ரிலீசாகி 40 ஆண்டுகள் கடந்த பிறகும், கொஞ்சம் சுமாரான பிரிண்டுடன் இருக்கும் ஒரு படத்தை இத்தனை உற்சாகத்தோடு பார்க்க முடியுமா? முடியும் என நிரூபித்தது வசந்த மாளிகை படம்.
இந்தப் படத்தை கொஞ்சம் அங்கே இங்கே பட்டி பார்த்து 'புதுப்பொலிவுடன்' என்ற தலைப்போடு மீண்டும் வெளியிடுகிறார்கள்.
1972-ல் வெளியான வெளியான இந்தப் படம், தெலுங்கில் வெளியான பிரேம் நகர் என்ற படத்தின் தமிழ் வடிவம்.
தமிழகத்தில் மதுரை நியூ சினிமா திரையரங்கில் 200 நாட்களும், சென்னை - சாந்தி திரையரங்கில் 175 நாட்களும், கிரௌன், புவனேஸ்வரி திரையரங்குகளிலும், திருச்சி - ராஜா திரையரங்கிலும் 140 நாட்களுக்கும் ஓடியது.
இலங்கையில் கேபிடல், வெலிங்டன் ஆகிய திரையரங்குகளில் முறையே 287 மற்றும் 208 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இலங்கையில் அதிக நாட்கள் ஓடிய படம் என்ற பெருமை இன்றுவரை வசந்த மாளிகைக்குத்தான்.
ஒரு படத்துக்கு ஒரே நாளில் பல ஊர்களில் விழா எடுப்பது என்ற புது ட்ரென்ட்டை உருவாக்கியதும் இந்த வசந்த மாளிகைதான்.
இப்படத்தின் 100வது நாள் விழா ஒரே நாளில் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய நான்கு ஊர்களில் 1973ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி கொண்டாடப்பட்டது.
காலை 10 மணிக்கு திருச்சியிலும், பகல் 3 மணிக்கு தஞ்சாவூரிலும், மாலை 7 மணிக்கு கும்பகோணத்திலும், இரவு 10 மணிக்கு மயிலாடுதுறையிலும் விழா நடந்தது.
இந்தப் படம் வரும் 8-ம் தேதி மீண்டும் தமிழகம் முழுவதும் திரையிடப்படுகிறது. அதனையொட்டி நேற்று செய்தியாளர்களுக்கு ஆர்கேவி அரங்கில் சிறப்புக் காட்சி போட்டுக் காட்டினார்கள்.
பலமுறை பார்த்த படம்தான் என்றாலும், ஏகப்பட்ட பேர் பார்க்க வந்திருந்தார்கள்.
வசந்த மாளிகை பிரிண்ட் சுமார் என்றாலும்... பார்த்த அனுபவம் நிஜமாகவே சூப்பராகத்தான் இருந்தது.
ஒவ்வொரு காட்சிக்கும் கைத்தட்டி, விசிலடித்து, குறிப்பாக வசனங்களுக்காக கைத்தட்டி ரசித்ததை இந்தப் படத்தில்தான் பார்க்க முடிந்தது.
கவியரசரோடு ஒப்பிட வேறு எவருக்கும் தகுதியில்லை என்பதை ஒவ்வொரு வரிகளும் மீண்டும் மீண்டும் உணர்த்திக் கொண்டே இருந்தன.
நடித்தவர்கள், இயக்குநர், தயாரிப்பாளர் என பெரும்பாலானோர் தெலுங்கு என்றாலும்... எத்தனை பிரமாதமாக தமிழை கவுரவப்படுத்தியிருக்கிறார்கள்!
படத்தில் டிஎம்எஸ் பாடியதாகவே தெரியவில்லை.. சிவாஜியே பாடுவதுபோலத்தான் உணர முடிந்தது. வசனங்களைப் பேசும் சிவாஜியின் குரல்தான், ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்... பாடல் வரிகளையும் பாடியது போல அத்தனை பர்பெக்ஷன்!!
Post a Comment