சென்னை: வெளி மாநிலங்களில் மிரட்டப்படுவதால், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக சினிமா ஸ்டன்ட் நடிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி ஸ்டண்ட் இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் சங்க தலைவர் ‘பெப்சி' எஸ்.விஜயன், சென்னையில் இதுகுறித்து கூறியதாவது:
"உயிரை பணயம் வைத்து தொழில் செய்யும் நாங்கள் வெளி மாநிலங்களில் பணிபுரிய செல்லும்போது, அந்தந்த மாநில சங்கத்தினரால் துன்புறுத்தப்படுகிறோம். மிரட்டப்படுகிறோம். எங்களை தொழில் செய்ய விடாமல் தடுக்கிறார்கள். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதில் தலையிட்டு பிரச்சினைக்கு முடிவெடுக்க வேண்டிய ‘பெப்சி' தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது.
பிற மொழிகளில்...
பிறமொழி படங்களில் பணிபுரியும்போது, 70-30, 80-20 என்ற அடிப்படையில் பணி வாய்ப்புகளை வழங்குகிறார்கள். இதனால் எங்கள் சங்க உறுப்பினர்கள் வேலை வாய்ப்புகளை இழந்து வருகிறார்கள்.
தொடர்ந்து தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழ் படங்கள் உள்பட எந்த மொழி படங்களிலும் எங்கள் சங்க உறுப்பினர்கள் இன்று முதல் பணிபுரிய மாட்டார்கள். இந்த பிரச்சினையில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் எங்களுக்கு உதவியாக இருக்க வேண்டும்.
அமீர் விலக வேண்டும்
எங்கள் கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் புறக்கணித்து விட்ட பெப்சி தலைவர் அமீர், செயலாளர் ஜி.சிவா ஆகிய இருவரும் அந்த பொறுப்புகளில் இருந்து விலகும் வரை, பெப்சியில் இருந்து விலகியிருப்பது என்றும் முடிவு செய்து இருக்கிறோம்," என்றார்.
Post a Comment