இந்திய சினிமா வர்த்தகத்துக்கு புதிய கதவுகளைத் திறந்த வைத்த பெருமை சூப்பர் ஸ்டாரின் படங்களையே சேரும்.
சூப்பர் ஸ்டார் நடித்த முத்து ஜப்பானில் வெளியாகி பட்டையைக் கிளப்பியது நினைவிருக்கலாம். ஜப்பான் நாட்டுப் பாராளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கே, தனது உரையில் ரஜினியைக் குறிப்பிடும் அளவுக்கு முத்து புகழ்பெற்றது.
அங்கு ஏராளமான ரஜினி ரசிகர் மன்றங்கள் உள்ளன. முத்துவுக்குப் பின்னர் ரஜினியின் பாட்ஷா உள்ளிட்ட படங்களை மறு வெளியீடு செய்தனர் வெளிநாடுகளில்.
ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் ஒரே நேரத்தில் வெளியானது ரஜினியின் பாபாதான்.
அதன் பிறகு, வந்த சந்திரமுகி, அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், கொரியா மற்றும் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 30 நாடுகளில் வெளியாகி வசூல் சாதனை படைத்தது.
ஆனால் இதெல்லாம் ஒன்றுமே இல்லை எனும் அளவுக்கு வெளிநாடுகளில் பரபரப்பான வசூலைக் குவித்தது சிவாஜி - தி பாஸ். அந்த சாதனையை தொடர்ந்து வந்த எந்திரன் முறியடித்தது. சமீபத்தில் எந்திரன் படத்தை ஜப்பானில் மிக அதிக அளவு அரங்குகளில் வெளியிட்டனர். ஹாலிவுட் படங்களைவிட அதிக அரங்குகளில் வெளியிட்டு, ஒரு திருவிழா மாதிரி கொண்டாடினர்.
ரஜினியின் படங்கள் செய்த வசூல் சாதனை, மற்ற படங்களையும் வெளிநாட்டு மார்க்கெட்டுக்குக் கொண்டு செல்ல வைத்தது.
இந்தி, தமிழ், தெலுங்குப் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல லாபம் பார்த்தன.
இப்போது இந்தி நடிகர் சல்மான்கான், தனது படம் ஒன்றை ஜப்பானில் வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே வெளியாகி நல்ல வசூலைக் குவித்த அவரது ஏக்தா டைகர் படம்தான், நேற்று ஜப்பானில் வெளியாகியுள்ளது.
ரஜினி படங்களுக்குக் கிடைக்கும் வெற்றி தன் படங்களுக்கும் ஜப்பானில் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் சல்மான்கான்.
ரஜினி படங்களுக்குப் பிறகு ஜப்பானில் வெளியாகும் இந்தியப் படம் சல்மான்கானுடையதுதான்.
Post a Comment