ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் உருவாகும் புதிய படம் திருமணம் எனும் நிக்காஹ். ஜெய் இதில் நாயகனாக நடிக்கிறார்.
'வல்லினம்', 'மரியான்', ‘பூலோகம்', 'ஐ' போன்ற வித்தியாசமான மற்றும் சுவாரஸ்யமான தலைப்புகள் கொண்ட பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வரும் ஆஸ்கார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட், அடுத்து தயாரிக்கும் இந்த 'திருமணம் எனும் நிக்காஹ்'வில் ஜெய்யுடன் ஜோடி சேருகிறார் நஸ்ரியா நஸீம்.
பொதுவாக ஆஸ்கர் ரவிச்சந்திரன் அதிகம் பேசாதவர். ஆனால் இந்தப் படத்தின் திரைக்கதையை சிலாகிக்கிறார் இப்படி:
நான் கேட்ட மிகச் சிறந்த கதைகளில் 'திருமணம் எனும் நிக்காஹ்' ஒன்று. சில கதைகள் சிரிக்க வைக்கும், சில கதைகள் சிந்திக்க வைக்கும். ஆனால் இந்த இரண்டு அம்சங்களையும் காதல் மற்றும் நல்ல இசையோடு சேர்ந்து கொடுத்தால் நிச்சயம் வெற்றி பெரும் என்பதில் சந்தேகம் இல்ல. புதுமுக இயக்குனர் அனீஸ் இயக்கும் 'திருமணம் எனும் நிக்காஹ்' இந்த ரகத்தை சேர்ந்தது," என்கிறார் ரவி.
படத்தின் கதாநாயகன் ஜெய் கூறுகையில், "'எங்கேயும் எப்போதும்' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு நான் கதைகளை மிகுந்த கவனத்துடன் தேர்வு செய்து கொண்டிருக்கிறேன்.
'திருமணம் எனும் நிக்காஹ்' எனது முன்னேற்றத்திற்கு மிக முக்கியம்மான படமாக கருதுகிறேன். இப்படத்தில் இன்னொரு புதுமுக கதாநாயகியும்,மற்றொரு கதாபாத்திரத்தில் மிக பிரபலமான நடிகரும் நடிக்க உள்ளனர். அவர்கள் யார் என்பதை கூடிய விரைவில் உங்களுக்கு அறிவிப்பார்கள்," என்றார்.
இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். படத்தின் பாடல்களை மதன் கார்கி, பார்வதி, தேன்மொழி தாஸ், காதல்மதி, மற்றும் கார்த்திக் நேத்தா எழுதுகிறார்கள்.
மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற உஸ்தாத் ஹோட்டல் படத்துக்கு ஒளிபதிவு செய்த லோகநாதன் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
மதன் கார்கியுடன் இணைந்து வசனம் இயற்றுவதோடு கதை, திரைக்கதை, இயக்கம் ஆகிய பொறுப்புகளை மேற்கொண்டுள்ளார் அனிஸ். இவர் நடிகர் மற்றும் இயக்குனருமான நாசரிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர்.
Post a Comment