ஐ படக் கதையை முதலில் சொன்னதே ரஜினிக்குத்தான்! - ஷங்கர் வெளியிட்ட ரகசியம்

ஐ படத்தின் கதையை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே ரஜினிகாந்திடம் சொன்னதாகவும், அவர் நடிக்க மறுத்ததால்தான் இப்போது விக்ரம் நடித்ததாகவும் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

ஐ படத்தின் இந்தி இசை வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் ஷங்கர், ஐ படம் உருவான விதம் பற்றிக் கூறுகையில், இந்தக் கதையை முதலில் உருவாக்கியது ரஜினிக்காகத்தான் என்றார்.

ஐ படக் கதையை முதலில் சொன்னதே ரஜினிக்குத்தான்! - ஷங்கர் வெளியிட்ட ரகசியம்

அவர் கூறுகையில், "பதினைந்து ஆண்டுகளுக்கு முன் இந்தக் கதையை உருவாக்கினேன். அப்போது முதலில் ரஜினிக்குத்தான் இந்தக் கதையைச் சொன்னேன். ஆனால் அவரால் அப்போது நடிக்கமுடியவில்லை.

15 ஆண்டுகள் கழித்து இப்போது விக்ரமை வைத்து இந்தக் கதையை எடுத்துள்ளேன்.

ஐ ட்ரைலர் ராம் கோபால் வர்மாவுக்கு பிடித்திருந்ததை அறிந்து மகிழ்கிறேன். ஆனால் அவரது ட்வீட் பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை," என்றார்.

தமிழகத்தில் ரஜினி, ஜெயலலிதாவை விட பலம் மிக்கவர் ஷங்கர்தான் என்று ராம் கோபால் வர்மா கருத்து தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

 

பிட்லி சே பாதேய்ன்.. ஷமிதாப் படத்தின் முதல் பாடல்... ரசிகர்கள் அமோக வரவேற்பு!

ஷமிதாப் படத்தில் இளையராஜா இசையில் அமிதாப் பச்சன் பாடிய பிட்லி சே பாதேய்ன் என்ற பாடல் இன்று வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

பேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில் இந்தப் பாடலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

வெகு அரிதாகத்தான் தன் சொந்தக் குரலில் பாடுவார் அமிதாப் பச்சன். முன்பு டான், கபி கபி, போல் பச்சன், கஹானி போன்ற படங்களில் சொந்தக் குரலில் பாடியுள்ளார்.

இப்போது முதல் முறையாக இளையராஜா இசையில் ஷமிதாப் படத்தில் பாடியுள்ளார். ஒரு பாத்ரூமில் அமர்ந்தபடி அமிதாப் பாடுவது போல இந்தப் பாடல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

பிட்லி சே பாதேய்ன்.. என்று தொடங்கும் அந்தப் பாடலில் இளையராஜாவின் மென்மையான இசையும், அமிதாப்பின் தனித்துவம் மிக்க குரலும் கேட்ட மாத்திரத்தில் யாரையும் வசப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

ஷமிதாப் படத்தை பால்கி இயக்கியுள்ளார். அமிதாப் பச்சன், தனுஷ், அக்ஷரா ஹாஸன் ஆகியோர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார்.

 

நூற்றுக்கும் அதிகமான நகரங்களில் இந்தி லிங்கா... வரவேற்பு எப்படி?

இந்தியில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ரஜினிகாந்தின் லிங்கா படம் எதிர்ப்பாராத வெற்றியைப் பெற்றுள்ளது.

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் இரு வேடங்களில் நடித்த லிங்கா படம் தமிழ், தெலுங்கில் கடந்த டிசம்பர் 12-ம் தேதி வெளியானது. இந்தப் படத்துக்கு வரலாறு காணாத ஒபனிங் வசூல் கிடைத்தது. மூன்று தினங்களில் ரூ 104 கோடியை வசூலித்த இந்தப் படம், இப்போது 20 நாட்கள் தாண்டிய நிலையில் ரூ 200 கோடியை நெருங்கிக் கொண்டுள்ளது.

இத்தனைக்கும் இந்தப் படம் குறித்து வந்த எதிர்மறைக் கருத்துக்களும் விமர்சனங்களும் கொஞ்சமல்ல. படம் ஓடிக் கொண்டிருக்கும்போதே பெரிய நஷ்டம் என்ற குற்றச்சாட்டுகளும் வெளியாகின.

நூற்றுக்கும் அதிகமான நகரங்களில் இந்தி லிங்கா... வரவேற்பு எப்படி?

கேரளாவில் எந்த மலையாளப் படமும் சரியாகப் போகாத நிலையில் லிங்கா இன்னமும் ஓடிக் கொண்டுள்ளது. ஆந்திராவில் ரூ 20 கோடிக்கும் மேல் இந்தப் படம் வசூலித்துள்ளது. கர்நாடகத்தில் ரூ 12 கோடி வசூலாகியுள்ளது.

இந்த நிலையில் லிங்காவின் இந்திப் பதிப்பு கடந்த வெள்ளிக்கிழமை வட மாநிலங்களில் வெளியானது.

தமிழ், தெலுங்கில் இத்தனை எதிர்மறை விமர்சனங்கள் இருந்ததால், படத்தை பெரிய அளவில் விளம்பரப்படுத்தாமல் வெளியிட்டனர். 700க்கும் அதிகமாக அரங்குகளில் இந்தி லிங்கா வெளியானது. மும்பையில் மட்டும் 65க்கும் அதிகமான அரங்குகளில் திரையிடப்பட்டது.

டெல்லியில் 40 அரங்குகளிலும், புனே மற்றும் சுற்றுப் புறப் பகுதிகளில் 30 அரங்குகளிலும் படம் வெளியானது.

இவை தவிர, லக்னோ, பாட்னா, சண்டிகர், குர்கான், அகமதாபாத், போபால், கொல்கத்தா, அமிர்தசரஸ், பரெய்லி, அஜ்மீர், ஜலந்தர், ஜெய்ப்பூர், தன்பாத், டேராடூன், காந்தி நகர், கோவா, ஹோஷியார்பூர், இந்தூர், ஜபல்பூர், கான்பூர், குல்லு, லாத்தூர், லூதியானாஸ மீரட், உஜ்ஜெயினி, லூதியானா, மொஹாலி, மதுரா, மாலேகான், நாக்பூர், ராய்பூர், சிலிகுரி, ஹால்தியா, வதோத்ரா, உதய்பூர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்களில் வெளியாகி, ஓடிக் கொண்டுள்ளது.

பிவிஆர் கைவசம் உள்ள 400-க்கும் மேற்பட்ட மால்களில் லிங்கா திரையிடப்பட்டுள்ளது.

முதல் வாரம் முடியவிருக்கும் நிலையில் அனைத்து அரங்குகளிலும் படம் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டுள்ளது. எதிர்ப்பார்ப்பு குறைவாக இருந்ததால், வட இந்தியாவில் இந்தப் படம் மக்களைத் திருப்திப்படுத்தியுள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

 

மூவி ஃபண்டிங் எனும் மூடுமந்திரம் - கடைசி பகுதி

-இயக்குநர் முத்துராமலிங்கன்

கட்டுரையின் கடைசி பகுதியை இரு தினங்கள் தாமதப்படுத்தியதற்கு முதலில் மன்னிப்பு கோருகிறேன்.

தாமதமானதற்கு நேற்று நடந்த மூவி ஃபண்டிங்' சக்சஸ் மீட்டும் ஒரு காரணம்.

கிரவுட் ஃப்ண்டிங்கில் உருவான கன்னட ‘லூசியா' படமும் அதன் இயக்குநரும் மிகவும் பிரபலம் என்பதால் அதுகுறித்து நான் பெரிதாக சொல்ல வேண்டியதில்லை.

அன்று இரவு பவன் குமார் அனுப்பியிருந்த மெஸேஜின் சாரம் இதுதான்.

மூவி ஃபண்டிங் வெற்றி...   சாத்தியமானது இப்படி!

‘நண்பர்களே உங்கள் மூவிஃபண்டிங் முயற்சி குறித்து கேள்விப்பட்டேன். வாழ்த்துக்கள். இத்திட்டத்திற்கு உதவ முன்வருபவர்கள் குறித்து கவனமாக இருங்கள். நிறுவனத்தை சட்டரீதியாக பதிவு செய்யத் தவறாதீர்கள்.

உடனே அவருக்கு நன்றியும், நாங்கள் நிறுவனத்தை சட்டரீதியாக, மூத்த வழக்கறிஞர்கள், ஆடிட்டர்களை ஆலோசித்து சட்டரீதியாக பதிவு செய்திருக்கும் விபரத்தையும் அனுப்பினேன்.

துவக்கத்தில் முதல் பதினைந்து நாட்கள் இத்திட்டம் கொஞ்சம் மந்தமாகவே இருந்தது. நடிக்கும் ஆசையில் பணம் கொடுத்து ஏமாந்து, அந்தப் படங்கள் ரீலீஸாகாமல் போன விரக்தியிலிருந்த பலபேரைச் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் அனைவருமே காதல் தோல்வியால் தாடி வளர்ப்பவர்கள் போல ஒரே மாதிரியாக காட்சி அளித்தார்கள்.

மூவி ஃபண்டிங் வெற்றி...   சாத்தியமானது இப்படி!

ஒரு நன்னாளில் பொற்கோ என்ற சாஃப்ட்வேர் எஞ்சினியர் நடிக்கும் ஆசையுடன் முன்வந்து, சுமார் நூறு கேள்விகள் கேட்டார். இருநூறு பதில்கள் சொல்லி அவரை கன்வின்ஸ் செய்து பத்து லட்சம் முதலீடு செய்ய வைத்தோம்.

மந்த நிலையை மந்தகாசம் ஆக்கும் சூட்சுமம் அந்தப் புள்ளியிலிருந்துதான் எங்களுக்குப் புரிய ஆரம்பித்தது. மூளையின் ஒரு ஓரத்தில் சின்னதாய் பல்ப் ஒன்று எரிய ஆரம்பித்த தருணம் அது.

இதுகுறித்து எல்லோருக்கும் கேட்பதற்கு நிறைய கேள்விகள் இருக்கிறது. அவர்கள் கேட்பதற்கு முன்பாகவே பதில்களை வழங்கினால் நாம் தேடும் பங்குதாரர்கள் வந்துவிடுவார்கள் என்று தோன்றியது.

மூவி ஃபண்டிங் வெற்றி...   சாத்தியமானது இப்படி!

அதன் முதல் கட்டமாக பொற்கோ இத்திட்டத்தில் இணைந்து கொண்டதை வெளிப்படையான செய்தியாக்கினோம். மூவி ஃபண்டிங் திட்டத்தின் ஒவ்வொரு நகர்வையும் பொதுவெளியில் சிறிதும் தயக்கமின்றி பகிர ஆரம்பித்தோம்.

