பெங்களூரில் பாலியல் சிறுபான்மையினர் (திருநங்கை, கே, லெஸ்பியன்) திரைப்பட விழா!

பெங்களூர்: பாலியல் சிறுபான்மையினராகக் கருதப்படும் திருநங்கைகள், ஓரினச்சேர்க்கையாளர்களான கே, லெஸ்பியன் போன்றவர்களுக்கான படங்கள் திரையிடப்படும் திரைப்பட விழா வரும் மார்ச் மாதம் நடக்கிறது.

இந்த மாதிரியான திரைப்பட விழாக்கள் கடந்த 2003-ம் ஆண்டிலிருந்தே பெங்களூரில் நடக்கிறது.

இந்த பாலியல் சிறுபான்மை திரைப்பட விழாவைப் பொறுத்தவரை இது 6-வது ஆண்டாகும்.

இந்த விழாவில் திருநங்கைகளின் சமூக படைப்புத் திறனை ஊக்குவிக்கும் வகையில் படங்கள் திரையிடப்படும்.

இதுகுறித்து ஸ்வாபாவா அறக்கட்டளை, குட் அஸ் யூ வாக் (கே), பைரேட் டைக்ஸ் அமைப்புகள் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:

பெங்களூரு வசந்த் நகரில் உள்ள அலையான்ஸ் பிராங்கைஸ் வளாகத்தில் இன்று முதல் அடுத்த மாதம் 2-ஆம் தேதி வரை 6-ஆவது பாலியல் சிறுபான்மையினருக்கான திரைப்பட விழா நடைபெறுகிறது.

இந்த விழாவில் திருநங்கைகள் உள்ளிட்ட பாலியல் சிறுபான்மையினர் பங்கேற்று தங்களது சமூக படைப்புத் திறனை காட்சியிடுகின்றனர். இந்தத் திரைப்பட விழாவில் 25 நாடுகளைச் சேர்ந்த 130 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன," என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் பாலியல் சிறுபான்மையினர் (திருநங்கை, கே, லெஸ்பியன்) திரைப்பட விழா!

ஓரினச் சேர்க்கை, திருநங்கைகள் பற்றி சர்வதேச அளவில் எடுக்கப்பட்ட பல படங்கள் இங்கே திரையிடப்படுகின்றன.

ஓரினச் சேர்க்கை என்பது சட்டப்படி கிரிமினல் குற்றம் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், ஓரினச் சேர்க்கையாளர்களுக்காகவே இப்படி ஒரு திரைப்பட விழா நடப்பது குறிப்பிடத்தக்கது.

 

வல்லினம் - விமர்சனம்

Rating:
3.5/5

எஸ் ஷங்கர்

நடிகர்கள்: நகுல், மிருதுளா, சித்து, அம்ஜத், அதுல் குல்கர்னி, ஜெயப்ரகாஷ்

ஒளிப்பதிவு: கே எம் பாஸ்கரன்

இசை: எஸ் எஸ் தமன்

தயாரிப்பு: ஆஸ்கர் பிலிம்ஸ்

எழுத்து - இயக்கம்: அறிவழகன்

ஈரம் என்ற கச்சிதமான த்ரில்லர் படம் தந்த அறிவழகனின் இரண்டாவது படம் வல்லினம். முன்பு பேய்.. அமானுஷ்யம் என்று போனவர், இப்போது புறக்கணிக்கப்பட்ட நிலையில் உள்ள விளையாட்டுகளில் ஒன்றான கூடைப்பந்தாட்டப் பின்னணியில் ஒரு கதை சொல்லியிருக்கிறார்.

இந்த மாதிரி படங்களுக்கு பொதுவான ஒரு கட்டமைப்பு உண்டு. புறக்கணிக்கப்பட்ட விளையாட்டு.. அதை விளையாட ஆர்வத்துடன் களமிறங்கும் மாணவர்கள்.. மனம் வெதும்பி நிற்கும் ஒரு கோச்... அந்த விளையாட்டை ஒழிக்க நினைக்கும் மற்ற விளையாட்டு வீரர்கள் அல்லது வில்லன்கள்...க்ளைமாக்ஸில் கடைசி கட்டத்தில் வெற்றி..!

வல்லினம் - விமர்சனம்

சக் தே, சென்னை 28, வெண்ணிலா கபடிக் குழு என இதற்கு முன் வந்த கதைகள் எல்லாம் இந்த கட்டமைப்புக்குட்பட்டவைகளே. அப்படி ஒரு கதையைத்தான் வல்லினமாகச் சொல்லியிருக்கிறார் அறிவழகன்.

திருச்சி கல்லூரியில் படிக்கும் நகுல் ஒரு நல்ல கூடைப்பந்தாட்ட வீரர். ஆனால் ஒரு மேட்சின்போது எதிர்பாராதவிதமாக சக ஆட்டக்காரனான தன் நெருங்கிய நண்பனை இழக்கிறார். அன்றிலிருந்து கூடைப்பந்தாட்டம் விளையாடுவதையே கைவிடும் நகுல், சென்னையில் வேறு கல்லூரியில் சேர்கிறார். அங்கு கிரிக்கெட்டுக்குதான் முதலிடம். வேறு விளையாட்டை கண்டுகொள்ளவே மறுக்கிறார்கள்.

வல்லினம் - விமர்சனம்

ஒருநாள் கிரிக்கெட் விளையாடும் அணிக்கும் கூடைப்பந்தாட்ட அணிக்கும் முட்டிக் கொள்கிறது. கூடைப்பந்தாட்ட அணியிலிருக்கும் தன் நண்பனை கிரிக்கெட் அணி கேப்டன் தாக்கிவிட, சூழ்நிலை காரணமாக மீண்டும் கூடைப்பந்தை கையிலெடுக்கிறார் நகுல். கிரிக்கெட்டுக்குத் தரப்பட்ட முக்கியத்துவத்தைத் தாண்டி கூடைப்பந்தாட்டத்தில் தன் அணியை எப்படி ஜெயிக்கிறார் என்பது மீதிக் கதை.

இடையில் மிருதுளாவுடன் காதல், அந்தக் காதலுக்கு எதிர்ப்பு என்று வழக்கமான ஒரு எபிசோடும் உண்டு.

வல்லினம் - விமர்சனம்

காட்சிகளைப் பார்த்துப் பார்த்து கச்சிதமாக எடுப்பதில் காட்டிய அக்கறையை, விறுவிறுப்பான நகர்வில், வித்தியாசமான திரைக்கதையில் காட்டத் தவறியதுதான் இந்தப் படத்தின் மைனஸ். கூடைப் பந்தை நகுல் கையில் எடுக்கும்போதே க்ளைமாக்ஸ் இதுதான் என்பது தெரிந்துவிடுவதால், அடுத்து என்ன என்ற கேள்வியே எங்கும் எழவில்லை.

அதுவும் கூடப்பந்தாட்டப் போட்டியை எதிர்த்து அந்த வம்சியும் அவர் தொழிலதிபர் தந்தையும் அமைச்சரும் போடும் திட்டங்கள் ஜூஜுபி!

வல்லினம் - விமர்சனம்

ஒரு சாதாரண மாணவன்தான் கதையின் ஹீரோ. அவனை இயல்பாகவே காட்டியிருந்தால் படத்தில் இன்னும் சுவாரஸ்யம் இருந்திருக்கும். மாறாக படம் ஆரம்பித்த முக்கால் மணி நேரத்தில் அவரை சூப்பர் ஹீரோவாக இயக்குநர் காட்ட முயல்.. திரைக்கதையில் மசாலா ஓவர்டோசாகிவிடுகிறது.

ஆனால் ஒரு பொழுதுபோக்குப் படம் என்ற வகையில் ரொம்பவே டீசன்டான படம் வல்லினம். அதற்காக ஒரு முறை இந்தப் படத்தைப் பார்ப்பதில் தப்பில்லை.

வல்லினம் - விமர்சனம்

நகுலுக்கு இது இன்னொரு மறுபிரவேச வாய்ப்பு. நன்றாகப் பயன்படுத்தியிருக்கிறார். குறிப்பாக கூடைப்பந்தாட்டக் காட்சிகளில், அசல் ஆட்டக்காரனாகவே மாறியிருக்கிறார்.

நாயகியாக மிருதுளா. பணக்காரக் களையும் குழந்தைத் தனமுமான முகம். நடிக்க பெரிய வாய்ப்பில்லை. ஒரு பாடல் காட்சியில் முடிந்தவரை அவரை எக்ஸ்போஸ் பண்ணப் பார்த்திருக்கிறது பாஸ்கரனின் கேமிரா!

கோச்சாக வரும் அதுல் குல்கர்னி, கிரிக்கெட் கேப்டன் வம்சியாக வரும் சித்து, தொழிலதிபராக வரும் ஜெயப்பிரகாஷ், கல்லூரி நண்பர்களாக வரும் இளைஞர்கள் அனைவருமே கச்சிதமாக.. இயல்பாக நடித்துள்ளனர்.

வல்லினம் - விமர்சனம்

படத்தின் முக்கிய பலம் பாஸ்கரனின் ஒளிப்பதிவு. கூடைப்பந்தாட்ட காட்சிகள், அதற்கான ஸ்பான்சர்ஷிப் ஏற்பாடுகளை மிகத் தத்ரூபமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

தமனின் பின்னணி இசை பரவாயில்லை. பாடல்கள் எதுவும் நினைவில் பதியவவில்லை.

முதல் வெற்றியைத் தந்த எல்லா இயக்குநர்களுக்கும் வரும் அதீத எச்சரிக்கையே கூட, அடுத்த படத்தின் திரைக்கதையில் சின்ன தளர்வை ஏற்படுத்திவிடும். அதற்கு அறிவழகனின் இந்த வல்லினம் ஒரு உதாரணம்.

