சிறு தயாரிப்பாளர்களுக்காக தனி சங்கம்: இயக்குநர் விக்ரமன் அழைப்பு... உடைகிறதா தயாரிப்பாளர் சங்கம்?

|

சென்னை: சிறு படத் தயாரிப்பாளர்களுக்கு இப்போது பாதுகாப்பற்ற நிலை... அவர்களின் படங்களை வெளியிடக்கூட முடியாத சூழ்நிலை உள்ளதால், சிறுமுதலீட்டுத் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு சங்கம் என்ற பெயரில் தனி சங்கம் அமைக்கப் போவதாக இயக்குநர் விக்ரமன் அறிவித்தார்.

அவரது இந்த அறிவிப்பு பரபரப்பைக் கிளப்பியுள்ளது. தயாரிப்பாளர் சங்கம் உடையுமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

மெய்யழகி என்ற படத்தின் ட்ரைலர வெளியீட்டு விழா இன்று ஏவிஎம் ஏசி அரங்கில் நடந்தது. பாலாஜி- ஜெய்குவேதனி நடித்துள்ள இந்தப் படத்தை ஆர்டி ஜெயவேல் இயக்கியுள்ளார்.

சிறு தயாரிப்பாளர்களுக்காக தனி சங்கம்: இயக்குநர் விக்ரமன் அழைப்பு... உடைகிறதா தயாரிப்பாளர் சங்கம்?

விழாவில் இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன், தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி, இயக்குநர் பேரரசு, நடிகைகள் தேவயானி, சோனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய விக்ரமன், "இப்போதெல்லாம் சிறிய படங்களுக்கு பாதுகாப்பே இல்லை. நானெல்லாம் ஒரு சின்ன பட்ஜெட் படத்தை எடுத்துவைத்துக் கொண்டு ரிலீஸ் பண்ண முடியாமல் தவிக்கிறேன்.

தொன்னூறுகளில் சின்ன பட்ஜெட் படங்களை வெளியிட தெளிவான நடைமுறையை தயாரிப்பாளர் சங்கம் வைத்திருந்தது. இப்போது அப்படி இல்லை. ஒரு கோடி ரூபாய்க்குப் படமெடுத்துவிட்டு, மேலே பப்ளிசிட்டிக்காக மட்டுமே ஒன்றரைக் கோடி ரூபாய் இருந்தால்தான் ரிலீஸ் பண்ண முடியும் என்ற நிலை.

விளம்பரத்துக்காக ஒன்றரைக் கோடி என்பது சரிதானா?

தொன்னூறுகளில் ஒரு முன்னணி பத்திரிகையுடன் பிரச்சினை வந்தது. எனவே விளம்பரங்களை அந்தப் பத்திரிகையைவிட சர்க்குலேஷனில் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் மிக்க இன்னொரு பத்திரிகைக்கு தரச் சொன்னார்கள். நாங்களும் தந்தோம். விளம்பரக் கட்டணம் குறைந்தது, படங்களையும் வெளியிட்டோம். இன்று அப்படியில்லை.

அப்படியானால் சின்ன பட்ஜெட்டில் படம் எடுப்பவர்கள் இங்கே இருக்கவே கூடாதா... இருக்கும் நிலையைப் பார்த்தால் நானே சிறுமுதலீட்டுத் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு சங்கம் என்ற பெயரில் புதிய சங்கத்தை ஆரம்பித்துவிடப் போகிறேன்," என்றார்.

உடனே விழாவின் பிஆர்ஓவான பிடி செல்வகுமார், விக்ரமனின் முடிவை வரவேற்றதோடு, விக்ரமன் இந்த சங்கத்தை ஆரம்பித்தால் தாமே நூறு தயாரிப்பாளர்களை அவர் பக்கம் அழைத்து வருவதாக மேடையில் அறிவித்தார்.

 

Post a Comment