நடிகன் தலையில கிரீடத்தை வைச்சு ஏத்திவிடாதீங்கப்பா.. அவனை அப்படியே விடுங்க- பாரதிராஜா

|

நடிகன் தலையில கிரீடத்தை வைச்சு ஏத்திவிடாதீங்கப்பா.. அவனை அப்படியே விடுங்க- பாரதிராஜா

சென்னை: நடிகன் தலையில் கிரீடத்தை வைத்து மீடியாக்கள் ஏற்றிவிடமால் இருந்தால் போதும். பத்திரிகைகள், கலைஞர்களை அப்படியே விட்டுவிடுவது நல்லது, என்றார் பாரதிராஜா.

பாண்டிய நாடு பத்திரிகையாளர் சந்திப்பின்போது, நடிகர் விஷாலிடம் பத்திரிகையாளர்கள் எழுப்பிய சில கேள்விகளின்போது இடைமறித்த பாரதிராஜா இப்படிக் கூறினார்.

தொடர்ந்து விஷாலின் காதலி மற்றும் திருமண விவகாரங்கள் குறித்தே சிலர் கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது குறுக்கிட்ட பாரதிராஜா, 'ஏன்யா.. அதான் இது பர்சனல் விஷயம்னு சொல்றானே (விஷால்), அப்புறம் எதுக்கு அதையே நோண்டிக்கிட்டு.. உன் பர்சனல் விஷயம் குறித்து நாங்க கேக்குறோமா... பிரஸ்மீட்ல இந்தப் படத்தோட கதை, நடிப்பு, பிஸினஸ், அடுத்த படம் குறித்து கேளுங்கய்யான்னா.. நீங்க திரும்பத் திரும்ப அவன் காதல், காதலி பத்தி கேட்டா எப்படி?" என்றார்.

அடுத்து, 'புரட்சித் தளபதி'ங்கற பேரை நீங்க துறந்தது இப்போ வசதியா இருக்குன்னு உணர்கிறீர்களா? என்று ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு விஷால் பதில் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, பாரதிராஜா இடைமறித்து, "அவன்தான் அந்தப் பட்டப் பெயரை வேண்டாம்னு தூக்கிப் போட்டுட்டு முழுசா தன்னை சினிமாவில் ஒப்படைச்சிக்கிட்டிருக்கான். ஏன் திரும்பத் திரும்ப அதைப் பத்தியே கேட்கறீங்க..

ஒருவன் ஒரு தப்பிலிருந்து திருந்து வந்தாலும், விடாம அந்தத் தவறைப் பற்றியே கேட்டுக்கிட்டிருந்தா எப்படி? அவனுடைய பாஸிடிவ் விஷயங்களைப் பேசுவதுதானே இப்போது நல்லது... பொதுவா இந்த நடிகர்களை ஏத்தி விடறதே பத்திரிகை மீடியாக்கள்தான்... சும்மா இருக்கிறவனை உசுப்பிவிடாம, கலைஞர்களை அவர்களாகவே இருக்க விடுங்கப்பா," என்று மேலும் ஏதோ சொல்ல முயன்றவர்.. 'வேணாம் விடுங்க.. இதுக்கு மேல பேச விரும்பல', என்றார்.

 

Post a Comment