ஆனால் ஒரு விளையாட்டில் வெற்றி பெற ஸ்பான்சர்கள், பணம் மட்டுமே முக்கியமல்ல, முழு மனசோடு இறங்கி போராடும் மனசுதான் முக்கியம் என்பதை அழுத்தமாக உணர்த்த இந்தப் படம் தவறவில்லை. அதற்காகவே ஒரு முறை படம் பார்த்து அறிவழகனை உற்சாகப்படுத்தலாம்!

 

டாப்சி கன்னத்தில் பொது இடத்தில் பச்சக் பச்சக் வைத்த ஹீரோ!

மும்பை: பிரபல நடிகை டாப்சிக்கு பொது இடத்தில் வைத்து கன்னத்தில் முத்தமிட்டு அதிர வைத்தார் ஒரு ஹீரோ.

சம்பவம் நடந்த இடம் மும்பை. தான் நடித்த ஒரு இந்திப் பட புரமோஷனுக்காக டாப்சி வந்திருந்தபோது இந்த கிஸ் கிஸ் சமாச்சாரம் நடந்துவிட்டது.

டாப்சி கன்னத்தில் பொது இடத்தில் பச்சக் பச்சக் வைத்த ஹீரோ!

பாலிவுட் பிரவேசம்

தமிழில் போதிய வாய்ப்புக் கிடைக்காததால் இந்திப் பிரவேசம் செய்துள்ள டாப்சி, இப்போது தனது இரண்டாவது இந்திப் படத்தில் நடித்து வருகிறார். படத்துக்குப் பெயர் ரன்னிங் ஷாதி டாட் காம். இது ஒரு ரொமான்டிக் காமெடி படம்.

விளம்பர நிகழ்ச்சி

இந்தப் படத்துக்கான புரமோஷனல் நிகழ்ச்சி மும்பையில் சமீபத்தில் நடந்தது. இதில் டாப்சியும் படத்தில் ஹீரோவாக நடிக்கும் அமிச் சத்தும் கலந்து கொண்டனர். படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் இதில் பங்கேற்றனர். ரசிகர்களும் வந்திருந்தார்கள்.

டாப்சி கன்னத்தில் பச்சக் பச்சக்

அப்போது யாரும் எதிர் பார்க்காத வகையில் அமித் சத் டாப்சி இருந்த இடத்துக்கு சென்று அவர் முகத்தை தன் முகத்தோடு இணைத்து திடீரென பச்சக் பச்சக்கென முத்தமிட்டார்.

சமாளித்த டாப்சி

இதை டாப்சி எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் பெரிதாக பதட்டப்படவில்லை. ஹீரோவாச்சே.. அதனால் சமாளித்தார். ஆனால் வந்திருந்த படக்குழுவினர் பரபரப்பாகிவிட்டனர்.

இதுவும் புரமோஷன்தானோ?

கிஸ்ஸடித்த ஹீரோவா ஒரு நமுட்டுச் சிரிப்போடு படக்குழுவினருடன் பேசிக் கொண்டிருந்தார். இதுவும் முன்கூட்டியே திட்டமிட்ட விளம்பரமோ!

 

ஃபேஸ்புக்கில் ஷாருக் கானை தோற்கடித்த சல்மான் கான்

மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு ஃபேஸ்புக்கில் 14 மில்லியன் ஃபேன்ஸ் உள்ளனர்.

நடிகர் சல்மான் கான் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் கணக்குகள் வைத்துள்ளார். இந்த இரு கணக்குகள் மூலமாகவும் அவர் தனது படம் குறித்த தகவல்கள், நிகழ்ச்சி குறித்த அறிவிப்புகள் ஆகியவற்றை வெளியிட்டு வருகிறார்.

மேலும் தனது ரசிகர்களுடன் உரையாடுகிறார். இந்நிலையில் சல்மான் கானின் ஃபேஸ்புக் ஃபேன்ஸ்களின் எண்ணிக்கை 14 மில்லியனைத் தாண்டியுள்ளது. இது ஷாருக்கானுக்கு உள்ள ஃபேஸ்புக் ஃபேன்களின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகம். அதாவது ஷாருக்கானுக்கு ஃபேஸ்புக்கில் 7 மில்லியன் ஃபேன்ஸ் தான் உள்ளனர்.

சல்மான் கானை ட்விட்டரில் 6.3 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சென்னைக்கு உடனே தேவை, சிவப்பு விளக்குப் பகுதி - ஒரு இயக்குநரின் வேண்டுகோள்

சென்னை நகரில் கண்டிப்பாக சிவப்பு விளக்குப் பகுதி அமைக்கப்பட வேண்டும் என்று ஒரு புது இயக்குநர் அடம்பிடிக்கிறார்.

அவர் பெயர் யுரேகா. இயக்கும் படம்: சிவப்பு எனக்குப் பிடிக்கும்! ஏற்கெனவே மதுரை சம்பவம் என்ற படத்தை எடுத்தவர்.

ஜே சதீஷ்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த சிவப்பு எனக்குப் பிடிக்கும் படம் முழுக்க முழுக்க சிவப்பு விளக்கு சமாச்சாரங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாம்.

சென்னைக்கு உடனே தேவை, சிவப்பு விளக்குப் பகுதி - ஒரு இயக்குநரின் வேண்டுகோள்

ஆபாச படமா?

படத்தின் செய்தியாளர் சந்திப்பில் படம் குறித்துப் பேசிய இயக்குநர் யுரேகா, "பாலியல் தொழிலாளி பற்றிய கதை என்றதும் ஏதோ ஆபாசப் படம் என்று எண்ண வேண்டாம். ஆனால் இது ஆபாசப் படமல்ல, அந்த மாதிரி சமாச்சாரமெல்ல்லாம் இல்லை. இந்தப் படத்துக்காக இரண்டு ஆண்டுகள் கள ஆய்வு செய்தேன். பல பாலியல் தொழிலாளிகளைச் சந்தித்தேன்.

போலீஸ் - ரவுடி தொலலை

அதில் அவர்கள் சொல்லும் முக்கியமான பிரச்சனை போலீஸ்காரர்கள் மற்றும் ரவுடிகளின் தொல்லைதான்.

ஒரு பாலியல் தொழிலாளி ஒரு நாளைக்கு 1000 ரூபாய் சம்பாதித்தால் அவள் வீட்டுக்கு வெறும் 100 ரூபாயைத்தான் கொண்டு போகிறாள். மீதி பணத்தை போலீஸ் அதிகாரிகளும், ரவுடிகளும் பிடுங்கிக் கொள்கிறார்களாம்.

இனி பாலியல் போராளி

இதையெல்லாம் தவிர்க்க, பேசாமல் சென்னையில் சிவப்பு விளக்குப் பகுதி ஒன்றை ஆரம்பித்துவிடலாம். சென்னையில் பல குற்றங்களைக் குறைக்க இது உதவும். இந்தப்படம் வந்தபிறகு பாலியல் தொழிலாளி என்கிற பெயர் பாலியல் போராளி என்று மாறும்," என்றார் உணர்ச்சி வசப்பட்டு.

ஈசிஆர்ல வச்சிடுங்க

சென்னையில் இந்த மாதிரி பகுதிக்கு ஏற்ற இடம் எது என்று கேட்டால், சற்றும் யோசிக்காமல் 'கிழக்கு கடற்கரை சாலை', என்கிறார் யுரேகா!!

 

பல நடிகைகளும் மறுத்த பாலியல் தொழிலாளி வேடத்தில் சான்ட்ரா!

பல நடிகைகளும் நடிக்க மறுத்த பாலியல் தொழிலாளி வேடத்தை தைரியமாக ஏற்று நடித்துள்ளார் டிவி நடிகை சான்ட்ரா எமி.

மனைவி உள்பட பல சன் டிவி சீரியல்களில் நடித்திருப்பவர் பிரஜின். இவர் மனைவிதான் சான்ட்ரா. இவரும் பல சீரியல்களில் நடித்துள்ளார். சுற்றுலா போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

சிவப்பு எனக்குப் பிடிக்கும் என்ற படத்தில் பாலியல் தொழிலாளி வேடத்தில் நடிக்க பல நடிகைகளையும் கேட்டுப் பார்த்துள்ளார் இயக்குநர் யுரேகா.

பல நடிகைகளும் மறுத்த பாலியல் தொழிலாளி வேடத்தில் சான்ட்ரா!

ஆனால் பாத்திரத்தின் தன்மையைக் கேட்டபிறகு யாரும் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. இந்த வேடத்தில் நடித்தால் நிச்சயம் தன்னைப் பற்றி அதேபோன்ற இமேஜ்தான் இருக்கும் எனும் அளவுக்கு அந்த கேரக்டர் இருந்ததாம்.

பல நடிகைகளும் மறுத்த பாலியல் தொழிலாளி வேடத்தில் சான்ட்ரா!

ஆனால் சான்ட்ரா அதுபற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லையாம். அந்த பாத்திரத்தில் நடிப்பதில் உறுதியாக இருந்தாராம். பல காட்சிகளில் துணிச்சலாக நடித்துள்ளாராம்.

ஒரு நடிகை என்ற சாயலே இல்லாத மாதிரி நடித்து அசத்தியுள்ளாராம் சான்ட்ரா.

 

ஐம்பது நாட்களைத் தொட்ட ஜில்லா, வீரம்... ஆனா...!

