டெல்லி: தனது அடுத்த படத்தின் ஒரு பகுதியை இந்திய பாகிஸ்தான் எல்லையில் வைத்துப் படமாக்க விரும்புவதாக ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் தெரிவித்துள்ளார்.
ஆஸ்கர் விருது வென்ற லிங்கன் படத்தின் வெற்றியைக் கொண்டாட இந்தியா வந்துள்ள ஸ்டீபன் ஸ்பீல்பெர்க், டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில், இந்தியாவுக்கும் தனது குடும்பத்துக்குமான தொடர்புகளை நினைவு கூர்ந்துள்ளார்.
ஸ்பீல்பெர்க்கின் தந்தை அர்னால்ட், இரண்டாம் உலகப் போரில் 490வது குண்டுவீச்சுப் பிரிவில் ஸ்க்வாட்ரனாக இருந்துள்ளார். அப்போது பிரிக்கப்படாத இந்தியாவில், கராச்சி நகரில் நிலை கொண்டிருந்தது அவர் பணியாற்றிய படைப் பிரிவு. பர்மாவில் ஜப்பானிய ரயில்வே லைன்களைத் தகர்த்து ஜப்பானை முன்னேற விடாமல் தடுத்ததில் இவர் பங்கு பெரிதாக இருந்துள்ளது.
பம்பாய், கல்கத்தா மற்றும் பல இந்திய நகரங்களுக்கு ஸ்பீல்பெர்க்கின் தந்தை அர்னால்ட் அடிக்கடி வந்து போவது வழக்கமாம்.
அர்னால்டுக்கு இப்போது 96 வயதாகிறது. இரண்டாண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் அவரது பெட்டிகளை ஆராய்ந்தபோது, ஏராளமான கடிதங்கள் மற்றும் புகைப்பட பிலிம்களைக் கண்டெடுத்துள்ளார் ஸ்பீல்பெர்க். அந்தக் கடிதங்கள் பெரும்பாலும் ஸ்பீல்பெர்க்கின் தந்தை தன் மனைவிக்கு எழுதியவை. அவற்றை அர்னால்ட் படிக்கப் படிக்க ஒரு கேமிராவில் பதிவு செய்து கொண்டாராம் ஸ்பீல்பெர்க்.
உறைகளுக்குள் டெவலப் செய்யப்படாமல் இருந்த ஏராளமான பிலிம்களை, கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்குப் பிறகு டெவலப் செய்து பார்த்திருக்கிறார் ஸ்பீல்பெர்க்.
அவை அனைத்துமே இந்தியாவில் அவர் தந்தை இருந்தபோது எடுத்த படங்களாம். அப்போதுதான் தனது குடும்பத்துக்கும் இந்தியாவுக்கும் இத்தனை நெருங்கிய தொடர்பு இருப்பது ஸ்பீல்பெர்க்குக்கே தெரிந்ததாம்.
இந்திய - பாக் எல்லையில்...
'சரி இத்தனை தொடர்புடைய இந்தியா பற்றி... அல்லது இந்தியாவில் படமெடுக்க ஆசை இல்லையா?'
'நிச்சயம் உள்ளது... ஏற்கெனவே 1977-ல் க்ளோஸ் என்கவுன்டர்ஸ் படத்துக்காக ஒருமுறை இந்தியாவில் ஷூட் செய்திருக்கிறேன். பின்னர் இந்தியானா ஜோன்ஸ் படத்துக்காக வந்திருக்கிறேன். ஆனால் எனது அடுத்த படத்தின் ஒரு பாதி முழுவதையும் இந்திய - பாக் எல்லையில், காஷ்மீரில் படமாக்க ஆசை. இதற்கான ஸ்க்ரிப்ட் கூட முடிவடைந்துவிட்டது. எனது ட்ரீம் வொர்க்ஸ் நிறுவனமும் ரிலையன்ஸும் இணைந்து இந்தப் படத்தை உருவாக்கவிருக்கின்றன," என்றார் ஸ்பீல்பெர்க்.
இந்தியாவில் யார் நடிப்பு பிடித்திருக்கிறது என்று கேட்டபோது, "அமிதாப் பச்சன்தான். மிகச் சிறந்த நடிகர். அவரது The Great Gatsby பார்த்து வியந்திருக்கிறேன்," என்றார்.
Post a Comment