முதலீடு செய்ய ஆரம்பித்தவர்களுக்கு படப்பிடிப்பின் ஒவ்வொரு நாள் செலவும், எங்கே படபிடிப்பு, எத்தனைபேர் இன்றைக்கு, என்னென்ன செலவுகள் என்று துவங்கி புரடக்‌ஷன் பையனின் பேட்டா செலவு உட்பட இவ்வாறே கணக்கு காட்டப்படும் என்பதை வெளிப்படையாக்கினோம்.

சினிமாவில் முதலீடு செய்ய வருபவர்களில் பெரும்பாலானோருக்கு ‘இங்கு ரிஸ்க் அதிகம் என்று தெரிந்தே வருகிறார்கள். பணம் வரலாம்... போகலாம்... ஆனால் நாம் ஏமாற்றப்படக் கூடாது. ஷூட்டிங்குக்கு என்று காசு கேட்டுவிட்டு அந்தக் காசில் டைரக்டர் சொகுசாய் கார் வாங்கிக்கொண்டு, நடிகையின் வீட்டில் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்துகொண்டு காலாட்டக் கூடாது என்ற எண்ணம் உள்ளவர்களே அதிகம்.

இப்படி அனைத்தையும் வெளிப்படையாக ஷேர் பண்ணத் துவங்கியவுடன் எங்கள் மேல் பலருக்கு நல்லெண்ணம் ஏற்பட்டது.

பெங்களூரிலிருந்து மோகன்குமார், ஈரோட்டிலிருந்து சூர்யா வடிவேல், ராமநாதபுரத்திலிருந்து குமாரராஜா, சென்னை ‘சவுண்ட் பார்ட்டி' ஸ்டுடியோ உரிமையாளர் சுதர்சன் லிங்கம் என்று வரிசையாக ஆர்வமாக முதலீடு செய்ய முன்வந்தார்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் ஜெய்லானியின் நண்பர் குழலி புருசோத்தமன், அனைத்து செலவுகளையும் தானே ஏற்றுக்கொண்டு, எங்கள் இருவரையும் சிங்கப்பூர் வரவழைத்து அங்குள்ள அஞ்சப்பர் ஓட்டல் ஒன்றில் ‘மூவி ஃபண்டிங்' தொடர்பான கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்தார். அங்கு தற்செயலாக வந்த ஜெய்லானியின் உறவினர்கள் சையது இப்ராஹிம் மற்றும் ராஜா ஆகியோர் இமாலய உதவிக்கு முன்வந்தனர். அடுத்த பட அறிவிப்பு சமயத்தில் உறுதியாக உதவுவார்கள் என்று நம்பக்கூடிய சில நட்புகளும் அங்கே கிடைத்தன.

பெரிய குட்டிக்கரணங்கள் அடிக்கவேண்டிய அவசியம் எதுவுமற்று, ஒருவழியாக திட்டமிட்டபடி இருபடங்களும் இலக்கை அடைய இரு மாதங்களாகின. நேற்று பிரசாத் லேப்பில் இந்த இருமாத பயணம் குறித்து பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துகொண்டோம்.

எங்கள் இரு படங்களுக்கு நிதி திரட்டல் சாத்தியமானது என்பது இந்த மூவி ஃபண்டிங் திட்டத்தின் வெற்றி என்று நாங்கள் கருதவில்லை. நல்ல கதையுடன் அலையும் திறமைசாலிகள், முதல் படம் நன்றாக இருந்தும் சரியான வெளியீடு கிடைக்காமல் தோற்றுப்போனவர்கள், படம் தயாரிக்க விரும்பி தவறான நபர்களிடம் மாட்டி ஏமாறுபவர்கள் போன்றவர்களுக்கு வழிகாட்டியாக கொஞ்சமாவது நாங்கள் இயங்க முடியுமா என்ற ஆதங்கத்துடன்தான் இறங்கியிருக்கிறோம்.

சதா சில ரகசியங்களை தன்னுள்ளே ஒளித்து வைத்தபடி, எப்போதும் ஒரு மூடுமந்திரமாகவே காட்சிதரும் சினிமாவின் இரும்புக் கதவை இன்னும் கொஞ்சம் பலமாக முட்டித் திறக்கும் ஒரு சிறுமுயற்சியே இது.

ஸ்ஸ்ஸ்... அப்பாடா ஒரு வழியா டைட்டிலை டச் பண்ணியாச்சி...!!

(முற்றும்)

 

2015-ல் சர்வதேச அளவில் வெளியாகிறது கோச்சடையான்.. தயாரிப்பாளர் அறிவிப்பு

ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படம் சர்வதேச மொழிகளில் 2015-ம் ஆண்டு வெளியிடப்படும் என தயாரிப்பாளர் முரளி மனோகர் அறிவித்துள்ளார்.

கோச்சடையான் படம் கடந்த மே மாதம் 23-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, போஜ்புரி மற்றும் பஞ்சாபி மொழிகளில் வெளியானது.

2015-ல் சர்வதேச அளவில் வெளியாகிறது கோச்சடையான்.. தயாரிப்பாளர் அறிவிப்பு

தமிழில் இந்தப் படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. தெலுங்கில் சுமாராகப் போனது. மற்ற மொழிகளில் இந்தப் படம் சரியாகப் போகவில்லை. வெளியீட்டுத் தேதிகளில் நடந்த குழப்பமே இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டது.

இந்த நிலையில் கோச்சடையானை ஆங்கிலத்தில் வெளியிடும் முயற்சிகள் நடந்து வருகின்றன. 2015-ம் ஆண்டில் இந்தப் படம் சர்வதேச அளவில் ஆங்கிலத்தில் 80க்கும் அதிகமான நாடுகளில் வெளியாகிறது. ஆங்கிலம் தவிர, ஜப்பானிய மற்றும் ப்ரெஞ்ச் மொழிகளிலும் இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

இதனை படத்தின் தயாரிப்பாளர்களான மீடியா ஒன் நிறுவனத்தின் அதிபர் முரளி மனோகர் நேற்று அறிவித்துள்ளார்.

 

கோச்சடையான் கடனுக்கும் லதா ரஜினிக்கும் சம்பந்தமில்லை! - தயாரிப்பாளர் முரளி மனோகர்

சென்னை: கோச்சடையான் கடனுக்கும் லதா ரஜினிக்கும் தொடர்பில்லை. அந்தக் கடனை நாங்களே திருப்பிச் செலுத்திவிடுவோம், என்று தயாரிப்பாளர் முரளி மனோகர் கூறினார்.

சமீப நாட்களாக 'கோச்சடையான்' சம்பந்தமாக வங்கி கடன் பிரச்சினை என்றும் லதா ரஜினிகாந்தைத் தொடர்பு படுத்தியும் ஊடகங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

கோச்சடையான் கடனுக்கும் லதா ரஜினிக்கும் சம்பந்தமில்லை! - தயாரிப்பாளர் முரளி மனோகர்

இந்நிலையில் மீடியா ஒன் குளோபல் எண்டர் டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் அந்நிறுவன இயக்குநர் டாக்டர் முரளி மனோகர் செய்தியாளர்களை இன்று சந்தித்தார்.

அவர் பேசும்போது, "நான் இங்கே சில உண்மைகளை பகிர்ந்து கொள்ளவே உங்களைச் சந்திக்க வந்துள்ளேன். உங்கள் முன் யதார்த்தத்தை சொல்லவே வந்துள்ளேன்.

குளோபல் எண்டர் டெய்ன்மெண்ட் நிறுவனம் ஒரு பொது நிறுவனம். இதுகடந்த பத்தாண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இது படத்தயாரிப்பு, பட விநியோகம், திரையீடு என பலவிதமான தளங்களிலும் இயங்கிவருகிறது.

படத் தயாரிப்பை எடுத்துக் கொண்டால் ஐஸ்வர்யா ராய், மிராண்டா ரிச்சர்ட்சன் நடித்து ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த "provoked" போன்ற சர்வதேச தரத்திலான படங்களையும் சர்வதேச சந்தைக்குச் கொண்டு சென்றிருக்கிறது. தமிழில்'ஜீன்ஸ்' 'மின்னலே' 'தாம் தூம்' போன்றவற்றைத் தயாரித்தோம்.

தமிழ் நாட்டைப் பொறுத்தவரை எங்களுக்கு சொந்தமானவை, குத்தகை என்று 30 திரையரங்குகள் உள்ளன. இந்த வரிசையில் மேலும் சில திரையரங்குகளைக் கொண்டுவர ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளன. இவை எல்லாவற்றையும் சமமாக்கி ஒரு சுதந்திரமான சங்கிலியாக்க முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன.

கோச்சடையான் கடனுக்கும் லதா ரஜினிக்கும் சம்பந்தமில்லை! - தயாரிப்பாளர் முரளி மனோகர்

நம் நாட்டு பிரபலங்களை உலக அளவில் கொண்டு செல்லும் முயற்சியாக 1988 லேயே 'ப்ளட் ஸ்டோன்' எடுத்தேன். அதே போல 'கோச்சடையான்' படத்தை சர்வதேச தரத்துடன் எடுக்க நினைத்தோம். இங்கென்றால் வியாபார லாபம் நஷ்டம் உடனே தெரிய வரும். நம் பிரபலங்களை உலக அளவில் கொண்டு சேர்ப்பதில் உள்ள சிக்கல் வியாபார லாபம் சற்று தாமதம் ஆகும்.

கோச்சடையான்' படத்தைப் பொறுத்தவரை அதை பல வெளிநாட்டு மொழிகளில் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. ஆங்கில மொழியாக்கம் தொடர்பான வேலைகள் இப்போதுதான் நடக்கின்றன.

கோச்சடையான் தொழில் நுட்பரீதியிலான ஒரு நல்ல முயற்சி. ஆனால் அப்போது நிதிப் பிரச்சினை ஏற்பட்டது.

மீடியா ஒன் குளோபல் எண்டர் டெய்ன்மெண்ட் நிறுவனம் எக்ஸிம் வங்கியில் 20 கோடி ரூபாய் சட்டத்திற்கு உட்பட்டுதான் கடன் வாங்கியது. இதை தனது சுயமான திருப்பிச் செலுத்தும் சக்தியுடன் வாங்கியது. அப்போது உத்தரவாதத்துக்காக திருமதி லதா ரஜினிகாந்த் எங்களுக்கு உதவ எங்களுடன் இணைந்தார்.

உண்மையில் இந்நிறுவனம் 31.3.2015 க்குள் அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த இருக்கிறது. இதை முடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் டிசம்பர் 2014ல் வங்கியுடன் சுமுகமாக முடிந்துள்ளன.

வங்கிக்கான வட்டியை ஜூன் 2014 வரை முறையாக தொடர்ச்சியாக செலுத்தியே வந்துள்ளோம்.

நிதிப் பிரச்சினை எல்லாருக்கும் வருவது சகஜம்தான். எங்களுக்கும் வந்தது. அதிலிருந்து மறு சீரமைப்பு செய்து வேறு வேறு வரவு ஆதாரங்கள் மூலம் மீளும் திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருமதி லதா ரஜினிகாந்த் அவர்கள் உத்திரவாதம் அளித்தவர் மட்டுமே. ஆனால்அவரை சம்பந்தப்படுத்தி செய்திகள் வருகின்றன.

