வழங்குவது பற்றி பேச்சுவார்த்தை நடந்த போது, ஒரு அரசியல் வல்லுநர், இது நடந்தால், அதிகாரம் அனைத்தும் அயோக்கியர்கள் கையில் போகும். மக்களுக்கு பயனற்ற தலைவர்கள் உருவாகும் நிலைதான் ஏற்படும். அந்த மாதிரி தலைவர்கள் இனிப்பான நாவையும், காட்டமான இதயத்தையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அதிகாரத்துக்காக அவர்கள் தங்களுக்குள்ளேயே சண்டை போட்டுக் கொள்வார்கள். இவர்கள் உண்டாக்கும் குழப்பமான அரசியல் கூச்சலில் இரண்டு நாடுகளுமே தொலைந்து போகும். சுவாசிக்கிற காற்றுக்கும், குடிக்கிற நீருக்கும் வரி விதிக்கும் நாள் வரும் என்றாராம்.
இவ்வாறு தன் அறிக்கையில் கூறியுள்ளார் அஜீத்.
Post a Comment