சென்னை: விஜய் நடித்த ஜில்லா மற்றும் வீரம் படங்கள் 50 நாட்களைத் தொட்டுவிட்டதாக விளம்பரங்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இந்த விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தியேட்டர்கள் ஒன்றில்கூட இந்த இரண்டு படங்களுமே ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐம்பது நாட்களைத் தொட்ட ஜில்லா, வீரம்... ஆனா...!

விஜய் நடிக்க, ஆர் நேசன் இயக்கத்தில் ஆர் பி சவுத்ரி தயாரித்த ஜில்லா படம், கடந்த பொங்கலுக்கு வெளியானது.

அஜீத் நடிக்க, சிவா இயக்கத்தில் விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்த வீரம் படமும் பொங்கலன்று வெளியானது.

ஆரம்பத்தில் இந்த இரு படங்களுக்குமே வசூல் குவிந்ததாக தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து தகவல் கிடைத்தன.

ஆனால் ஒரு கட்டத்துக்குப் பிறகு, இந்த இரு படங்களிலிருந்துமே 'பைசா தேறவில்லை' என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயாரே அறிவிக்கும் அளவுக்குப் போய்விட்டது நிலைமை.

இந்த நிலையில் இரு படங்களும் 50 நாட்களைக் கடந்து ஓடுவதாக இன்றைய நாளிதழ்களில் விளம்பரங்கள் வெளியாகியுள்ளன.

சரி, விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அரங்குகள் எதிலாவது இந்தப் படங்கள் ஓடுகின்றனவா என்று விசாரித்தால்... அதிர்ச்சி காத்திருந்தது.

ஆம்.. இவர்கள் விளம்பரங்களில் போட்டுள்ள சத்யம், எஸ்கேப், அபிராமி, சங்கம், தேவி, மாயாஜால், ஐநாக்ஸ், பிவிஆர் என எந்த அரங்கிலுமே ஒரு காட்சி கூட இந்த இரு படங்களும் ஓடவில்லை!!

 

கபில் சிபல் எழுதி ரஹ்மான் இசையமைத்த ரானாக் ஆல்பம் - சல்மான்கான் வெளியிட்டார்!

மும்பை: ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையில், மத்திய அமைச்சர் கபில் சிபல் எழுதிய பாடல்கள் இடம்பெற்ற ரானாக் என்ற புதிய இசை ஆல்பத்தை நடிகர் சல்மான்கான் மும்பையில் வெளியிட்டார்.

கபில் சிபல் எழுதி ரஹ்மான் இசையமைத்த ரானாக் ஆல்பம் - சல்மான்கான் வெளியிட்டார்!

கபில் சிபலின் கவிதைகளுக்கும் ரஹ்மானின் இசைக்குமான ஒரு இனிய உரையாடலாக அமைந்த இந்த ஆல்பத்தில், ரஹ்மானின் குரல் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. அவர்தான் இந்த ஆல்பத்தின் பாடல்களை ஒரு கதையாக ஆல்பம் முழுக்கச் சொல்லியிருக்கிறார்.

இந்த ஆல்பத்தில் 7 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றை பாரத் ரத்னா விருது பெற்ற லதா மங்கேஷ்கரும், ஸ்ரேயா கோஷலும், ஜோனிதா காந்தியும் பாடியுள்ளனர். ஏ ஆர் ரஹ்மானும் பாடியுள்ளார்.

கபில் சிபல் எழுதி ரஹ்மான் இசையமைத்த ரானாக் ஆல்பம் - சல்மான்கான் வெளியிட்டார்!

இந்த ஆல்பத்தை வெளியிடும் நிகழ்ச்சி நேற்று பிரமாண்டமாக நடந்தது. ஆல்பத்தை வெளியிடும் சோனி நிறுவனம் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

அமைச்சர் கபில் சிபல், இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்க, நடிகர் சல்மான் கான் ஆல்பத்தை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய ஏஆர் ரஹ்மான், "எனது கற்பனைக்கும் இசைக்கும் ஏற்றமாதிரி ஒரு ஆல்பம் ரானாக். இது போன்ற ஒரு வாய்ப்புக்காக நீண்ட நாட்கள் காத்திருந்தேன். அமைச்சர் கபில் சிபலின் இந்த பாடல் வரிகளைக் கேட்டதும், அதற்கேற்ற இசை எனக்குள் உருவாக ஆரம்பித்துவிட்டது," என்றார்.

அமைச்சர் கபில் சிபல் பேசுகையில், "ரஹ்மான் என்றாலே உணர்ச்சி, இயல்பான அழகு, இறையுணர்வுதான் மனதில் தோன்றும். இசையோடு கலந்தவர் அவர். தான் செய்யும் அனைத்தும் கச்சிதமாக இருக்க வேண்டும் என எண்ணுபவர். அவரது மேதைமை என் வரிகளுக்கு உயிர் தந்துள்ளது," என்றார்.

வந்தே மாதரம் இசை ஆல்பம் தொடங்கி, தங்கள் நிறுவனத்துடனான ரஹ்மானின் தொடர்பை நினைவுபடுத்திப் பேசினார் சோனி இசை நிறுவனத்தின் ஸ்ரீதர் சுப்ரமணியம்.

 

இந்த காதல் முறிவுக்கு காரணம் நயனம்-விரல் நடிகரின் டீலா?

சென்னை: புஸு புஸு நடிகையும், விரல் வித்தை நடிகரும் பிரிந்து செல்ல ஒரு வேளை அந்த டீல் தான் காரணமாக இருக்குமோ என்று பலரும் பேசிக் கொள்கிறார்கள்.

விரல் வித்தை நடிகர் என்றைக்கு தனது முன்னாள் காதலியான நயன நடிகையுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்க துவங்கினாரோ அன்றைக்கே அவருக்கும், புஸு புஸு நடிகைக்கும் இடையேயான காதலில் விரிசல் ஏற்பட்டது.

ஆனால் அவர் யாருடன் நடித்தாலும் அது தொழில் அதை எல்லாம் தான் பெரிதுபடுத்த மாட்டேன் என்று புஸு புஸு நடிகை தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனக்கும், புஸு புஸு நடிகைக்கும் இடையே காதலும் இல்லை ஒன்றும் இல்லை தான் சிங்கிள் தான் என்று நடிகர் அறிவித்தார்.

முன்னதாக அவருடன் நடிக்க நயனம் போட்ட கன்டிஷனே தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது தானாம். அதற்கு நடிகரும் சம்மதம் தெரிவித்திருந்தாராம். இந்நிலையில் புஸு புஸு நடிகையுடனான காதல் முறிவுக்கு ஒரு வேளை நயனம் மற்றும் நடிகருக்கு இடையேயான திருணம டீல் தான் காரணமோ என்று பலர் கிசுகிசுக்கின்றனர்.

 

மும்பைக்கு ஜாகை மாறிய டாப்சி

நடிகை மும்பைக்கு ஜாகை மாறிய டாப்சி  

ஆனால் அவர் நம்பிக்கை மோசம் போனது. பெரிய வாய்ப்புகள் இல்லை. எந்த பெரிய ஹீரோவுடனும் அவரால் ஜோடியாக நடிக்க முடியவில்லை. அப்படி வந்த ஒரு வாய்ப்பிலும் இரண்டாவது நாயகி வேடம். லூசுத்தனமான அந்த பாத்திரமும் எடுபடாமல் போய்விட்டது.

இப்போதைக்கு முனி 3, வை ராஜா வை படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஹைதராபாதில் தங்கி தமிழ், தெலுங்குப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார் டாப்சி. இந்த நிலையில் இனி தமிழில் அதிக படங்கள் இல்லை என்பதால் இந்திக்குப் போனார். சாஸ்மி பதூர் படத்தில் நடித்தார். அந்தப் படத்தின் வெற்றியால் தொடர்ந்து இந்திப் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன.

இப்போது ரன்னிங் ஷாதி.காம் படத்தில் நடித்து வருகிறார். இனி இந்திப் படங்களில் நடிக்க வசதியாக, மும்பையிலேயே ஒரு வீடு எடுத்துத் தங்க முடிவு செய்துள்ளார். தீவிரமாக வீடு தேடிய அவர், இப்போது ஒரு ப்ளாட்டில் தங்கி புதிய வாய்ப்புகளைத் தேடி வருகிறாராம்.

 

குடிக்காதீங்க, புகை பிடிக்காதீங்க! - சிவகார்த்திகேயன்

குடிக்காதீங்க, புகை பிடிக்காதீங்க! - சிவகார்த்திகேயன்

மாணவர்கள் குடிப்பது, புகைப் பிடிப்பது போன்ற பழக்கங்களைக் கைவிட வேண்டும் என நடிகர் சிவகார்த்திகேயன் கேட்டுக் கொண்டார்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் நடந்த கல்லூரி விழாவில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயன் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசுகையில், "நான் பி.இ. எம்.பி.ஏ படித்திருந்தாலும் நடிப்புத் துறைக்கு விரும்பி வந்துள்ளேன்.

கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உங்களுக்கு பரிசுகள் வழங்கும் அளவுக்கு பிரபலமடைந்துள்ளேன் என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.

மாணவர்கள் மது குடிப்பது, புகை பிடிப்பது போன்ற பழக்கங்களுக்கு அதிகம் அடிமையாகி வருவது வேதனையாக உள்ளது. இவற்றை நிறுத்திக் கொள்ளுங்கள். மாணவ, மாணவிகள் பெற்றோர்களை மகிழ்ச்சியுடன் வைத்திருங்கள்.

இன்னும் 10 ஆண்டுகளில் சினிமாத் துறையில் நிறைய சாதிக்க வேண்டும் என்பது எனது நோக்கம். அதுபோல நீங்கள் படிப்பில் ஒரு குறிக்கோளை வைத்துக் கொள்ளுங்கள். படிப்புதான் உங்களை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும்," என்றார்.