எனவே உத்திரவாதம் அளித்த அவருக்கு தொந்தரவு தராதபடி நாங்களே கடனை அடைத்து விடுவோம். தவறான செய்திகளை நம்ப வேண்டாம்," என்றார்.

 

கப்பல் விமர்சனம்

Rating:
3.0/5
எஸ் ஷங்கர்

நடிகர்கள்: வைபவ், சோனம் பாஜ்வா, விடிவி கணேஷ்

இசை: நடராஜன் சங்கரன்

தயாரிப்பு: எஸ் பிக்சர்ஸ்

இயக்கம்: கார்த்திக் ஜி கிரீஷ்

லாஜிக் பார்க்கக்கூடாத சிரிப்புப் படங்களில் இன்னொரு வரவாக வந்திருக்கிறது கப்பல்.

கப்பல் விமர்சனம்

நல்ல நட்பை காதலும் கல்யாணமும் பிரித்துவிடும் என நினைத்து பள்ளி நாட்களிலேயே பெண்களை வெறுக்கிறார்கள் வைபவும் அவர் நண்பர்கள் நால்வரும். வாழ்க்கையில் திருமணமே செய்து கொள்ளக் கூடாது என சத்தியம் செய்கிறார்கள்.

ஆனால் வளர்ந்து பெரியவர்களான பிறகு, வைபவுக்கு காதல் வருகிறது. சோனம் பாஜ்வாவை விழுந்து விழுந்து காதலிக்கிறார். ஆனால் நண்பர்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக மறைக்கிறார். இதைத் தெரிந்து கொள்ளும் நண்பர்கள் வைபவ் - சோனம் காதலைப் பிரிக்க முயற்சிக்கிறார்கள்.

கப்பல் விமர்சனம்

காதலர்கள் பிரிந்தார்களா... இணைந்தார்களா என்பது மீதிக் கதை.

பார்வையாளர்களை முதல் காட்சியிலிருந்து சிரிக்க வைக்க வேண்டும் என இயக்குநர் மெனக்கெட்டிருக்கிறார். இதில் சில காட்சிகள் அமெச்சூர்த்தனமாக இருந்தாலும், படம் முழுக்க நான் ஸ்டாப் சிரிப்பு வருவதென்னமோ உண்மைதான்.

குடிக்கும் காட்சிகளில் ஆண்களை மட்டும்தான் காட்ட வேண்டுமா... பெண்கள், அதுவும் இளம் பெண்கள் சர்வசாதாரணமாக சரக்கடிப்பது போல காட்சி வைத்திருக்கிறார் இயக்குநர். இது காமெடியாக எடுத்துக் கொள்ள முடியாது. இந்த மாதிரி கதைகளில், குடிக்கிற காட்சிகளுக்கு என்ன அவசியமிருக்கிறது என்றும் புரியவில்லை.

கப்பல் விமர்சனம்

வைபவுக்கு இது முக்கியமான படம். ஒரு நகைச்சுவைப் படத்தில் ஹீரோ பளிச்சென்று தெரிவது அத்தனை சாதாரண விஷயமல்ல. வைபவுக்கு நல்ல நடிப்பும் வருகிறது, நகைச்சுவையும் வருகிறது. விடிவி கணேஷை அவர் மாடியிலிருந்து தள்ளிவிட முயலும் காட்சியிலும், பஞ்ச பாண்டவ நண்பர்களிடம் சிக்கிக் கொண்டு அவர் திணறும்போதும் முக பாவங்கள் வெகு இயல்பு.

விடிவி கணேஷ் இந்தப் படத்தின் இன்னொரு ப்ளஸ். அவர் வரும்போதெல்லாம் மக்கள் இயல்பாகவே சிரிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.

கப்பல் விமர்சனம்

நண்பர்களாக வரும் கருணாகரன், அர்ஜூனன், வெங்கட் சுந்தர், கார்த்திக் என நால்வருமே இயல்பான நகைச்சுவையை வழங்கியிருக்கிறார்கள்.

ஆனாலும் வைபவை வெறுப்பேற்றும் காட்சிகளும், அவரிடமிருந்து சோனம் பாஜ்வாவைப் பிரிக்க போடும் திட்டங்களும் கொஞ்சம் ஓவர்தான்.

நாயகி சோனம் பாஜ்வா கவர்ச்சியில் ஏக தாராளம் காட்டுகிறார். சில காட்சிகளில் நடிக்கவும் செய்கிறார். தமிழ் சினிமாவில் நாயகியாக நிலைக்க இது போதாதா என்ன!

கப்பல் விமர்சனம்

இளையராஜாவுக்கு நன்றி சொல்லிவிட்டு, அவரது கரகாட்டக்காரனில் இடம் பெற்ற ஊருவிட்டு ஊரு வந்து பாடலை அப்படியே பயன்படுத்தியிருக்கிறார்கள். கேட்க சுகமாக இருந்தது. காட்சிக்கும் அத்தனைப் பொருத்தமாக அமைந்த பாட்டு அது. ஒளிப்பதிவும் இசையும் சராசரி ரகம்தான்.

ஷங்கரின் சீடர் என்றாலும் பிரமாண்டத்தை செட்டுகளிலும் லொகேஷன்களிலும் காட்டாமல், நகைச்சுவையில் காட்டியதற்காக இயக்குநர் கார்த்திக் ஜி கிரீஷைப் பாராட்டலாம்.

 

டிவிக்கு வந்த இனியா - அருண் விஜய்

பெரிய திரையில் வாகை சூடவா, மவுன குரு படங்களுக்குப் பிறகு பெரிய ஹீரோயினாக வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட இனியா, குறுகிய காலத்திலேயே வில்லியாகி இப்போது டிவிக்கும் வந்துவிட்டார். கூடவே நடிகர் அருண் விஜய்யும்.

இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக, ஒரே உருவத்தில் இருக்கும் இரட்டையர்கள் மட்டுமே பங்குபெறும் ரியாலிட்டி ஷோவான இருவர் என்ற நிகழ்ச்சியின் நடுவர்களாக இந்த இருவரும் பங்கேற்கின்றனர்.

டிவிக்கு வந்த இனியா - அருண் விஜய்

ஜெகன், மைதிலி இருவரும் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், இரட்டையர்களிடம் இருக்கும் நடனத் திறமை, பாடும் திறன், நகைச்சுவை போன்றவற்றை வெளிப்படுத்தும் வகையில் சுவாரசியமான போட்டிகள் நடத்தப்படுகின்றன. அத்துடன், பொது அறிவு கேள்விகளும் கேட்கப்படுகின்றன.

டிவிக்கு வந்த இனியா - அருண் விஜய்

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு வேந்தர் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதன் மறுஒளிபரப்பை ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு காணலாம்.

 

கே பாலச்சந்தர் வீட்டுக்குப் போய் துக்கம் விசாரித்த கமல் ஹாஸன்!

சென்னை: தன் குருநாதர் கே பாலச்சந்தர் வீட்டுக்குப் போய், அவரது இறப்புக்கு துக்கம் விசாரித்தார் நடிகர் கமல் ஹாஸன்.

ரஜினிகாந்த் - கமல் ஹாஸன் ஆகிய இரு பெரும் சிகரங்களை உருவாக்கிய, தமிழ் சினிமாவின் சாதனை இயக்குநர் பாலச்சந்தர் கடந்த டிசம்பர் 23-ம் தேதி சென்னையில் காலமானார்.

கே பாலச்சந்தர் வீட்டுக்குப் போய் துக்கம் விசாரித்த கமல் ஹாஸன்!

அவரது மறைவின்போது கமல் ஹாஸன் சென்னையில் இல்லை. உத்தம வில்லன் பட வேலைகளுக்காக அமெரிக்காவின் லாஜ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றிருந்தார். பாலச்சந்தர் உடலை எரியூட்டுவதற்கு முன் அவரால் நாடு திரும்ப முடியவில்லை.

கே பாலச்சந்தர் வீட்டுக்குப் போய் துக்கம் விசாரித்த கமல் ஹாஸன்!

நேற்று இரவுதான் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பினார் கமல்.

இன்று காலை மயிலாப்பூரில் உள்ள பாலச்சந்தர் வீட்டுக்குச் சென்றார். அங்கு பாலச்சந்தர் குடும்பத்தினரிடம் துக்கம் விசாரித்தார். அவர் உருவப் படத்துக்கு மலர் அஞ்சலியும் செலுத்தினார்.

 

லஸ் கார்னரில் கே.பி.க்கு சிலை வைக்க வேண்டும்: இயக்குநர் சங்கம் கோரிக்கை

சென்னை: மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தருக்கு லஸ் கார்னரில் சிலை வைக்க வேண்டும் என அரசுக்கு தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

உடல்நலக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் கடந்தவாரம் காலமானார்.

இந்நிலையில், தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கம் சார்பில் அவரது உருவப்பட திறப்பு நிகழ்ச்சி வடபழனி ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் இன்று காலை நடந்தது. இயக்குநர் பாரதிராஜா பாலச்சந்தரின் உருவ படத்தை திறந்து வைத்தார்.

லஸ் கார்னரில் கே.பி.க்கு சிலை வைக்க வேண்டும்: இயக்குநர் சங்கம் கோரிக்கை

அதனைத் தொடர்ந்து இயக்குனர் சங்கத்தின் தீர்மானங்களை ஆர்.கே.செல்வமணி வாசித்தார். அதன் விபரமாவது:-

- வளசரவாக்கத்தில் உள்ள இயக்குனர் சங்க அலுவலகத்துக்கு டைரக்டர் பாலச்சந்தர் பெயர் சூட்டப்படும் பாலச்சந்தர் திரைப்பட விழா சென்னையில் ஒரு வாரம் கொண்டாடப்படும்.

- பாலச்சந்தர் இயக்கிய முக்கிய படங்களை தேர்வு செய்து ஒரு வாரம் சென்னை தியேட்டர்களில் திரையிடப்படும்.

- மயிலாப்பூர் லஸ் கார்னரில் பாலச்சந்தருக்கு சிலை நிறுவவும் அவர் வாழ்ந்த வீட்டின் அருகில் உள்ள தெருவுக்கு பாலச்சந்தர் பெயர் சூட்டவும் அரசை கேட்டுக் கொள்கிறோம்.

- பிப்ரவரி முதல் வாரம் சென்னையில் பாலச்சந்தர் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெறும் இதில் பாலச்சந்தர் அறிமுகப்படுத்திய நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்பர்.

- பாலச்சந்தர் பெயரில் அரசு விருது வழங்க வேண்டும்.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் இயக்குனர்கள் விக்ரமன், எஸ்.ஏ.சந்திரசேகர், வி.சேகர், ஆர்.கண்ணன், எஸ்.பி.முத்துராமன், பேரரசு, பார்த்திபன், ரவி மரியா, மனோபாலா, வசந்த், ஆர்.வி. உதயகுமார், ஆர்.சுந்தரராஜன், தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, டி.சிவா புஷ்பா கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

‘படம் பார்க்க போலாமா’.... டூரிங் டாக்கிஸ் மூலம் பாடகரானார் நடிகர் ஜீவா!

