'ரஜினி சார் பாராட்டிட்டார்...' - மகிழ்ச்சியில் இனியா!

|

Iniya Is On Cloud Nine

சென்னையில் ஒரு நாள் படம் பார்த்து தன் நடிப்பை ரஜினி பாராட்டியதை பெரும் மகிழ்ச்சியுடன் சொல்லி வருகிறார் நடிகை இனியா.

ஆரம்பத்தில் ரொம்ப சுமாரான படங்களில் தலை காட்டி வந்த இனியாவுக்கு பெரிய பிரேக் கொடுத்தது வாகை சூட வா. அதன் பிறகு வந்த மௌனகுரு படமும் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

தொடர்ந்து பாரதிராஜா படத்தில் ஒப்பந்தமாகி, பின் நீக்கப்பட்டார். பெரிய அளவில் வருவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட இனியா, ஏமாற்றத்தையே தந்தார். சீனியர் நடிகர் ராம்கியுடன் நடிக்கும் நிலைக்குப் போய்விட்டார்.

இந்த நிலையில் ராதிகா சரத்குமார் தயாரித்த சென்னையில் ஒரு நாள் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

இந்தப் படத்தின் வெற்றி இனியாவுக்கு மீண்டும் பல வாய்ப்புகளை பெற்றுத் தந்துள்ளது.

இதுகுறித்து இனியா கூறுகையில், "சென்னையில் ஒரு நாள் படம் எனது சினிமா வாழ்க்கையில் முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது. நிறைய பேர் பாராட்டினார்கள். படம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. ரஜினி சார் இந்த படத்தை பார்த்து கைதட்டி பாராட்டினார். எனது நடிப்பும் நன்றாக இருந்ததாகச் சொன்னார். ரஜினி சார் பாராட்டியது விருது வாங்கியது போல் மிகவும் சந்தோஷமாக உள்ளது," என்றார்.

இனியா இப்போது மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

 

Post a Comment