 

சதா, மனிஷா யாதவுக்கு அம்மா யங் இந்தியா 2014 விருதுகள்!

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் 66வது பிறந்த நாளையொட்டி, அம்மா யங் இந்தியா விருது 2014 சென்னையில் வழங்கப்பட்டது.

நடிகைகள் சதா, மனிஷா யாதவ் உள்ளிட்டோருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

சதா, மனிஷா யாதவுக்கு அம்மா யங் இந்தியா 2014 விருதுகள்!

சென்னை தி நகரில் உள்ள ஆந்திரா க்ளப்பில், தமிழ் நாடு தெலுங்கு யுவசக்தி அமைப்பின் சார்பில் இந்த விருது வழங்கப்பட்டது.

சதா -மனிஷா

சதா, மனிஷா யாதவுக்கு அம்மா யங் இந்தியா 2014 விருதுகள்!

நடிகைகள் சதா, மனிஷா யாதவ், விஜய் டிவி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி ஆகியோருக்கு அம்மா யங் இந்தியா விருது வழங்கப்பட்டது.

இந்த விருது தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதுவதாகவும், முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் அமைந்த விருதினைப் பெருவது தங்கள் பாக்கியம் என்றும் விருது பெற்றோர் தெரிவித்தனர்.

 

கொழும்பில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை நடத்தக் கூடாது! -இயக்குநர் வ.கௌதமன்

கொழும்பில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை நடத்தக் கூடாது! -இயக்குநர் வ.கௌதமன்

சென்னை: விஜய் டிவியின் ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை கொழும்பில் நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் இயக்குநர் வ கவுதமன்.

2009ல் முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலை இன்னும் உலகம் முழுக்க வாழும் தமிழர் மனதில் இருந்து நீங்கவில்லை. அந்த ரணமும் இன்னும் ஆறவில்லை. ஒட்டு மொத்த அந்த இனப்படுகொலையில் 1,75,000 தமிழ் உறவுகளும், இறுதி நாளில் 40,000க்கும் மேற்ப்பட்ட தமிழ் உறவுகளும் படுகொலை செய்யப்பட்டது,உ லகம் முழுதும் அறிந்த உண்மை.

2009-2014 வரை 5 ஆண்டுகளாக உலகும் முழுக்க உள்ள தமிழர்கள் நீதி கேட்டு போராடிக் கொண்டு இருக்கும் நிலை இன்றைய நிலை. அது மட்டுமிலாமல் வரும் மார்ச் மாதம் ஐநாவில் மனித உரிமை தீர்மானம் நிறைவேறும் நேரத்தில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை கொழும்புவில் நடத்தப் போவதை அறிந்து மிகவும் சொல்லொண்ணா துயரத்துக்கு ஆளானோம்.

அதே நேரத்தில் (வரும் மார்ச்10) ஜெனிவாவில் நீதி கேட்டு மாபெரும் மக்கள் திரள் போராட்டம் நடக்கும் நேரத்தில் இந்த நிகழ்ச்சி நடப்பதுதான் வேதனையானது.

மார்ச்1, 2 தேதிகளில் ஒரு தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம், சிலோன் ஆர்ட்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை விஜய் டிவி நடத்துகிறது.

பம்லப்பட்டி புதிய கதிரேசன் மண்டபத்திலும் மருதானை செயின்ட் ஜோசப் கல்லூரியிலும் நிகழ்ச்சி நடப்பதாக அறிந்தோம்.

இலங்கையில் தமிழர்கள் ஆடிப்பாடி மகிழ்வாக உள்ளதாக உலகத்துக்குக் காட்டும் இலங்கை சிங்கள இனவாத அரசின் ராஜதந்திர நிகழ்வாகத்தான் இது நடக்கிறது. இதற்கு விஜய் டிவியும் துணை போவது கொடுமையானது.

தமிழக முதல்வர் சட்டமன்ற தீர்மானத்தோடு மட்டுமில்லாமல் தேர்தல் அறிக்கையிலும் இலங்கையில் நடைபெற்ற தமிழினப் படுகொலைக்கு தனித் தமிழ் ஈழமே தீர்வு, சர்வதேச பன்னாட்டு விசாரனை தேவை என தமிழர்களுக்கு தொடர்ந்து ஆதரவாக உள்ளார்.

இந்த சூழலில் கொழும்பில் இப்படி ஒரு நிகழ்வு நடப்பதும், அதற்கு விஜய் டிவி துணை போவதும் தமிழக அரசுக்கும் எதிரானது. எங்கள் பினங்களின் மேல் ஏறி நின்று யாரும் பணம் பார்க்க முயல வேண்டாம். எங்கள் உணர்வுகளை நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறொம். இதையும் மீறி நிகழ்ச்சி நடந்தால் மானமுள்ள தமிழர்களுக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டி வரும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

 

அபூர்வ நாயகன் - கமல் ஹாஸனைப் பற்றிய புத்தகம் வெளியீடு

நடிகர் கமல் ஹாஸனைப் பற்றி அபூர்வ நாயன் என்ற தலைப்பில் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசனின் அலுவலகத்தில், இப்புத்தகத்தை உருவாக்கிய ராமராஜ் காட்டன் நிறுவனத்தின் தலைவர் கே.ஆர்.நாகராஜன் இப்புத்தகத்தை வெளியிட, நடிகர் கமல்ஹாசன் பெற்றுக் கொண்டார்.

அபூர்வ நாயகன் - கமல் ஹாஸனைப் பற்றிய புத்தகம் வெளியீடு

இந்தப் புத்தகத்தில் கமல்ஹாசனின் பல அரிய புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கின்றன. அதோடு கமலின் சாதனைகளை விளக்கும் வகையில் சில கவிஞர்களின் கவிதைகளும், கமலின் திரையுலக சாதனைகள் குறித்த புள்ளிவிபரங்களும் இப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது.

இப்புத்தகம் வெளியிட்டது குறித்து குறிப்பிட்ட கே.ஆர்.நாகராஜன், "1960-ம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் சிறு பையனாக நுழைந்து இன்றுவரையிலும் தனது கடின உழைப்பால், வித்தியாசமான முயற்சிகளால் தமிழ்ச் சினிமாவின் புகழை உயர்த்தியிருக்கும் கமல்ஹாசனுக்கு ராமராஜ் காட்டன் நிறுவனம் செய்திருக்கும் ஒரு சிறிய சமர்ப்பணம் இது..," என்றார்.

 

தம்பிக்கு ஹீரோ சான்ஸ் கேட்கும் இளம் ஹீரோயின்

சென்னை: பெயரில் இனிமையை வைத்திருக்கும் நடிகை ஒருவர் தனது தம்பிக்கு ஹீரோ சான்ஸ் கேட்டு வருகிறாராம்.

பெயரில் இனிமையை வைத்திருக்கும் அந்த மூன்றெழுத்து யா நடிகைக்கு தம்பி மீது சற்றே பாசம் அதிகமாம். கேரளாவில் இருந்து வந்துள்ள அவர் தமிழில் பல படங்களில் நடித்துவிட்டார். ஆனால் இன்னும் அவர் எதிர்பார்க்கும் ஒரு பெரிய பிரேக் கிடைக்கவில்லை.

இந்நிலையில் அவர் தனது தம்பியை ஹீரோவாக்க திட்டமிட்டுள்ளார். இதனால் தனக்கு வாய்ப்பு கேட்டு செல்லும் இடங்களில் எல்லாம் தனது தம்பியின் போட்டோவை கொடுத்து ஒரு ஹீரோ சான்ஸ் கொடுத்துப் பாருங்களேன் என்று கேட்டு வருகிறாராம்.

நடிகை உயர்ந்த நடிகரின் ஐ ஆம் ரெட் மேன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தில் மங்களகரமான மேனனும் உள்ளார்.

 

உன் சமையல் அறையில்... இளையராஜாவின் இசைதான் ஹைலைட்!- பிரகாஷ்ராஜ்

சென்னை: உன் சமையல் அறையில் படத்தில் இளையராஜாவின் இசைதான் ஹைலைட்டாக இருக்கும் என படத்தின் இயக்குநரும் ஹீரோவுமான பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

பிரகாஷ் ராஜ் - சிநேகா நடிக்கும் புதிய படம் உன் சமையல் அறையில். மலையாளத்தில் வந்த சால்ட் அன்ட் பெப்பர் படத்தின் ரீமேக் இது. தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் தனித் தனிப் படமாக இது உருவாக்கப்படுகிறது.

உன் சமையல் அறையில்... இளையராஜாவின் இசைதான் ஹைலைட்!- பிரகாஷ்ராஜ்

மூன்று படங்களையும் பிரகாஷ்ராஜே இயக்குகிறார். ஹீரோவாகவும் நடிக்கிறார்.

இந்தப் படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். மூன்று மொழிகளுக்கும் தனித்தனியாக இசையமைக்கும் ராஜா, பாடல்களையும் தனித்தனியாகவே போட்டுக் கொடுத்துள்ளாராம்.

உன் சமையல் அறையில்... இளையராஜாவின் இசைதான் ஹைலைட்!- பிரகாஷ்ராஜ்

இதுகுறித்து பிரகாஷ்ராஜ் கூறுகையில், "இந்தப் படத்தின் ஸ்பெஷல் இளையராஜாவின் இசை. மிகச் சிறந்த பாடல்களை, பின்னணி இசையை இளையராஜா அமைத்துள்ளார். மூன்று மொழிகளுக்கும் தனித்தனிப் பாடல்கள். வரும் மார்ச்சில் இசை வெளியீட்டை நடத்தத் திட்டமிட்டுள்ளேன்," என்றார்.