சென்னை: எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி வரும் டூரிங் டாக்கிஸ் படத்தில் ஒரு பாடலைப் பாடியதன் மூலம் தமிழ் சினிமாவில் பாடகராகவும் அவதாரம் எடுத்துள்ளார் நடிகர் ஜீவா.

நடிகர் விஜய்யும், ஜீவாவும் நல்ல நண்பர்கள். இவர்கள் இருவரும் நண்பன் படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து ஜீவாவின் அப்பா ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் ஜில்லா படத்தில் நடித்திருந்தார் விஜய். தற்போது, விஜயின் அப்பா இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி வரும் டூரிங் டாக்கிஸ் என்ற படத்தில் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார் ஜீவா.

‘படம் பார்க்க போலாமா’.... டூரிங் டாக்கிஸ் மூலம் பாடகரானார் நடிகர் ஜீவா!

முற்றிலும் புதுமுகங்களே நடிக்க தயாராகி வருகிறது டூரிங் டாக்கிஸ் படம். விறுவிறுப்பாக தயாராகி வரும் இப்படத்திற்கு இசை இளையராஜா. இப்படத்தில் ஜீவா பாடல் ஒன்றைப் பாடியிருப்பதன் மூலம், டூரிங் டாக்கிஸ் மீதான எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.

ஜீவா பாடிய பாடல் ‘படம் பார்க்க போலாமா' என ஆரம்பிக்கிறதாம். இது படத்தின் அறிமுகப் பாடலாக வருவதாக ஜீவா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஜீவா நடிப்பில் கடைசியாக வெளிவந்த யான் படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியைத் தேடித் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நீண்டநாள் தயாரிப்பில் இருந்த இந்த படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்க, ஜீவாவுக்கு ஜோடியாக நடிகை ராதாவின் இளைய மகள் துளசி நாயர் நடித்திருந்தார்.

 

பொங்கலுக்கு எந்தப் படம் வந்தாலும் கவலையில்லை.. எவனா இருந்தாலும் வெட்டுவேன் - விஷால்

பொங்கலுக்கு எத்தனை பெரிய படம் வந்தாலும் கவலையில்லை. எவனா இருந்தாலும் வெட்டுவேன் என விஷால் கூறியதாக நடிகர் ஆர்யா தெரிவித்தார்.

ஆம்பள படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ஆர்யா பேசுகையில், "விஷாலிடம் என்ன மச்சான் படம் எப்போ வெளியாகிறது என்றேன்.

பொங்கலுக்கு எந்தப் படம் வந்தாலும் கவலையில்லை.. எவனா இருந்தாலும் வெட்டுவேன் - விஷால்

பொங்கலுக்கு என்றார்.

பொங்கலுக்கு என்றால் பெரிய படங்கள் வருமேப்பா என்றேன். அதப்பத்தி எனக்கு கவலையில்ல... எவனா இருந்தாலும் வெட்டுவேன் என்றார். விஷாலின் அந்த நம்பிக்கை எனக்குப் பிடித்தது,'' என்றார்.

பொங்கலுக்கு எந்தப் படம் வந்தாலும் கவலையில்லை.. எவனா இருந்தாலும் வெட்டுவேன் - விஷால்

'ஆம்பள' இயக்குநர் சுந்தர்.சி பேசும்போது, " இது ஒரு பேமிலி எண்டர்டெய்னர். படமே திருவிழா போன்ற உணர்வு தரும். நான் வேகமாக ஓடுபவன். என்னையே விரட்டி விரட்டி வேலை வாங்கியவர் விஷால்,'' என்றார்.

 

தமிழ் சினிமாவில் இப்போது நிறைய 'ஃபாரின் குழந்தைகள்'..- இயக்குநர் வீ சேகர் கமென்ட்

தமிழ் சினிமாவில் நிறைய படங்கள் வெளிநாட்டுப் படங்களின் காப்பியாக இருப்பதைக் குறிக்கும் வகையில், 'தமிழ் சினிமாவில் இப்போது நிறைய ஃபாரீன் குழந்தைகளைப் பார்க்கிறேன்," என சீனியர் இயக்குநர் வீ சேகர் கமெண்ட் அடித்தார்.

சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள கங்காரு படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் வி.சேகர், "நிச்சயம் இது நல்ல படமாகத் தெரிகிறது. நம்பிக்கை அளிக்கிறது.

தமிழ் சினிமாவில் இப்போது நிறைய 'ஃபாரின் குழந்தைகள்'..- இயக்குநர் வீ சேகர் கமென்ட்

இப்போதைய படங்களைப் பார்க்கும் போது டெக்னிக்கலாக வளர்ந்திருப்பது தெரிகிறது. வெளிநாட்டிலிருந்து எவ்வளவோ டெக்னிக்கலாகப் பெறலாம். ஆனால் திரைக்கதை, கருத்து கலாச்சாரம் நமதாக இருக்க வேண்டும். பண்பாட்டை நம்மிடமிருந்துதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

குழந்தைக்கு சட்டை வெளிநாட்டில் எடுக்கலாம். ஆனால் குழந்தை நமதாக இருக்க வேண்டும். சட்டை பாரின்ல எடுக்கலாம்... குழந்தையே பாரின்ல வாங்க முடியுமா? சினிமாவும் அப்படித்தான். சினிமாவில் இப்போது நிறைய ஃபாரின் குழந்தைகளை அப்படிப் பார்க்கிறேன்.

போக்குவரத்தில் சிறிய பெரிய வாகனங்கள் ஒரே நேரத்தில் போனால் வாகன நெரிசலில் டிராபிக் ஜாம்தான் ஏற்படும். அதைக் கட்டுப்படுத்த டிராபிக் சிக்னல், டிராபிக் போலீஸ் இருப்பதைப் போல ஒரே நேரத்தில் பல படங்கள் வருவதைக் கட்டுப் படுத்த தயாரிப்பளர் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.

 

அஜீத்துக்கு புத்தாண்டு அன்று சர்பிரைஸ் கொடுக்கும் ரசிகர்கள்

சென்னை: அஜீத் ரசிகர்கள் புத்தாண்டு அன்று தங்கள் 'தல'க்கு சர்பிரைஸ் கொடுக்க திட்டமிட்டுள்ளனர்.

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் முதன்முறையாக நடித்துள்ள என்னை அறிந்தால் படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் நாளை மறுநாள் நள்ளிரவில் எளிமையான முறையில் வெளியிடப்படுகிறது. இது தல ரசிகர்களுக்கு அளிக்கப்படும் புத்தாண்டு பரிசாகும். அந்த பரிசை ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

புத்தாண்டு அன்று அஜீத்தை அசத்தப் போகும் ரசிகர்கள்

இந்நிலையில் ரசிகர்கள் அஜீத்துக்கு புத்தாண்டு அன்று சர்பிரைஸ் கொடுக்க திட்டமிட்டுள்ளனர். அதாவது புத்தாண்டு அன்று சென்னையில் உள்ள ரிட்சி தெருவில் என்னை அறிந்தால் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் அஜீத் ரசிகர்கள் ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள்.

நிகழ்ச்சியில் பட்டாசு வெடித்து, கேக் வெட்டி கொண்டாட உள்ளனர். மேலும் இதே போன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிகழ்ச்சிகள் நடத்தி அசத்த ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர்.

பொங்கலுக்கு ரிலீஸாகும் என்னை அறிந்தால் படத்தின் டீஸரே யூடியூப்பில் புதிய சாதனை படைத்தது. இந்நிலையில் தான் ட்ரெய்லர் புத்தாண்டு ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவருக்கு மட்டும் எப்படி?: நம்பர் நடிகையை பார்த்து வயிறு எரியும் நடிகைகள்

சென்னை: நம்பர் நடிகைக்கு மட்டும் அவர் கேட்கும் சம்பளத்தை தயாரிப்பாளர்கள் மறுபேச்சு பேசாமல் கொடுப்பதால் சில முன்னணி நடிகைகள் கடுப்பாகி உள்ளார்களாம்.

ரப்பர் பாடி இயக்குனருடன் காதல் முறிந்த பிறகு மீண்டும் நடிக்க வந்த நம்பர் நடிகை விட்ட இடத்தை பிடிக்க மாட்டார் என்று பலர் நினைத்தனர். ஆனால் அவர் விட்ட இடத்தை பிடித்ததுடன் இளம் ஹீரோக்கள், தயாரிப்பாளர்களின் பிரிய நடிகையாக உள்ளார்.

இவருக்கு மட்டும் எப்படி?: நம்பர் நடிகையை பார்த்து வயிறு எரியும் நடிகைகள்

அம்மணி தற்போது ரூ.1.5 கோடி சம்பளம் வாங்குகிறார். அவர் தற்போது நடித்து வரும் படங்களில் ஒன்று இரண்டு ஹிட்டானால் சம்பளத்தை ரூ.2 கோடியாக்க திட்டமிட்டுள்ளாராம்.

மேலும் நம்பர் நடிகை சம்பளம் கேட்டால் மட்டும் தயாரிப்பாளர்கள் பேரம் பேசாமல் கொடுக்கிறார்களாம். இது முட்டை கண்ணழகி நடிகை, சமத்து மற்றும் செவத்த பொண்ணு ஆகிய நடிகைகளை கடுப்பாக்கியுள்ளதாம்.

நாம் கோடிகளில் கேட்டால் மட்டும் முக்கி முணங்குகிறார்கள், ஆனால் நம்பர் நடிகை கேட்டால் மட்டும் சிரித்த முகத்துடன் கொடுக்கிறார்களே, அதற்கு என்ன காரணம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என நடிகைகள் ரூம் போட்டு யோசிக்கிறார்களாம்.

 

சாஹசம் படத்தின் நட்சத்திர பாடகர்கள் பட்டியலில் சிம்பு

பிரபலங்களை பின்னணி பாட வைத்தே தனி சாதனைப் படைத்து விடுவார்கள் போலிருக்கிறது பிரசாந்தும் அவர் தந்தை தியாகராஜனும்.

சாஹஸம் படத்துக்காக பின்னணி பாடியவர்கள் பற்றி அவர்கள் வெளியிடும் தகவல்கள் அப்படி.

பிரசாந்த் தற்போது ‘சாஹசம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அருண் ராஜ் வர்மா இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு டெல்லி, மும்பை, சென்னை ஆகிய நகரங்களில் விறுவிறுப்பாக நடந்துள்ளது. ஸ்டார் மூவிஸ் சார்பில் தியாகராஜன் இப்படத்தை தயாரிக்கிறார்.

