சென்னை: நேற்று முன்தினம் பெங்களூருக்கு தனது புதிய பைக்கிலேயே பயணம் செய்த நடிகர் அஜீத், வழியில் தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
பெங்களூரில் ஓய்வெடுக்க நேற்று தனது பிஎம்டபுள்யூ டுகாட்டி பைக்கில் கிளம்பிய அஜீத், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், ஆத்தூர் வழியாக பெங்களூர் போனார்.
அப்போது ஆத்தூர் அருகே உள்ள காட்டுக்கோட்டை கிராமத்தில் ரோட்டோர உணவகம் ஒன்றைப் பார்த்ததும், தனது பைக்கை நிறுத்தினார்.
அவருடன் கார் மற்றும் பைக்கில் வந்த 8 நண்பர்கள் மற்றும் உதவியாளர்களும் அங்கேயே வாகனங்களை நிறுத்திவிட்டு, அஜீத்துடன் சாப்பிட அமர்ந்தனர்.
வந்திருப்பவர் நடிகர் அஜீத் என்பதை அவர் ஹெல்மட் கழட்டியதுமே தெரிந்து கொண்ட கடைக்காரருக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லையாம்.
அஜீத்துக்கு விருப்பமானதை கேட்டு பரிமாற ஆரம்பித்தபோது, விஷயம் தெரிந்து ரசிகர்கள் குழுமிவிட்டனர்.
அவர்களை உதவியாளர்கள் விலக்க முயன்றபோது, அஜீத் தடுத்துவிட்டாராம். ரசிகர்களைத் தன்னிடம் அழைத்து அவர்களை நலம் விசாரித்த அஜீத், ரசிகர்கள் விரும்பிய அளவுக்கு போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.
ரசிகர்களையும் தன்னோடு உணவு அருந்தும்படி கூறினார். ரசிகர்கள் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனார்கள்.
சிறிது நேரத்தில் நிருபர்கள், போட்டோ கிராபர்களும் திரண்டனர். அவர்களிடம் தான் பெங்களூருக்கு ஓய்வுக்காக ஜாலியாக பைக்கில் போவதாகவும், ஓய்வு நேரத்தில் பைக் ரேசில் பங்கேற்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தார்.
சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் வீரம் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.
Post a Comment