 

எப்ப பார்த்தாலும் நான் தான் கிடைச்சேனா?: குமுறும் நடிகை

சென்னை: சிங்கத்தின் தற்போதைய நாயகி தன்னை பற்றி வரும் வதந்திகளால் கடுப்பாகியுள்ளாராம்.

லிங்கமான இயக்குனரின் படத்தில் சிங்கத்திற்கு ஜோடியாக டோலிவுட்டின் முன்னணி நடிகை நடித்து வருகிறார். அம்மணி பல படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் களைப்பு ஏற்பட்டதாலும், சக்திவாய்ந்த விளக்கு வெளிச்சத்தில் நின்று படப்பிடிப்பில் வேலை பார்த்ததாலும் அவரது உடல் நிலை சற்று பாதிக்கப்பட்டு 2 நாட்கள் ஓய்வெடுத்துள்ளார். இந்நிலையில் அவருக்கு தோல் வியாதி தீவிரமாகிவிட்டது என்று செய்திகள் வந்தன. இதை பார்த்த நடிகை கடுப்பாகிவிட்டாராம்.

ஒன்று யாருடனாவது காதல் என்று வதந்தியை பரப்புகிறார்கள் இல்லை என்றால் தோல் வியாதி என்று கூறுகிறார்கள். ஒரு மனுஷிக்கு களைப்பு ஏற்பட்டு ஓய்வெடுக்கக் கூட கூடாதா என்று குமுறுகிறாராம்.

 

இடம் பொருள் ஏவல்... விஜய் சேதுபதிக்கு ஜோடியான மனீஷா!

முதல் முறையாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார் வழக்கு எண், ஆதலால் காதல் செய்வீர் படங்களில் நடித்த மனீஷா யாதவ்.

பந்தா இல்லாத நடிகை என்ற பெயரைப் பெற்று மனீஷாவுக்கு அடுத்தடுத்து நல்ல வாய்ப்புகள் வருகின்றன.

சமீபத்தில் இவர் நடித்த ஆதலால் காதல் செய்வீர் படம் நன்றாகப் போனது. நல்ல பெயரையும் பெற்றுத் தந்தது.

இடம் பொருள் ஏவல்... விஜய் சேதுபதிக்கு ஜோடியான மனீஷா!

அடுத்து ஜன்னல் ஓரம் படத்தில் நடித்தார். இப்போது பட்டயக் கெளப்பணும் பாண்டியா படத்தில் நடித்து வருகிறார்.

இப்போது லிங்குசாமி தயாரிக்க, சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு நடிக்கும் இடம் பொருள் ஏவல் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் மனீஷா.

மனிஷாவைப் பொருத்தவரை இது பெரிய திருப்பு முனைதான். படப்பிடிப்பு கொடைக்கானலில் மார்ச் மாதம் தொடங்குகிறது.

 

சூது கவ்வும் சிம்ஹா - அதிதி நடிக்கும் ஆக்ஷன் த்ரில்லர் உறுமீன்!

சென்னை: சூது கவ்வும் படத்தில் நடித்த சிம்ஹா மற்றும் அதிதி நடிக்கும் புதிய ஆக்ஷன் த்ரில்லர் உறுமீன்.

ஜீரோ ரூல்ஸ் எண்டெர்டெய்ன்மெண்ட் டாக்டர் எல்.சிவபாலன் மற்றும் காபி சினிமாஸ் இணைந்து தயாரித்து வழங்கும் புதிய திரைப்படம் 'உறுமீன்'.

சூது கவ்வும் சிம்ஹா - அதிதி நடிக்கும் ஆக்ஷன் த்ரில்லர் உறுமீன்!

இது ஒரு ஆக்ஷன், திரில்லர் கதை. இப்படத்தை சக்திவேல் பெருமாள்சாமி இயக்குகிறார். அச்சு இசையமைக்கிறார். ஸ்ரீசரவணன் ஜி.மனோகரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

சூது கவ்வும் சிம்ஹா - அதிதி நடிக்கும் ஆக்ஷன் த்ரில்லர் உறுமீன்!

சூதுகவ்வும், நேரம், ஜிகர்தண்டா திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த சிம்ஹா கதாநாயகனாக நடிக்கிறார், கதாநாயகியாக அதிதி நடிக்கிறார்.

முக்கியமான கதாபாத்திரத்தில் காளி, வெங்கட், கலையரசன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

படத்தில் மிகமுக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க முன்னனி நடிகர் ஒருவருடன் பேச்சு நடத்தி வருகின்றனர். இப்படத்தின் பூஜை இன்று ஜீரோ ரூல்ஸ் அலுவலகத்தில் நடந்தது. தயாரிப்பாளர் சிவி குமார் மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் இதில் கலந்து கொண்டனர்.

சூது கவ்வும் சிம்ஹா - அதிதி நடிக்கும் ஆக்ஷன் த்ரில்லர் உறுமீன்!

கார்த்திக் சுப்பாராஜ் கிளாப் அடித்து படத்தை துவக்கி வைத்தார். இப்படப்பிடிப்பு மார்ச் மாதம் 5-ஆம் தேதி சென்னையில் தொடங்கி, கோவை, ஹைதரபாத் ஆகிய இடங்களில் நடக்கிறது.

 

சூரியத் தொலைக்காட்சியை விட்டு வெளியேறும் சித்தி?

சென்னை: லோக்சபா தேர்தலில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப் போவதாக முடிவெடுத்துள்ள சித்தி விரைவில் சூரியத் தொலைக்காட்சியை விட்டு வெளியேறுவார் என்று கூறப்படுகிறது.

சித்தி மூலம் சேனலில் நுழைந்த அவர் படிப்படியாக ப்ரைம் டைமில் பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்.

நாட்டாமை கணவரின் கட்சி ஆளுங்கட்சியை ஆதரித்த போதும் சீரியல்களை ஒளிபரப்புவதை நிறுத்தவில்லை சூரியச் சேனல்.

லோக்சபா தேர்தலில் தற்போது 40 தொகுதிகளிலும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப் போவதாக நாட்டாமை அறிவித்துவிட்டார். சித்தியும் அவருடன் சுற்றுப்பயணம் செய்யப் போகிறாராம்.

இதனால் சூரியச் சேனலில் சித்தி நிறுவனத்தின் சார்பில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி சீரியல்கள் நிறுத்தப்படுமா? என்றும் கேள்வி எழுந்துள்ளது.

மனைவி பிரச்சாரத்தில் ஈடுபடுவதால் அதற்கு ஈடாக ரூ 50 கோடி வேண்டும் என்று இலை தரப்பிடம் நாட்டாமை கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

எதற்கு அவ்வளவுப் பணம் என்று கேட்டதற்கு, மனைவி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டால், சூரிய டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களையும் நிறுத்தி விடுவார்கள். அதனால் கடுமையான நிதி இழப்பு ஏற்படும். அதை ஈடு செய்யும் விதமாக, பணம் தரவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதற்கு தலைமையோ இலை டிவியில ப்ரைம் டைம் ஸ்லாட் தருகிறோம் என்று கூறியதாகவும், சூரிய டிவி அளவுக்கு இலை டிவியில் டிஆர்பி ரேட்டிங் கிடையாது. அதனால, பணமாக கொடுக்க வேண்டும் என்று கேட்டாராம் நாட்டாமை. அதற்கு அதிமுக தலைமையோ பார்க்கலாம் என்று பதில் சொல்லி அனுப்பிவிட்டாராம்.

சூரிய டிவிக்கும் சித்திக்கும் இடையே கிட்டத்தட்ட 15 வருடத்திற்கும் மேலாகவே நட்பு உள்ளது. தொழில் வேறு அரசியல் வேறு என்று முடிவு செய்வார்களா? அல்லது சீரியல்களை உடனடியாக நிறுத்தி விடுவார்களா? என்பது போகப் போகத் தெரியும்.

 

மக்களவைத் தேர்தலில் ஆதரவு யாருக்கு? - ரஜினி ரசிகர்கள் ஆலோசனையா?

மக்களவைத் தேர்தலில் ஆதரவு யாருக்கு? - ரஜினி ரசிகர்கள் ஆலோசனையா?

சென்னை: மக்களவைத் தேர்தலில் ஆதரவு யாருக்கு என்பது குறித்து ரஜினி ரசிகர்கள் சென்னையில் கூடி ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் சேலத்திலும் கூடி ஆலோசனை நடத்துவதாகக் கூறப்படுகிறது.

ஆனால் இந்த செய்திகளை ரஜினிகாந்த் தலைமை ரசிகர் மன்றம் மறுத்துள்ளது.

ரஜினி வாய்ஸ்

தேர்தலுக்குத் தேர்தல் ரஜினி வாய்ஸ் குறித்து அரசியல் கட்சிகள், பத்திரிகைகள் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் காத்திருப்பது வழக்கம்.

1996, 1998, 2004- தேர்தல்களில் மட்டும் இந்தக் கட்சிக்கு ஆதரவு என ரஜினி வாய்ஸ் கொடுத்தார். ஆனால் அதன் பிறகு, ரசிகர்கள் தங்கள் விருப்பப்பட்ட கட்சிக்கு வாக்களிக்கலாம் என்று கூறிவிட்டார்.

இதனால் ரசிகர்களை வளைப்பதில் திமுக, அதிமுக இரண்டுமே தீவிரமாக வேலை பார்ப்பது வழக்கும். குறிப்பாக திமுக.