சாஹசம் படத்தின் நட்சத்திர பாடகர்கள் பட்டியலில் சிம்பு

தமன் இசையில் 5 பாடல்கள் இப்படத்தில் இடம் பெறுகிறது. இதில் ‘தேசி தேசி தேசி கேர்ள்...' எனத் தொடங்கும் பாடலை சிம்பு பாடியுள்ளார். ஒரு மாத காலமாக லண்டனில் இருந்த சிம்பு சென்னை விமான நிலையத்தில் இறங்கியதும் நேராக இசையமைப்பாளர் தமன் ஸ்டுடியோவுக்கு வந்து இப்பாடலை பாடியுள்ளார்.

ஏற்கனவே பிரசாந்த் நடிப்பில் வெளியான மம்பட்டியான் படத்திற்கும் சிம்பு பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இப்படத்தில் லட்சுமி மேனன், அனிருத், சங்கர் மகாதேவன், ஸ்ரேயா கோஷல், மோஹித் சவுஹான், ஹனிசிங், அர்ஜித் சிங், ஆன்ட்ரியா ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.

சிம்பு பாடியதோடு சாஹசம் படத்தின் அனைத்து பாடல்களின் பதிவும் முடிந்துவிட்டது. இதன் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.

சாஹசம் படத்தில் பாடியுள்ள அனிருத், சிம்பு, மோஹித் சவுஹான், ஸ்ரேயா கோஷல், லஷ்மி மேனன், ஆண்ட்ரியா ஆகியோர் மேடையில் தோன்றி சாஹசம் படத்தின் பாடல்களை நேரில் பாடவுள்ளார்கள்.

 

'குழந்தைசாமி'யை கிண்டலடிக்கும் 'தி இன்டர்வியூ'... ஆன்லைன் ரிலீஸ் மூலமாக 15 மில்லியன் டாலர் வசூல்!

தி இன்டர்வியூ திரைப்படம் ஆன்லைனில் வெளியாகி, 15 மில்லியன் டாலர்களை ஈட்டியுள்ளது.

இதன் மூலம் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தில் மிகப் பெரிய வசூல் குவித்த படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

வட கொரிய அதிபரை கிண்டலடித்து எடுக்கப்பட்ட படம் தி இன்டர்வியூ. இந்தப் படத்தை திரையரங்குகளில் வெளியிட அமெரிக்காவின் முன்னணி திரையரங்குகள் தயக்கம் காட்டின.

'குழந்தைசாமி'யை கிண்டலடிக்கும் 'தி இன்டர்வியூ'... ஆன்லைன் ரிலீஸ் மூலமாக 15 மில்லியன் டாலர் வசூல்!

இதனால் படத்தின் பிரிமியர் காட்சிகளை ரத்து செய்த சோனி நிறுவனம், படத்தை ஆன்லைனில் வெளியிடப் போவதாக அறிவித்து, அதை செயல்படுத்தவும் செய்தது. கடந்த வெள்ளியன்று ஆன்லைனில் வெளியான தி இன்டர்வியூ.

27-ம் தேதி சனிக்கிழமை மட்டுமே இந்தப் படத்தை 2 மில்லியன் முறை ஆன்லைனில் வாங்கிப் பார்த்துள்ளனர் பார்வையாளர்கள்.

'குழந்தைசாமி'யை கிண்டலடிக்கும் 'தி இன்டர்வியூ'... ஆன்லைன் ரிலீஸ் மூலமாக 15 மில்லியன் டாலர் வசூல்!

ஆன்லைனில் வெளியிட்ட பிறகு படத்தை நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளும் திரையிட்டன.

இதன் மூலம் இந்தப் படத்துக்கு 15 மில்லியன் டாலர் வருவாய் கிடைத்துள்ளது. ஆன்லைனில் அதிக வருமானம் ஈட்டிய படம் என்ற பெருமையும் தி இன்டர்வியூவுக்கு கிடைத்துள்ளது.

தியேட்டர்களிலும் படத்தைக் காண நல்ல கூட்டம் வருவதால், ஹேக்கர்களால் பெரும் பாதிப்புக்குள்ளான சோனி நிறுவனம் ஆறுதலடைந்துள்ளது.

 

8 நாட்களில் ரூ 198 கோடி குவித்த பீகே.. புதிய வசூல் சாதனை

ஆமீர் கான் நடித்த பீகே படம் வசூலில் புதிய சாதனைப் படைத்துள்ளது. வெளியான எட்டு தினங்களில் ரூ 198 கோடியைக் குவித்து, முந்தைய 3 இடியட்ஸ், தூம் 3 படங்களின் சாதனைகளை முறியடித்துள்ளது.

கடந்த டிசம்பர் 19-ம் தேதி உலகெங்கும் 4000 அரங்குகளில் வெளியானது பீகே. முதல் நாளில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், வசூலில் சாதனை எதுவும் நிகழவில்லை. ஆனால் மூன்றாம் நாளில் ரூ 38 கோடியைக் குவித்தது. நான்காம் நாள் இந்தப் படம் ரூ 100 வசூல் பட பட்டியலில் இணைந்தது.

8 நாட்களில் ரூ 198 கோடி குவித்த பீகே.. புதிய வசூல் சாதனை

வெளியான எட்டாவது நாளில் மொத்தம் ரூ 198 கோடியைக் குவித்து முந்தைய ஆமீர்கான் படங்களின் சாதனைகளை முறியடித்துள்ளது.

படம் குறித்து வாய் வழியாகப் பரவும் சாதகமான தகவல்கள் காரணமாக, இரண்டாவது வாரமும் படத்தை மீண்டும் பார்க்க மக்கள் வர ஆரம்பித்துள்ளனர். இதனால் இந்தப் படம் 3 இடியட்ஸ், எந்திரன், ஹேப்பி நியூ இயர் போன்ற படங்களின் மொத்த வசூல் சாதனைகளை சீக்கிரமே மிஞ்சும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

முதல் முறையாக தனுஷுக்கு ஜோடியாகும் சமந்தா, எமி ஜாக்சன்!

முதல் முறையாக தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்கள் சமந்தாவும் எமி ஜாக்சனும். வேலையில்லா பட்டதாரி படத்தை இயக்கிய வேல்ராஜ்தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார்.

வேலையில்லா பட்டதாரி படத்தின் வெற்றிக் கூட்டணியான வேல்ராஜ், தனுஷ், அனிருத் மீண்டும் இணைகிறார்கள்.

முதல் முறையாக தனுஷுக்கு ஜோடியாகும் சமந்தா, எமி ஜாக்சன்!

இதில் தனுஷுக்கு ஜோடியாக எமி ஜாக்,ன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. தற்போது இப்படத்தில் சமந்தாவும் நடிக்க இருப்பதாக தனுஷே அறிவித்துள்ளார்.

தனுஷுடன் சமந்தா, எமி ஜாக்சன் நடிப்பது இதுவே முதல் முறை. இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. படப்பிடிப்பு 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்குகிறது.

பாலாஜி மோகன் இயக்கிவரும் ‘மாரி' படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்தியில் பால்கி இயக்கத்தில் ஷமிதாப் படத்தில் நடித்து வருகிறார். இரு படங்களுமே முடியும் கட்டத்தில் உள்ளன.

 

மீண்டும் நடிக்க ஆரம்பித்தார் ஸ்வேதா பாசு.. இந்திப் படத்தில் குத்தாட்டம்!

விபச்சார வழக்கில் சிக்கி, பின்னர் நிரபராதி என நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட நடிகை ஸ்வேதா பாசு, மீண்டும் புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

சிறையிலிருந்து வந்த பிறகு அவர் முதல் முறையாக ஒரு இந்திப் படத்தில் ஒற்றைப் பாடலுக்கு நடனம் ஆடுகிறார்.

இந்தப் பாடலில் அதிகபட்ச கவர்ச்சி காட்டவும் சம்மதித்துள்ளாராம் ஸ்வேதா. இந்தப் பாடலுக்காக எடுக்கப்பட்ட போட்டோ ஷூட்டில் கவர்ச்சி போஸ் கொடுத்து கலக்கியுள்ளார்.

மீண்டும் நடிக்க ஆரம்பித்தார் ஸ்வேதா பாசு.. இந்திப் படத்தில் குத்தாட்டம்!

இது தவிர ஒரு இந்திப் படத்தில் நாயகியாக நடிக்கவும் வாய்ப்புக் கிடைத்துள்ளதாம்.

தெலுங்கில் சில வாய்ப்புகள் வந்தாலும், அவற்றை இப்போதைக்கு ஒப்புக் கொள்ளாத ஸ்வேதாபாசு, இந்தி வாய்ப்புகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறார். மேலும் தனது நண்பர் நடத்தும் தயாரிப்பு நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பை கவனித்து வருகிறார்.

தமிழில் ஏற்கெனவே ராரா, சந்தமாமா ஆகிய படங்களில் ஸ்வேதா பாசு நடித்துள்ளார்.

 

சூர்யா நல்லா சந்தோஷமா இருக்கார்.. ஏம்பா வதந்தி பரப்புறீங்க! - வெங்கட் பிரபு

நடிகர் சூர்யாவுக்கு படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டதாக வந்த செய்திகளை மறுத்துள்ள இயக்குநர் வெங்கட் பிரபு, அவர் நலமுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

‘அஞ்சான்' படத்திற்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாஸ்' என்ற படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

இதில் சூர்யாவிற்கு ஜோடியாக நயன்தாரா, ப்ரணிதா நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஆர்.டி.சேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

சூர்யா நல்லா சந்தோஷமா இருக்கார்.. ஏம்பா வதந்தி பரப்புறீங்க! - வெங்கட் பிரபு

இந்தப் படத்திலும் சூர்யாவுக்கு இரண்டு கெட்டப்புகள். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. பொங்கலுக்கு இதன் ட்ரைலரை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

நேற்று இப்படத்தின் படப்பிடிப்பின்போது சூர்யாவிற்கு காயம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. இது வழக்கம் போல சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது.

இதனை மறுத்துள்ள இயக்குநர் வெங்கட் பிரபு, "சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டதாக வந்தவை வதந்திகளே. அவர் நலமாக உள்ளார். வதந்தி பரப்பும் நண்பர்களே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்... நாங்கள் எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறோம். அனைவருக்கும் ஹாப்பி மாஸ் நியூ இயர்," என்று கூறியுள்ளார்.

 

என்னை அறிந்தால்.... ரசிகர்களே நடத்தும் இசை வெளியீடு!

'தயாரிப்பாளர் விழா நடத்தாவிட்டால் என்ன... எங்க தலயோட படத்தின் இசை வெளியீட்டை நாங்களே விழா எடுத்து கொண்டாடிக் கொள்கிறோம்' என்று களத்தில் குதித்துள்ளனர் அஜீத் ரசிகர்கள்.

என்னை அறிந்தால் படத்தின் இசை வெளியீடு வரும் டிசம்பர் 31-ம் தேதி நள்ளிரவு வெளியாகிறது. இதற்காக விழா எதுவும் நடத்தப்போவதில்லை. இப்படிப்பட்ட விழாக்களை அஜீத்தும் ஆதரிப்பதில்லை.

