நான்காவது நார்வே தமிழ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார் இயக்குநர் மணிவண்ணன்.
தமிழ் சினிமாவை கவுரவிக்கவென்றே ஆண்டுதோறும் நடக்கும் விழா, நார்வே தமிழ் திரைப்பட விழா.
உலகம் முழுவதும் தயாரான 15 தமிழ் திரைப்படங்களைத் தேர்வு செய்து, அதில் பணியாற்றிய கலைஞர்கள், தயாரித்த தயாரிப்பாளர்களைக் கவுரவிப்பது வழக்கம்.
இந்த ஆண்டு வரும் ஏப்ரல் 24 முதல் 28 வரை நார்வே தலைநகர் ஆஸ்லோ மற்றும் ஜெர்மனி தலைநகர் பெர்லினில் இந்த விழா நடக்கிறது.
லண்டனில் தமிழ் படத் திரையிடல் மட்டும் நடக்கிறது. இந்த விழாவுக்கு கும்கி, சுந்தரபாண்டியன், சாட்டை, நீர்ப்பறவை, வழக்கு எண் 18/9 உள்பட 15 படங்கள் தேர்வாகியுள்ளன.
இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக பொன்விழா காணும் இயக்குநர் - நடிகர் மணிவண்ணன் கலந்து கொள்கிறார். அவருடன் ஏராளமான முன்னணி நடிகர்கள், இயக்குநர்களும் பங்கேற்கின்றனர். கலைநிகழ்ச்சிகள், திரையுலக ஜாம்பவான்களின் அனுபவப் பகிர்தல், ரசிகர்களுடன் உரையாடுதல் என சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
இந்த விழாவில் கலந்து கொண்ட 50-க்கும் மேற்பட்ட குறும்படங்களிலிருந்து தேர்வான படங்களுக்கும் இந்த நிகழ்ச்சியில் விருது வழங்கப்பட உள்ளது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, மலேசியா உள்பட பல நாடுகளிலிருந்தும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருகின்றனர்.
இந்த விழாவில் 35-க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட உள்ளன. விழாவுக்கான ஏற்பாடுகளை விஎன் மியூசிக்ட்ரீம்ஸ் நிறுவனத்தின் சார்பில் வசீகரன் சிவலிங்கம் செய்து வருகிறார்.
Post a Comment