பாஜக கோரிக்கை

கடந்த சட்டமன்ற தேர்தலில் நல்லாட்சி அமைக்கும் கட்சிக்கு வாக்களிக்கும் படி கேட்டுக்கொண்டார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் ரஜினி எந்த கட்சியை ஆதரிப்பார் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. நரேந்திர மோடியுடன் நெருக்கமான நட்பு கொண்ட அவர், பாஜகவுக்கு ஆதரவு ஆதரவு தெரிவிக்கலாம் என்ற பேச்சு நிலவுகிறது.

பாஜகவினரும் ரஜினியின் ஆதரவை மேடை தோறும் கோரி வருகின்றனர்.

சென்னையில்

இந்நிலையில்தான் தமிழகம் முழுவதிலும் இருந்து ரஜினி ரசிகர் மன்ற பொறுப்பாளர்கள், ரஜினி ரசிகர் மன்ற பட்டதாரிகள் பேரவை, இளைஞர் பேரவையினர் ஆகியோர் சென்னையில் கூடி தேர்தலில் ஆதரவு யாருக்கு என ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளியாகின.

கூட்டத்தில், ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக கருத்து சேகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அடுத்து சேலம்

மேலும் சென்னையை அடுத்து சேலத்தில் கூட்டம் நடத்தி ஒவ்வொருவரிடமும் கருத்து கேட்கப்படுகிறது. அதன் அடிப்படையில் தீர்மானம் நிறவேற்றி ரஜினியிடம் ஒப்படைக்கப்படும் என்றும் கூறுகின்றனர்.

மறுப்பு

ஆனால் இந்த தகவல்களை அடியோடு மறுத்துள்ளனர் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற சென்னை நிர்வாகிகள். இதுகுறித்து சென்னை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் ராமதாஸிடம் கேட்டபோது, "இப்படியொரு நிகழ்வு நடக்கவே இல்லை. தேர்தல் குறித்து எந்த முடிவையும் தலைவர்தான் எடுப்பார். ரசிகர்கள் எடுக்க முடியாது. இப்படியொரு கூட்டம் எங்கே நடந்ததென்று எங்கள் யாருக்கும்தெரியாது. சேலம் மாவட்ட நிர்வாகிகளைக் கேட்டபோது, அப்படியொரு நிகழ்ச்சியை நடத்தும் திட்டம் இல்லை என்றுதான் சொன்னார்கள். யாராவது தனிப்பட்ட முறையில் பேசினார்களா என்று தெரியவில்லை. அதிகாரப்பூர்வமான நிர்வாகிகள் யாருக்கும் இதுபற்றிய தகவலே இல்லை," என்றார்.

 

இன்று ரஜினி - லதா 34வது திருமண நாள்! - வாழ்த்து சொல்ல திரண்ட ரசிகர்கள்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி - லதா தம்பதியரின் 34வது திருமண நாளுக்கு வாழ்த்துச் சொல்ல ரசிகர்கள் திரண்டனர்.

திரையுலகில் பிற நடிகர்களுக்கும் இளம் தலைமுறையினருக்கும் உதாரணமாகத் திகழும் தம்பதியர் ரஜினிகாந்த் - லதா.

இருவருக்கும் கடந்த 1981-ம் ஆண்டு இதே நாளில் திருப்பதியில் திருமணம் நடந்தது. நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள் சிலரைத் தவிர வேறும் யாருக்கும் திருமணத்துக்கு அழைப்பு தரவில்லை.

இன்று ரஜினி - லதா 34வது திருமண நாள்! - வாழ்த்து சொல்ல திரண்ட ரசிகர்கள்

பத்திரிகையாளர்கள் நிச்சயம் வரவேகூடாது என பிரஸ் மீட் வைத்தே கூறிவிட்டார். அப்படியும் மீறிச் சென்ற பத்திரிகையாளரைக் கடுமையாக எச்சரித்து அனுப்பினார் ரஜினி.

அதன் பிறகு சென்னையில் அனைவரையும் அழைத்து திருமண வரவேற்பு நடத்தினார்.

ரஜினி பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், திரையுலகைத் தீர்மானிக்கும் சக்தியாக அவர் திகழ்ந்தாலும், குடும்பத்தைப் பொருத்தவரை ஒரு எளிய தலைவனாக, மனைவிக்கு மரியாதை கொடுத்து, அதற்கேற்ப நடக்கும் ஒரு கணவனாக, பிள்ளைகளுக்கு அன்பான தகப்பனாகத் திகழ்கிறார்.

இந்த ஆண்டு திருமணம், அடுத்த ஆண்டு விவாகரத்து, அதற்கடுத்த சில மாதங்களில் மறு திருமணம்.. என்பதே பெரும்பாலானவர்களின் வாழ்க்கை முறையாகிவிட்ட இந்த திரையுலகில்... ரஜினி- லதா உதாரணத் தம்பதியராகத் திகழ்கின்றனர்.

இந்த ஆண்டு இருவருக்கும் திருமணமாகி 33 ஆண்டுகள் முடிந்து, 34 ஆவது ஆண்டு பிறக்கிறது. ஆண்டு தோறும் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12 மட்டுமல்ல, திருமண நாளான பிப்ரவரி 26-ம் தேதியும் வாழ்த்துச் சொல்ல அவர் வீட்டுக்கு ரசிகர்கள் செல்வது வழக்கம். அவர்களை வரவேற்று இனிப்பு வழங்குவார் லதா ரஜினிகாந்த்.

இந்த ஆண்டும் ஏராளமான ரசிகர்கள், திரையுலகினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் காலையிலிருந்து ரஜினிக்கும் லதாவுக்கும் மலர்க் கொத்துகள், பரிசுகள் கொடுத்து வாழ்த்துக் கூறி வருகின்றனர். அவர்களை வரவேற்று நன்றி கூறி இனிப்பு வழங்கினார் லதா ரஜினி.

 

அனிருத்துடன் நள்ளிரவில் ஆட்டம் போட்ட ஸ்ருதி!

மான் கராத்தே படத்துக்காக அனிருத் இசைShruti Haasan's late night fun with Anirudhயில் ஒரு பாடல் பாடியுள்ள ஸ்ருதி, இந்தப் பாடல் பாடிய அன்று அனிருத்துடன் நெருக்கமாக இருந்த படங்கள் வெளியாகியுள்ளன.

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய '3' படத்தில் ஹீரோயினாக நடித்தபோதே, அனிருத்துக்கு நெருக்கமான தோழியாகிவிட்டவர் ஸ்ருதி.

அனிருத்துடன் நள்ளிரவில் ஆட்டம் போட்ட ஸ்ருதி!

இப்போது தெலுங்கு, இந்திப் படங்கள் மிகவும் பிஸியாக உள்ளார் ஸ்ருதி. ஆனாலும் அனிருத் இசையமைக்கும் மான்கராத்தே படத்தில், அவருக்காக ஒரு பாடல் பாடியுள்ளார்.

ஸ்ருதிக்கு நேரமின்மையால் நள்ளிரவில் வந்து அந்தப் பாடலைப் பாடிக் கொடுத்தாராம். அதுமட்டுமல்ல, பாடல் பதிவு முடிந்தபிறகு நீண்ட நேரம் தன் நண்பருடன் மதுவிருந்திலும் பங்கேற்று உற்சாக ஆட்டம் போட்டுவிட்டுப் போனாராம் ஸ்ருதி.

இதுகுறித்து தனது ட்விட்டரில், 'அனிருத் இசையில் நள்ளிரவில் பாடல் பதிவு முடிந்தது. அன்று இரவு முழுவதும் ஒரே ஃபன் ஃபன் ஃபன்தான்... " என்று குறிப்பிட்டுள்ளார்.

 

ரஹ்மான் ஒரு ஜீனியஸ்... - மத்திய அமைச்சர் கபில் சிபல்

இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மாந் ஒரு ஜீனியஸ் என்று மத்திய அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.

மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் கபில் சிபல். இவர் அரசியல்வாதியாக மட்டும் இல்லாமல் தற்போது கவிஞராகவும் மாறியுள்ளார். தன் கைப்பட இவர் எழுதிய கவிதைகள் இப்போது பாடல்களாக வடிவம் பெற்றுள்ளன.

ரஹ்மான் ஒரு ஜீனியஸ்... - மத்திய அமைச்சர் கபில் சிபல்

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியாகியுள்ள ரானாக் என்ற ஆல்பத்தில் கபில் சிபலின் கவிதை வரிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த இசை ஆல்பத்தில் மொத்தம் 7 பாடல்கள் உள்ளன. இந்தப் பாடல்களில் கபில் சிபலின் சொந்த அனுபவங்களும் இடம்பெற்றுள்ளன.

இசை ஆல்பம்

இதுபற்றி கபில் சிபல் கூறுகையில், "ஒருவர் கவிதை எழுத தொடங்கினால் தன்னை சுற்றி இருப்பவை கூட அந்த பணியில் முக்கியமானவர்களாக வந்து சேர்ந்து விடும். எனது கவிதைகள் வழியே இதனை நான் கண்டுணர்ந்தேன். அதன் வெளிப்பாடு மிக அழகாக இருந்தது," என்று தெரிவித்துள்ளார்.