என்னை அறிந்தால்.... ரசிகர்களே நடத்தும் இசை வெளியீடு!

எனவே ஒரு சின்ன அறிவிப்போடு 31-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு என்னை அறிந்தால் பாடல்கள் வெளியாகின்றன. ட்ரைலரையும் அன்றே வெளியிடவிருக்கிறார்கள்.

ஆனால் அஜீத்தின் ரசிகர்களோ, ஜனவரி 1-ம் தேதி இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தப் போகிறார்களாம். இதற்காக அவர்கள் தேர்வு செய்துள்ள இடம் அண்ணா சாலையை ஒட்டியுள்ள ரிச்சி தெரு (ரேடியோ மார்க்கெட்).

இந்த விழாவில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதிலிமிருந்து ரசிகர்களைத் திரட்டிவருகிறார்கள்.

 

நீ லண்டன் லட்டு நான் மதுரை புட்டு... - ஹன்சிகாவை வர்ணித்த விஷால்

ஹன்சிகாவுடன் ஜோடி சேர பயமாகத்தான் இருந்தது. காரணம் அவர் நல்ல வெள்ளை. நான் அட்டகறுப்பு, என்றார் விஷால்.

ஆம்பள படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஷால் பேசுகையில், "'' முதலில் தலைப்பு பற்றி ஒரு பயம் வந்தது. இந்தப் படம் ஆரம்பிக்கும் போது எனக்கு இன்னொரு பயம் இருந்தது. ஏற்கெனவே சுந்தர்சியுடன் இணைந்து நடித்த 'மத கஜ ராஜா' .படம் இன்னமும் வெளிவரவில்லை. சினிமாவில் செண்டிமெண்ட் அதிகம்.அதனால் பலரும் கேட்டார்கள். ஏற்கெனவே இப்படி இருக்கும் போது மறுபடியும் சுந்தர் சியுடனா படம் பண்ணப்போறே? என்று பலபேர் கேட்டார்கள்.

நீ லண்டன் லட்டு நான் மதுரை புட்டு... - ஹன்சிகாவை வர்ணித்த விஷால்

இருந்தாலும் நான் தெளிவாக முடிவாக இருந்தேன். இந்த 'ஆம்பள' லைன் முன்பே சொல்லப்பட்டதுதான். சுந்தர்.சிக்கும் எனக்குமான நல்லுறவு நன்றாக இருக்கிறது. அது ஒரு சொத்து போன்றது.

செப்டம்பர் 20ல் தொடங்கிய படம் டிசம்பர் 26ல் தயாராகி விட்டது. மூன்றே மாதத்தில் முழுப் படமும் முடித்தோம் எல்லாரையும் விரட்டி விரட்டி வேலை வாங்கினோம். பலரும் எனக்காக கஷ்டப்பட்டு உழைத்தார்கள்.

நெருக்கடியில் பதற்றத்துடன் டென்ஷனுடன் உழைத்திருக்கிறார்கள். இப்படி சிரமப்படுத்தி கஷ்டப்படுத்துவது இது கடைசிப் படமாக இருக்கட்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன். இனியும் ரிலீஸ் தேதி அறிவித்துவிட்டு இப்படிச் செய்வது நல்லதல்ல. ஆனாலும் சுந்தர்.சி சார் சீக்கிரம் முடித்தாலும் தரமாகவும் முடித்திருக்கிறார் .

படம் முடிந்துதான் விடுமுறைப் பயணம் போவார்கள். இந்தப் படமே ஜாலியான ஹாலிடே அனுபவமாக இருந்தது. டைரக்டர் அந்த அளவுக்கு டென்ஷன் இல்லாமல் எடுத்தார்.

இந்தப் படத்துக்கு இசையமைக்க மெட்டுப்போட 2500 ரூபாய்தான் செலவு. ஆர்.ஏ. புரத்தில் தங்கி இதை ஹிப் ஹாப் தமிழா ஆதி செய்தார். பாங்காக், ஸ்பெயின் எல்லாம் போகவில்லை. பஜ்ஜி, டீ செலவுதான் பெரிய செலவு. இதை வெளியிடும் வி மியூசிக்கில் இதன் 6 பாடல்களும் பெரிய அளவில் வெற்றிபெறும்...

முதன்முதலில் ஹன்சிகா என்னுடன் நடித்து இருக்கிறார். ஹன்சிகா ஜோடி என்றதுமே எனக்குப் பயம். அவர் நல்ல வெள்ளை. நான் அட்டகறுப்பு. கேமரா மேனுக்கு கஷ்டம் என்று நினைத்தேன். 'நீ லண்டன் லட்டு நான் மதுரை புட்டு' என்று பாட்டே வரும். இருந்தாலும் அவர் சமாளித்து எடுத்தார். சினிமா என் தாய் மாதிரி. அதற்கு யார் கெடுதல் செய்தாலும் விடமாட்டேன். திருட்டு விசிடிக்காக தொடர்ந்து போராடுவேன்," என்றார்.

 

என்ன கொடுமை இது? ஒரு லைட்மேன் படப்பிடிப்பை நிறுத்துவதா? - சுரேஷ் காமாட்சி குமுறல்

ஒரு நாள் பேட்டாவுக்காக கங்காரு படத்தின் ஷூட்டிங்கை ஒரு லைட்மேன் நிறுத்தினார். இது என்ன கொடுமை.. இதற்கு விடிவுகாலம் என்ன? என குமுறினார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

அமைதிப்படை 2 படத்துக்குப் பிறகு, வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள படம் கங்காரு. மிருகம், உயிர், சிந்து சமவெளி படங்களை இயக்கிய சாமி இயக்கியுள்ளார்.

படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை ஆர்கேவி தியேட்டரில் நடந்தது. விழாவில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இந்தப் படத்துக்காக தான் பட்ட பாடுகளைச் சொன்னார்.

என்ன கொடுமை இது? ஒரு லைட்மேன் படப்பிடிப்பை நிறுத்துவதா? - சுரேஷ் காமாட்சி குமுறல்

அவர் பேசுகையில், "இந்தக் கங்காருவை ரொம்ப நாள் சுமந்திருந்தேன். நான்கு ஆண்டுகள் முடிந்து இப்போதுதான் சனிப் பெயர்ச்சி நடந்துள்ளது. சினிமாவில் எல்லா சங்கங்களும் இயங்கி வந்தன. தயாரிப்பாளர் சங்கம் மட்டும் இயங்காமல் இருந்தது.

இந்தப் படத்தில் எனக்கு பல அனுபவங்கள் கிடைத்தன. ஒரு கசப்பான அனுபவம், இதைச் சொல்லியே ஆக வேண்டும். கொடைக்கானலில் மூன்று நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஒரு நாள் பேட்டா கொடுக்க வில்லை என்று படப்பிடிப்பை நிறுத்தச் சொன்னார்கள். அதுவும் யார்..? லைட்மேன் சங்கம். அந்த சங்கத்தை சேர்ந்த ராஜாராம் என்பவர் போன் செய்து நிறுத்துகிறார்.

அவர் யாரு? பெப்ஸி தலைவர் அமீரா..? ஆனால் அவரோ, செல்வமணியா விக்ரமனா யாரிடம் வேண்டுமானாலும் சொல்லுங்கள் என்று திமிராக மிரட்டுகிறார்.

எல்லா தொழிலிலும் முதலாளிதான் தொழிலாளிகளை கட்டுப் படுத்துகிறார்கள். சினிமாவில் மட்டும்தான் தொழிலாளிகள் முதல் போட்ட முதலாளிகளைக் கட்டுப் படுத்துகிறார்கள். இது என்ன கொடுமை? இதற்கு விடிவு காலம் என்ன? 150 பேர் வேலை பார்க்கும் ஒரு படப்பிடிப்பை ஒரு தனியாள் நிறுத்த முடியும் என்றால் அதற்கு என்ன அர்த்தம்?,'' என்று குமுறினார்.

தயாரிப்பாளர்களுக்கு திமிர் இருக்கவேண்டும்!

சுரேஷ் காமாட்சிக்குப் பதில் அளிக்கும் விதத்தில் இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் பேசினார். அவர் கூறுகையில், "இது மாதிரி முன்பும் நடந்துள்ளன.'திருமதி பழனிச்சாமி' படத்தில் க்ளைமாக்ஸ் ஃபைட் கஷ்டப்பட்டு எடுத்தோம். 70 அடி உயரத்தில் இருந்து ஜீப் ஜம்ப் ஆகிற காட்சி.அவுட்டோரில் எடுத்ததை இங்கு வந்து போட்டுப் பார்த்தோம் அருகிலிருந்த ஹீரோ சத்யராஜ் சொன்னார்.. 'டூப் நல்லா பண்ணியிருக்காருல்ல' என்றார். 'உனக்காக நடித்தவன் அவன். குதித்தவன் அவன்தான் ஒரிஜினல். நீதான் டூப். 25 லட்சம் சம்பளம் வாங்குற நீ டூப். 750 ரூபாய் சம்பளம் வாங்குற அவன்தான் ஹீரோ' என்றேன்.

ஒரு முறை இளையராஜா ஏழு பாடல்களைப் போட்டு வைத்துக் கொண்டு, கொடுத்தால் 7 பாடல்களையும் ஒரே படத்துக்குத்தான் கொடுப்பேன் என்றார் பிடிவாதமாக. பாலு மகேந்திரா போல பலரும் தன் படத்தில் நாலு சீக் வென்ஸ்தான் உள்ளன. 4 பாடல் போதும் என்று கேட்டார்கள். அவர் கொடுக்க மறுத்தார்.

இசையமைப்பாள​ருக்கே இவ்வளவு திமிர் இருந்தால் எழுத்தாளர் எனக்கு எவ்வளவு திமிர் இருக்கும்.. அப்படி என்ன பாட்டு என்று நினைத்து போய் கேட்டேன்.. நானே அந்த ஏழையும் வாங்கினேன். பயன்படுத்தினேன். அந்தப் படம்தான் 'வைதேகி காத்திருந்தாள்'. இதுதான் வித்தை திமிர். தயாரிப்பாளருக்கு என்றைக்கு திமிர் வருகிறதோ அன்றுதான் சினிமா உருப்படும். தயாரிப்பாளர் என்கிற திமிர் இல்லாவிட்டால், ஒற்றுமை இல்லா விட்டால் உங்களை யாரும் மதிக்க மாட்டார்கள். காப்பாற்ற முடியாது," என்றார்.

 

என்னை அறிந்தால் இசை வெளியாகும்போதே ட்ரைலரும் ரிலீஸாகிறது!

என்னை அறிந்தால் படத்தின் இசை வெளியாகும் அன்றே படத்தின் ட்ரைலரும் வெளியாகவிருக்கிறது.

அஜீத்தை வைத்து கவுதம் மேனன் இயக்கியுள்ள என்னை அறிந்தால் படம் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது.