ஆல்பத்தின் கரு

ஒரு தனிப்பட்ட மனிதரின் வாழ்க்கை பயணம் தொடங்குவது மற்றும் ஒரு பெண்ணின் போராட்டங்கள் பற்றிய கதை பின் இறுதியில் அடையும் வெற்றி என்று தொடங்கி அன்பு, காதல் என பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த ஆல்பம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

"எனது கவிதைகளை இசையாக மாற்றுவதற்கு ரஹ்மானை தேர்ந்தெடுத்ததற்கு காரணம், அவரது தனிப்பட்ட பணி நேர்த்தி மற்றும் வேறுபட்ட மெல்லிசைகளை படைப்பதில் உள்ள அவரது விருப்பம் ஆகியவையே ஆகும். ரஹ்மான் ஒரு ஜீனியஸ். அவரது இசையில் எனது வார்த்தைகள் அதனுடைய ஆத்மாவை கண்டுள்ளன," என சிபல் குறிப்பிட்டுள்ளார்.

கவிதையில் விருப்பம்

மேலும் அவர் கூறுகையில், "ரஹ்மானின் படைப்புகள் புதிதாகவும் பாலிவுட் பாணியிலிருந்து மாறுபட்ட உணர்வையும் கொண்டவை. அவரது குரல் மற்றும் அதன் தன்மை ஆகியவை ஒழுங்கான வடிவத்தை கொண்டுள்ளது.

அவர் இசையை உருவாக்குகிறார். நான் பாடல்களுக்கு வரிகளை எழுதும்போது, அது சரியான வெளிப்படுத்துதலை கொண்டவரிடம் சென்று சேர வேண்டும் என விரும்பினேன். அது ரகுமான் இசையில் இருப்பதாக நான் நினைத்தேன்," என்றார்.

நேரம் ஏது?

இந்திய அரசியலில் அதுவும் மந்திரியாக முக்கிய பொறுப்பு வகிக்கும் கபில் சிபல், கவிதை எழுதுவதற்கு நேரம் ஏது?

"நீங்கள் ஏதேனும் ஒன்றை உண்மையிலேயே விரும்பினால், அதனை பின் தொடர்வதற்கு நிச்சயம் நேரத்தை கண்டுணர்வீர். நான் மனப்பூர்வமாக அன்பு வயப்பட்டேன். அதனை வெளியிடும் விதமாகவே, கடந்த ஒன்றரை வருடங்களாக இந்த பாடல்களை எழுதியுள்ளேன்," என்றார்.

 

அஜீத் 55.. திரைக்கதை வேலை முழுமை பெற்றது... மார்ச் இரண்டாவது வாரம் ஷூட்டிங்!

சென்னை: அஜீத்தை வைத்து கவுதம் மேனன் முதல் முறையாக இயக்கும் புதிய படத்தின் திரைக்கதைப் பணிகள் முடிந்து, லொகேஷனும் இறுதி செய்யப்பட்டுவிட்டது.

மார்ச் இரண்டாவது வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் அறிவித்துள்ளார்.

கவுதம் மேனனுக்கு இது கனவுப் படம் மாதிரிதான். ஏற்கெனவே அஜீத்துடன் அவர் இணையவிருந்த படம், அறிவிப்பு வெளியான நிலையில் ரத்தானது. அதன் பிறகு சூர்யாவுடன் சேர்ந்து படம் பண்ணுவதாக அறிவிக்கப்பட்டு அதுவும் கடைசியில் ரத்தானது.

அஜீத் 55.. திரைக்கதை வேலை முழுமை பெற்றது... மார்ச் இரண்டாவது வாரம் ஷூட்டிங்!

இந்த நிலையில் அஜீத்தே தேடி வந்து மீண்டும் ஒரு வாய்ப்பளித்தார் கவுதம் மேனனுக்கு. அதுதான் இந்தப் படம்.

சிம்பு படத்தை முடித்துவிட்டு, அஜீத் படத்தின் திரைக்கதைப் பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வந்தார் கவுதம் மேனன். அஜீத்துக்கு திருப்தியளிக்கும் வகையில் கச்சிதமாக திரைக்கதையை முடித்துவிட்ட கவுதம் மேனன், படப்பிடிப்புக்கான லொகேஷன்களையும் பார்த்து வைத்துவிட்டார்.

வரும் மார்ச் இரண்டாவது வாரத்தில் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் தெரிவித்துள்ளார். செப்டம்பரில் வெளியிடுவதாகத் திட்டமிட்டுள்ளனர்.

அஜீத்துக்கு இது 55வது படமாகும். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக மும்பையைச் சேர்ந்த நடிகை அறிமுகமாகிறார்.

 

வேல்முருகன் பாடிய குடி குடி... பாடலுக்கு தடை

வேல் முருகன் பாடிய குடி குடி... என்ற பாடலுக்கு தணிக்கைக் குழு தடை விதித்துள்ளது.

குரு சூர்யா மூவீஸ் தயாரிப்பில்ஆர் கே அன்பு செல்வன் இயக்கத்தில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் என் நெஞ்சை தொட்டாயே.

வேல்முருகன் பாடிய குடி குடி... பாடலுக்கு தடை

இத் திரைப்படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அதில் குடி குடி.... என துவங்கும் பாடலை பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் பாடியுள்ளார் .

வேல்முருகன் பாடிய குடி குடி... பாடலுக்கு தடை

தணிக்கை குழு அந்த பாடலில் வரும் சில வார்த்தைகளுக்கு தடை விதித்து, அதற்கு மாற்று வரியைச் சேர்க்குமாறு கூறியது.

அதன்படி மாற்று வரிகளைச் சேர்த்து தணிக்கை குழுவிடம் யு சான்று பெற்றனர். ஆனாலும் அந்தப் பாடலை திரையரங்குகளில் வேண்டுமானாலும் திரையிடலாம். ஆனால் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பக்கூடாது என்று தடை விதித்துள்ளனர்.

 

ஹாஹாஹா.. நான் அதிமுகவில் சேரப்போறேனா? - இயக்குநர் சேரன்

ஹாஹாஹா.. நான் அதிமுகவில் சேரப்போறேனா? - இயக்குநர் சேரன்

சென்னை: நான் அதிமுகவில் சேரப்போவதாக வந்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று இயக்குநர் சேரன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது பேஸ்புக்கில் தெரிவித்துள்ளதாவது:

ஹாஹாஹா..... நான் அதிமுக வில் சேரப்போவதாக ஒரு வதந்தி இன்று பரவ ஆரம்பித்து என் காதுக்கே வந்தது ஒரு பத்திரிக்கை நிருபர் மூலமாக.

மூன்று நாட்களாக தொடர்ந்து முதல்வரைப் பாராட்டி என் பேஸ்புக்கில் எழுதுவதாலும் பத்திரிக்கை செய்தியாக அது மாறுவதாலும் நான் அந்த கட்சியோடு சேரப்போகிறேன் என நினைத்துவிட்டார்கள் போல.

அரசாங்கம் மக்களுக்காக... மக்களுக்கான நன்மை கிடைக்கும் திட்டமோ செயலோ அரசாங்கம் செய்யும்போது நடுநிலையாளர்கள் பாராட்டவேண்டும் அப்போதுதான் தான் செய்யும் செயலுக்கான வரவேற்பு பார்த்து தொடர்ந்து மக்களுக்கு அரசு நிறைய செய்ய முன்வரும்.

ஒரு வருடத்திற்கு முன் தூக்குதண்டனை என்ற மனித வாழ்வியலுக்கு விரோதமான சட்டத்தையே முழுமையாக அகற்றக்கோரி ஒரு ஆவணப்படம் தயாரித்தேன்.

அதன் வழியில் இன்று அரசாங்கம் 7 பேரை விடுதலை செய்ததோடு அல்லாமல் தமிழ்நாட்டின் தமிழ்மொழியின் மானம் காக்க ஒரு இனத்தின் மீது சுமத்தப்பட்ட பழி அகற்றப்பட முன்னோடியாக செயல்படும் முதல்வரை பாராட்டுவதற்கும், என் தொழில் சில தாதாக்களின் கைகளில் மாறி சிக்கிக்கொண்டு சிலர் மட்டுமே பணம் கொள்ளையாக சம்பாரிக்க நல்ல திரைப்படம் எடுக்க நினைப்பவர்கள் நடுரோட்டில் நிற்கும் நிலை இன்று திரைஉலகில்... கட்டண உயர்வு காரணமாக மக்கள் படம் பார்க்க வரும் வாய்ப்பு குறைந்து வீட்டில் தொலைக்காட்சி பெட்டியில் திருட்டு விசிடி யில் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்... இந்த நிலையை அரசின் அம்மா திரையரங்கம் திட்டம் மாற்றிவிடவும் மறுபடியும் சினிமாத்தொழில் தழைத்தோங்கவும் வாய்ப்பிருக்கிறது.

இதுவே நான் இந்த இரண்டு நாட்களும் முதல்வர் பற்றி எழுத காரணம்... அதுக்காக எனக்கு அதிமுக உறுப்பினர் அட்டை வாங்கி மாட்டிருவிங்கபோல. ஓட்டுப்போடவே நூறு முறை யோசிக்கிற ஆளு நானு...," என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆமா, இப்படியொரு வதந்தி எப்போ பரவியது?!!

 

வழிதவறிப் போகாதவர்கள் பாலுமகேந்திராவும் மகேந்திரனும்!- இளையராஜா

சென்னை: தமிழ் சினிமாவில் வழி தவறிப் போகாத இயக்குநர்கள் பாலுமகேந்திராவும் மகேந்திரனும் என்று பாராட்டினார் இளையராஜா.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மகேந்திரன் - இளையராஜா இணையும் புதிய படத்தின் அறிமுக விழா பிரசாத் ஸ்டுடியோவில் நடந்தது.

வழிதவறிப் போகாதவர்கள் பாலுமகேந்திராவும் மகேந்திரனும்!- இளையராஜா

நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, "இயக்குனர் பாலு மகேந்திராவின் மறைவினால் தான் இந்த சந்திப்பு தாமதமானது. சிறந்த படைப்பாளிகளாக திகழ்ந்த இயக்குனர்களில் பலர், தங்கள் படைப்புகளில் சமரசங்கள் செய்துகொண்டு வழித்தவறி போய்விட்டனர். நான் சொல்வது தனிப்பட்ட முறையில் அல்ல.