இந்தப் படத்தின் இசை - பாடல்கள் நாளை மறுநாள் நள்ளிரவு வெளியாகவிருக்கின்றன. இதற்காக அஜீத் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

என்னை அறிந்தால் இசை வெளியாகும்போதே ட்ரைலரும் ரிலீஸாகிறது!

இந்த நிலையில் அதே நேரத்தில் படத்தின் ட்ரைலரையும் வெளியிடுகிறார்கள். இது அஜீத் ரசிகர்களுக்கு இரட்டை மகிழ்ச்சியாக அமைந்துள்ளது.

என்னை அறிந்தால் டீசர் வெளியாகி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்று இந்திய அளவில் சாதனைப் படைத்துள்ளது.

இப்போது ட்ரைலரும் அதே போன்ற சாதனையைப் படைக்கும் என எதிர்ப்பார்க்கிறார்கள்.

 

தோல்வி என்றால் மட்டும் இயக்குநர் தலையில் போட்டுவிடுவார்கள்! - இயக்குநர் சாமி

சினிமாவில் தோல்வி என்றால் மட்டும் இயக்குநர் தலையில் போட்டு விடுகிறார்கள் என்றார் இயக்குநர் சாமி.

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சுரேஷ் காமாட்சி தயாரித்து, சாமி இயக்கியுள்ள படம் 'கங்காரு'. இப்படத்தின் ட்ரெய்லர் எனப்படும் முன்னோட்டப் படம் வெளியீட்டு விழா ஆர்கேவி ஸ்டுடியோவில் நேற்று மாலை நடைபெற்றது. முன்னோட்டத்தை கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டார்.

விழாவில் 'கங்காரு' படத்தின் இயக்குநர் சாமி பேசும்போது, "நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் வந்திருக்கிறேன். என் முந்தைய படங்கள் வேறு மாதிரி இருந்ததற்கு நான் மட்டும் காரணமல்ல. சினிமாவில் பலர் அறியாத விஷயம் ஒரு படம் எந்தமாதிரி வரும் என்பதை தனிநபர் முடிவு செய்ய முடியாது. இயக்குநர், தயாரிக்கும் தயாரிப்பாளர், நடிக்கும் நடிகர் எல்லாரும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டியிருக்கிறது.

தோல்வி என்றால்  மட்டும் இயக்குநர் தலையில் போட்டுவிடுவார்கள்! - இயக்குநர் சாமி

இத்தனைக்கும் பிறகு வெற்றி என்றால் எல்லாரும் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். தோல்வி என்றால் மட்டும் இயக்குநர் தலையில் போட்டுவிட்டு ஓடி விடுவார்கள். கங்காரு என் உதவி இயக்குநர் சாய்பிரசாத் சொன்ன கதை. சினிமாவில் ஞாபகம் வைக்கிற படமாக இருக்கும். 5 பாடல்கள் கவிஞர் வைரமுத்துவுக்கு தேசியவிருது கிடைக்கும். படத்தை என் ஞானத் தந்தை தாணு வெளியிடுகிறார். அவரிடம் 2004ல் முன்பணம் வாங்கினேன். படம் இயக்க முடியவில்லை. 2015ல் 'கங்காரு' வை வெளியிடுகிறார்," என்றார்.

அக்கா தங்கையுடன் வாழ்ந்துவிட்டு வந்த உணர்வு!

இயக்குநர் மனோஜ் குமார் பேசும்போது, "இங்கே மூன்று பாடல்கள் போட்டுக் காட்டினார்கள். இதிலேயே மொத்தக் கதையும் தெரிகிறது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஊருக்குச் சென்று என் அக்கா தங்கையுடன் வாழ்ந்துவிட்டு வந்த உணர்வு ஏற்படுத்தியது. வீடு சம்பந்தப்பட்ட கதை,உறவு,சம்பந்தப்பட்ட கதை. நிச்சயம் இது வெற்றிபெறும். 'மிருகம்' சாமி இனி 'கங்காரு' சாமியாகிவிடுவார்," என்றார்.

இசையமைப்பாளர் ஆன பிறகு தயாரிப்பாளரின் சிரமங்கள் புரிகின்றன!

இசையமைப்பாளர் ஸ்ரீநிவாஸ் பேசும்போது, "கதைப் பிடித்துப் போனதால்தான் இந்தப் படத்துக்கு இசையமைத்தேன். முதலில் தாலாட்டு பாடலை உருவாக்கினோம். அப்படியே வளர்ந்தன பாடல்கள். இப்படத்தில் அர்த்தமில்லாத பரபரப்பு, ஆர்ப்பாட்டம் எல்லாம் இருக்காது. உண்மையாக இருக்கும். உணர்வு பூர்வமாக இருக்கும். முன்பெல்லாம் நான் பாடிவிட்டுச் சென்று விடுவேன். நான் இசையமைப்பாளர் ஆன பிறகு தயாரிப்பாளரின் சிரமங்கள் புரிகின்றன,'' என்றார்.

'கங்காரு' க்ளைமாக்ஸ் நிச்சயம் பேசப்படும்!

கலைப்புலி எஸ்.தாணு பேசும் போது , "பாசத்துக்காக ஓடிய படங்கள் வரிசையில் 'பாசமலர்' ,'முள்ளும் மலரும்' வரிசையில் நான் தயாரித்த 'கிழக்குச் சீமையிலே' படமும் அமைந்ததில் பெருமைப் படுகிறேன். அது 275 நாள் ஓடியது. 'கங்காரு' படத்தை முழுதும் பார்த்துதான் வாங்கி வெளியிடுகிறேன். யாரும் எதிர்ப்பார்க்க முடியாத 'கங்காரு' க்ளைமாக்ஸ் நிச்சயம் பேசப்படும் படமும் வெற்றி பெறும்," என்றார்.

 

அமிதாப் பச்சனுக்கு நாகேஸ்வரராவ் விருது!

ஹைதராபாத்: சாதனை நடிகர் அமிதாப் பச்சனுக்கு நாகேஸ்வரராவ் நினைவு விருது வழங்கப்பட்டது.

இதற்கான விழா ஹைதராபாத்தில் நேற்று நடந்தது. அக்கினேனி இன்டர்நேஷனல் பவுண்டேசன் சார்பில் நடந்த இந்த விழாவில் நடிகர் நாகேஸ்வரராவின் மகன் நடிகர் நாகார்ஜூனா, அவரது மனைவி அமலா, மகன்களும், நடிகர்களுமான நாக சைதன்யா, அகில் உள்பட குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சன் கலந்து கொண்டார். அவருக்கு நாகேஸ்வர ராவ் விருது வழங்கப்பட்டது. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் விருதை வழங்கினார். விழாவில் அமிதாப்பச்சன் பேசும்போது, ‘‘இந்த விருதை பெறுவதன் மூலம் நான் பெருமை அடைகிறேன்,'' என்றார்.

அமிதாப் பச்சனுக்கு நாகேஸ்வரராவ் விருது!

பின்னர் அவர் முதல்வர் சந்திரசேகரராவை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். இருவரும் 30 நிமிடம் பேசிக்கொண்டு இருந்தனர். தெலுங்கானா மாநிலம் உருவாக சந்திரசேகர ராவ் எடுத்துக்கொண்ட முயற்சியை அமித்தாப்பச்சன் பாராட்டினார்.

ஹைதராபாத் புறநகரில் 2 ஆயிரம் ஏக்கரில் ஹாலிவுட் தரத்துக்கு இணையாக பிரமாண்ட திரைப்பட நகரம் உருவாக்கப்பட உள்ளது. இதற்கு தேவையான உதவிகளை செய்யுமாறு அமிதாப்பிடம் சந்திரசேகர ராவ் கேட்டுக் கொண்டார்.

 

அகமதாபாத், போபாலில் பீகே படத்தை வெளியிட்ட தியேட்டர்கள் மீது தாக்குதல்

பீகே படத்தில் இந்து மதத்துக்கு எதிரான கருத்துகள் அடங்கியிருப்பதாகக் கூறி, அப்படத்தை வெளியிட்ட தியேட்டர்கள் மீது இந்துத்துவா ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

போபால், அகமதாபாத் போன்ற நகரங்களில் இரு திரையரங்கள் கல்வீசி தாக்கப்பட்டன.

ஆமீர் கான் நடிப்பில், ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் வெளியான படம் பீகே. கடந்த 19-ம் தேதி வெளியான இந்தப் படம் வட இந்தியாவில் வசூலைக் குவித்து வருகிறது.

அகமதாபாத், போபாலில் பீகே படத்தை வெளியிட்ட தியேட்டர்கள் மீது தாக்குதல்

அதே நேரம் படத்தில் இந்து மதம் கடுமையாக கிண்டலடிக்கப்படுவதாகக் கூறி, படத்தைத் தடை செய்ய இந்துத்துவா அமைப்புகள் கோரி வருகின்றன.

இந்து மகா சபை என்ற அமைப்பு உடனடியாக படத்துக்கு தடை கோரியுள்ளது.

இந்த நிலையில் படத்தை வெளியிட்ட திரையரங்குகள் மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளனர். அகமதாபாதில் உள்ள சிவா மற்றும் சிட்டி கோல்டு ஆகிய இரு மல்டிப்ளெக்ஸ் அரங்குகள் மீதும், போபாலில் ஒரு அரங்கம் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் திரையரங்குகளின் கண்ணாடிகள் நொறுங்கின. யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

 

தனிக்காட்டு ராஜா உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் டி ராமாநாயுடு கவலைக்கிடம்!

ஹைதராபாத்: சிவாஜி கணேசன் நடித்த வசந்த மாளிகை, ரஜினிகாந்த் நடித்த தனிக்காட்டு ராஜா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களின் தயாரிப்பாளர் டி ராமாநாயுடு உடல் நலக் குறைவால் கவலைக்கிடமாக உள்ளார்.

78 வயதான ராமாநாயுடு, தெலுங்குத் திரையுலகில் பெரும் மதிப்புக்குரியவராகத் திகழ்பவர். தமிழில் மதுரகீதம், குழந்தைக்காக, தெய்வபிறவி, திருமாங்கல்யம் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார்.

இந்த வயதில் ஆரோக்கியமாக அனைத்து திரை நிகழ்வுகளிலும் பங்கேற்று வந்த ராமாநாயுடுவுக்கு இவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

தனிக்காட்டு ராஜா உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் டி ராமாநாயுடு கவலைக்கிடம்!

டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஆனாலும் அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவருக்கு வெங்கடேஷ்பாபு, சுரேஷ்பாபு என இருமகன்கள் உள்ளனர். தெலுங்கு சினிமாவின் முக்கிய நாயகனாகத் திகழ்கிறார் வெங்கடேஷ். சுரேஷ்பாபுவின் மகன் தான் தெலுங்கு நடிகர் ராணா. ராமாநாயுடுவின் மகள் லட்சுமிதான் பிரபல நடிகர் நாகார்ஜுனின் முதல் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

எம்பியாக பதவி வகித்துள்ள ராமாநாயுடு, தாதா சாகேப் பால்கே உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பிரபல நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள் இணையத்தில் வெளியாகின!

பிரபல நடிகை வசுந்தராவின் நிர்வாணப் படங்கள், காதலனுடன் நெருக்கமாக உள்ள படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வட்டாரம், உன்னாலே உன்னாலே, ஜெயம்கொண்டான், தென்மேற்கு பருவக்காற்று, போராளி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் வசுந்தரா.

பிரபல நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள் இணையத்தில் வெளியாகின!

இவர் தனது காதலனுடன் மிக அந்தரங்கமாக உள்ள படங்களை செல்ஃபி எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். அவற்றில் சிலவற்றில் டாப்லெஸ் மற்றும் முழு நிர்வாண கோலத்திலும் உள்ளார். கையில் செல்போன் வைத்தபடி, காதலனை விட்டு படமெடுக்க வைத்துள்ளார்.

பிரபல நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள் இணையத்தில் வெளியாகின!

இந்தப் படங்கள் இப்போது இணையத்தில் லீக் ஆகிவிட்டன. இவரது ஆபாச வீடியோவும் வெளியாகிவிட்டது. இந்த தகவல்கள் வெளியில் பரவியதுமே, இன்ஸ்டாகிராம் கணக்கை அழித்துவிட்டார் வசுந்தரா. ஆனால் அதிலிருந்து முன்பே படத்தை டவுன்லோடு செய்த சிலர், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட வேறு சமூக இணையதளங்களில் அந்தப் படங்களை அனுப்பிவிட்டனர்.

இதனால் உலகெங்கும் வசுந்தராவின் நிர்வாணப் படங்கள் வலம் வந்து கொண்டுள்ளன.

 

'ஐ' படத்தை இந்தியில் பிரபலப்படுத்த திட்டம்: பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகிறார் விக்ரம்

மும்பை: தான் நடித்து வெளியாக உள்ள ஐ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் இந்தி சின்னத்திரையின் முன்னணி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியில், சல்மான் கானுடன் சேர்ந்து விக்ரமும் சிறப்பு தோற்றத்தில் வர உள்ளார்.

இந்தி சின்னத்திரையில் அதிகம் டிஆர்பி பெற்றுவரும் நிகழ்ச்சி பிக்பாஸ். அதன் 8வது தொடர்ச்சி தற்போது ஒளிபரப்பாகிவருகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ள ஐ திரைப்படத்தை விளம்பரப்படுத்த விக்ரம் திட்டமிட்டுள்ளார். எனவே நிகழ்ச்சி தொகுப்பாளர் சல்மான் கானுடன் சேர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க விக்ரம் முடிவு செய்தார்.

'ஐ' படத்தை இந்தியில் பிரபலப்படுத்த திட்டம்: பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகிறார் விக்ரம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் விக்ரம் பங்கேற்கும் காட்சிகள் நாளை ஞாயிற்றுக்கிழமை மும்பையில் படம்பிடிக்கப்பட உள்ளன. இதற்காக இன்றே விக்ரம் மும்பை சென்றுவிட்டார்.

தமிழ், தெலுங்கு மட்டுமின்றி இந்தியிலும் ஐ வெளியாகிறது. எனவே, படம் குறித்த எதிர்பார்ப்பை பாலிவுட்டில் அதிகரிக்கும் நோக்கத்தில் விக்ரம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக அவரது மேனேஜர் தெரிவித்தார்.

பிக்பாஸ்-8ல் ஐ திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள உபேன் பாட்டீலும் பங்கேற்றுள்ளார். எனவே இதுவும் ஐ படத்துக்கு நல்ல விளம்பரத்தை தேடித்தரும் என்று விக்ரம் எதிர்பார்க்கிறார்.

 

49வது வயதில் காலடி எடுத்து வைத்த 'சல்லு பாய்'- பிரபலங்கள் வாழ்த்து மழை

மும்பை: 49வது வயதில் காலடி எடுத்து வைத்துள்ள பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு வாழ்த்துக்கள் வந்து குவிந்தவண்ணம் உள்ளன.

49வது வயதில் காலடி எடுத்து வைத்த 'சல்லு பாய்'- பிரபலங்கள் வாழ்த்து மழை

பாலிவுட் முன்னணி நடிகரான சல்மான்கான் தனது 49வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். முன்னதாக நேற்றிரவு அவரது பண்ணை வீட்டில் கேக் வெட்டி கொண்டாட்டம் நடத்தப்பட்டது. நெருக்கமானவர்களை மட்டும் இந்த நிகழ்ச்சிக்கு சல்லு அழைத்திருந்தார். அஜய் தேவ்கன், பிரியங்கா சோப்ரா, லிங்கா பட நாயகி சோனாக்ஷி, கரன் ஜோகர் உள்ளிட்டவர்கள் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

49வது வயதில் காலடி எடுத்து வைத்த 'சல்லு பாய்'- பிரபலங்கள் வாழ்த்து மழை

பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது வெட்டிய கேக்கை டிவிட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார் சல்மான்கான், "Happy Birthday Bhai" என்று கேக் மீது எழுதப்பட்டுள்ளது.

இதனிடையே முன்னணி சினிமா கலைஞர்கள் டிவிட்டர் மூலம், சல்லுவுக்கு வாழ்த்துகளை தெரிவித்தபடி உள்ளனர். பிபாசா பாசு, சோனாக்ஷி, பிரீத்தி ஜிந்தா, சன்னி லியோன் என கிட்டத்தட்ட அனைத்து பிரபரலங்களும் சல்மானுக்கு வாழ்த்து மழை பொழிந்துள்ளனர்.

 

வெள்ளக்கார துரை விமர்சனம்

Rating:
3.0/5
எஸ் ஷங்கர்

நடிப்பு: விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா, சூரி, சிங்கம்புலி, ஜான் விஜய்
ஒளிப்பதிவு: சூரஜ் நல்லுசாமி
இசை: டி இமான்
தயாரிப்பு: அன்புச் செழியன்
இயக்கம்: எஸ் எழில்

துள்ளாத மனமும் துள்ளும் போன்ற சீரியஸ் படங்கள் தந்த எழில், மனம் கொத்திப் பறவையிலிருந்து நகைச்சுவை ரூட்டுக்கு மாறினார். நல்ல ரெஸ்பான்ஸ். இனி இதிலேயே கொஞ்ச நாள் பயணிக்கலாம் என்ற முடிவுடன் தந்திருக்கும் மூன்றாவது காமெடிப் படம் வெள்ளக்கார துரை.

வெள்ளக்கார துரை விமர்சனம்  

வீட்டோடு மாப்பிள்ளையான சூரி ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்ய ஒரு நிலத்தை வாங்குகிறார். அதற்கு வட்டிக்கார ஜான் விஜய்யிடம் ரூ 15 லட்சத்தை கடனாக வாங்குகிறார். சூரிக்கு உதவியாக இருக்கிறார் விக்ரம் பிரபு. இடத்தை வாங்கின பிறகுதான் தெரிகிறது அது சுடுகாடு என்று.

தன்னிடம் பணம் வாங்கியவர்கள் திருப்பித் தராவிட்டால், அவர்களை குடும்பத்தோடு அடிமையாக்கிக் கொள்வது ஜான் விஜய்யின் வழக்கம். அந்த வழக்கப்படி சூரி, விக்ரம் பிரபுவை தன் அடிமைகளாக ஓட்டிக் கொண்டு போகிறார்.

ஜான் விஜய் வீட்டில் ஸ்ரீதிவ்யாவைப் பார்க்கும் விக்ரம் பிரபு, அவரைக் காதலிக்க ஆரம்பிக்கிறார். ஆரம்பத்தில் அவரை ஜான் விஜய்யின் தங்கை என்று விக்ரம் நினைத்திருக்க, அப்புறம்தான் தெரிகிறது அவரை ஜான் விஜய் தன் மனைவியாக்க முயற்சிப்பது.

வெள்ளக்கார துரை விமர்சனம்

ஸ்ரீதிவ்யா யாருக்கு சொந்தமாகிறார் என்பது க்ளைமாக்ஸ்.

படத்துக்கு வருபவர்கள் சிரிக்க வேண்டும்... அதைத் தவிர அவர்களுக்கு எந்த யோசனையும் வரக்கூடாது என்ற முடிவோடு திரைக்கதை எழுதியிருக்கிறார் இயக்குநர் எழில். அவருக்கு ரொம்பவே கைகொடுக்கின்றன அரவிந்தனின் வசனங்கள்.

சிச்சுவேஷன் காமெடியில் பின்னிப் பெடலெடுக்கிறார் சூரி. அதிலும் ஜான் விஜய்யிடமிருந்து தப்ப முயன்றி, மீண்டும் அவரிடமே மாட்டிக் கொள்ளும் காட்சியில் ரசிக மகா ஜனங்கள் சிரிப்பாய் சிரித்து மகிழ்கிறார்கள்.

வெள்ளக்கார துரை விமர்சனம்

விக்ரம் பிரபு நடித்துள்ள முதல் கிராமத்துப் படம். பரவாயில்லை.. சட்டென்று அந்த பாத்திரத்தில் பொருந்திப் போகிறார். ஜான் விஜய் வீட்டில் ஸ்ரீதிவ்யாவை இவர் ரூட் விடும் காட்சிகள் ரகளை.

ஸ்ரீதிவ்யா இந்தப் படத்திலும் செம க்யூட். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் தொடர்ச்சியோ எனும் அளவுக்கு இவர் வரும் காட்சிகள் இருந்தாலும், ரசிக்க வைக்கிறார்.

சிங்கம்புலியின் அந்த கச்சேரியும், அவர் பாடும் மண்ணில் இந்த காதல் பாட்டும்... நினைத்து நினைத்து சிரிக்க வைக்கிற காட்சி.

வெள்ளக்கார துரை விமர்சனம்

வழக்கம்போல இதிலும் காமெடி வில்லன்தான். கலக்கியிருக்கிறார் ஜான் விஜய்.

சிங்கமுத்து, நான் கடவுள் ராஜேந்திரன் போன்றோரும் தங்கள் பங்குக்கு கிச்சு கிச்சு மூட்டத் தவறவில்லை.

டி இமான் தன் பாடல்களையே ரிபீட் அடித்திருக்கிறார். ஆனால் கேட்க நன்றாக உள்ளன. ஒரு கிராமத்து நகைச்சுவைப் படத்துக்கு என்ன தேவையோ அதை அருமையாகச் செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் சூரஜ் நல்லுசாமி.

படத்தில் குறை சொல்ல ஆரம்பித்தால் நிறையவே உள்ளன. ஆனால் அவற்றை நினைத்துப் பார்க்கக் கூட நேரமின்றி சிரித்துக் கொண்டே இருக்க வைத்திருப்பது எழிலின் சாமர்த்தியம். நோ லாஜிக்.. ஒன்லி லாஃபிங் என்பது இவர் பாணி. இது கூட நல்லாத்தான் இருக்கு!