சினிமா படைப்புகளை பொருத்தவரை அவர்கள் புகழ், மார்கெட் என பலவும் ஏறியிருக்கலாம். ஆனால், எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல் வழித்தவறாமல் சிறந்த படைப்புகளை கொடுத்தவர் பாலுமகேந்திரா. அவர் மறைவுக்குப் பிறகுதான் அவருக்கான இடம் என்னவென்பது பலருக்குப் புரிந்திருக்கிறது.

அந்த வகையில் இயக்குனர் மகேந்திரனும் இதுவரை எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் தனக்கென தனி இடத்தை தக்கவைத்துள்ளவர். மகேந்திரன் சொன்ன கதை எனக்கு பிடித்திருந்தது. இந்தப் படத்தில் அவருடன் இணைவது மகிழ்ச்சியாக உள்ளது," என்றார்.

 

காஷ்மீர் போன இடத்தில் நடிகை தபுவுக்கு திடீர் மூச்சுத் திணறல்... சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்

காஷ்மீர் போன இடத்தில் நடிகை தபுவுக்கு திடீர் மூச்சுத் திணறல்... சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்

காஷ்மீர்: பாலிவுட் நடிகை தபு திடீரென்று உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினார்.

தனது புதிய படமான "கைதர்" என்ற படத்தின் படப்பிடிப்புக்காக காஷ்மீர் சென்றிருந்தார் தபு. படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த போது,அவருக்கு திடீரென்று சுவாசக் குறைபாடு ஏற்பட்டுள்ளது.

கடுமையான ஜலதோஷத்தால் இந்த மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக அவர் அனுமதிக்கப் பட்ட காஷ்மீர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

படப்பிடிப்பு தளத்திலிருந்து 13கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அந்த மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட அவர் அன்று மாலையே வீட்டிற்கு திரும்பினார்.

இவர் கடைசியாக "ஜெய் கோ" படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

என்.எஸ்.கே மகன் கிட்டப்பா மரணம்- டிராபிக் நெரிசலில் ஆம்புலன்ஸ் வராததால் மரணித்த பரிதாபம்!

என்.எஸ்.கே மகன் கிட்டப்பா மரணம்- டிராபிக் நெரிசலில் ஆம்புலன்ஸ்  வராததால் மரணித்த பரிதாபம்!

பெங்களூர்: மறைந்த நகைச்சுவை மேதை என்.எஸ்.கிருஷ்ணனின் மகன் கிட்டப்பா பெங்களூரில் இன்று மரணமடைந்தார்.

உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டதால் ஆம்புலன்ஸை வரவழைத்தனர். ஆனால் போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்கிக் கொண்டு வர முடியாமல் போனதால் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மரணமடைந்த கிட்டப்பாவுக்கு வயது 72 ஆகும். ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி ஆவார். பெங்களூரில் தனது மனைவி இந்திராவுடன் வசித்து வந்தார்.

என்எஸ்கேவின் மாபெரும் ஹிட் படமான நல்லதம்பி படத்தில் கிட்டப்பாவும் நடித்திருந்தார்.

அவருக்கு நேற்று முன்தினம் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மனைவி இந்திரா, ஆம்புலன்ஸுக்குப் போன் செய்தார். ஆனால் ஆம்புலன்ஸ் வரும் வழியில் கடும் போக்குவரத்து நெரிசல் இருந்ததால் ஆம்புலன்ஸால் விரைவாக வர முடியாமல் போனது.

இந்த நிலையில் மூச்சுத் திணறல் அதிகமாகி கிட்டப்பா மரணமடைந்து போனார். ஒரு அரை மணி நேரத்திற்கு முன்பு ஆம்புலன்ஸ் வந்திருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

கிட்டப்பாவின் மகள் தேன்மொழி அமெரிக்காவில் இருக்கிறார். அவர் பெங்களூர் வந்துள்ளார். இன்று இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

புகைப்படக்காரருக்கு 'பஞ்ச்' விட்ட அவதார் ஹீரோ கைது

நியூயார்க்: அவதார் ஹாலிவுட் படத்தில் நடித்த ஹீரோ சாம் வொர்திங்டன் புகைப்படக்காரர் ஒருவரை தாக்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

புகைப்படக்காரருக்கு 'பஞ்ச்' விட்ட அவதார் ஹீரோ கைது

உலக அளவில் வசூலை அள்ளிக் குவித்த ஹாலிவுட் படமான அவதாரில் ஹீரோவாக நடித்தவர் சாம் வொர்திங்டன். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அவர் நியூயார்க்கில் நேற்று மாலை தனது காதலியுடன் வெளியே சென்றுள்ளார். அப்போது புகைப்படக்காரரான ஷெங் லி என்பவர் சாமின் காதலியை காலில் எத்தியுள்ளார்.

இதை பார்த்த ஹீரோவுக்கு கோபம் வந்து லி-க்கு ஆக்ரோஷமாக பஞ்ச் விட்டார். இதையடுத்து போலீசார் சாம் மற்றும் லியை கைது செய்தனர். எதற்காக லி சாமின் காதலியை எத்தினார் என்று தெரியவில்லை.

கைதான சாம் சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டார். ஆனால் அவர் வரும் புதன்கிழமை இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

 

என் படத்துக்கு தலைப்பை இளையராஜாதான் வைப்பார்! - மகேந்திரன்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தான் இயக்கும் புதிய படத்தின் தலைப்பை இளையராஜாதான் வைப்பார் என்று இயக்குநர் மகேந்திரன் தெரிவித்தார்.

முள்ளும் மலரும், ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, உதிரிப்பூக்கள் என தமிழ் சினிமாவில் காவியங்கள் படைத்த இயக்குநர் மகேந்திரன். அவர் படங்களுக்கு இளையராஜா அமைத்த இசை தனித்துவம் மிக்கது.

மகேந்திரன் படைப்புகளுக்கு ஜீவனாய் அமைந்த இசை. மகேந்திரன் எழுதாத வசனங்களை வாத்தியங்களால் எழுதியவர் இளையராஜா. இதை மகேந்திரனே பல முறை சொல்லியிருப்பது நினைவிருக்கலாம்.

என் படத்துக்கு தலைப்பை இளையராஜாதான் வைப்பார்! - மகேந்திரன்

இந்த இருவரும் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புதிய படத்தில் இணைகிறார்கள். அந்தப் படத்தின் அறிமுக விழா இன்று சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடந்தது.

நிகழ்ச்சியில் இளையராஜாவும் மகேந்திரனும் பங்கேற்றனர்.

இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. இதுகுறித்து செய்தியாளர்களிடம் மகேந்திரன் கூறுகையில், "நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படம் பண்ணுகிறேன். புதுமைப்பித்தன் எழுதிய ஒரு கதையை மையப்படுத்திதான் இந்தப் படத்தை உருவாக்குகிறேன்.

இந்த இடைப்பட்ட நாட்களில் எனக்கு நிறைய படங்கள் பண்ண வாய்ப்புகள் வந்தன. ஆனால் எனக்கே உரிய சில கிறுக்குத்தனங்களை சமரசம் செய்து கொள்ள முடியாததால் அவற்றை நான் ஒப்புக் கொள்ளவில்லை. இந்தப் படம் ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் கதை. நீங்கள் எல்லாம் அறிந்த கதைதான்.

இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. என் படங்கள் சிலவற்றுக்கு இளையராஜாதான் தலைப்பு வைத்தார். உதிரிப் பூக்கள் என்ற தலைப்பே அவர் வைத்ததுதான் (உடனே இளையராஜா யோசித்துவிட்டு... 'ஆமாம்' என்கிறார்!).

இந்தப் படத்துக்கும் அவர்தான் தலைப்பு வைப்பார்.

என் படங்களில் பெரும்பாலான வசனங்களை நான் எழுதவில்லை. இளையராஜாதான் எழுதியிருப்பார். குழப்பமா இருக்கா... நான் எடுத்த காட்சிகள் பெரும்பாலானவை மவுனமாகத்தான் இருக்கும். அந்த காட்சிகளுக்கெல்லாம் தன் இசையால் அர்த்தமுள்ள வசனங்கள் எழுதியவர் இளையராஜாதான். அவர் இல்லாமல் என் படங்கள் இல்லை," என்றார்.

 

இளையராஜாவின் யு ட்யூப் இணையதளம்!

இசைஞானி இளையராஜாவின் பாடல்களுக்கென யுட்யூப்பில் புதிய பக்கம் தொடங்கியுள்ளனர்.

Ilaiyaraajaofficial எனும் பெயரில் யு ட்யூபில் தொடங்கப்பட்டுள்ள இந்தப் பக்கத்தில் ராஜாவின் பாடல்களை ஒலி வடிவில் கேட்கலாம்.

ஆன்லைனில் இளையராஜாவின் பாடல்கள்தான் இன்று எங்கு பார்த்தாலும் நிரம்பியிருக்கின்றன. ஆனால் இவற்றில் முறையாக அனுமதி பெற்று இயங்குபவை மிகக் குறைவுதான்.

இளையராஜாவின் யு ட்யூப் இணையதளம்!

அந்தக் குறையைப் போக்கும் வகையில், ராஜாவின் ஆரம்ப படங்களிலிருந்து இன்றுவரை உள்ள பாடல்கள் அனைத்தையும், படங்கள் வாரியாக இந்த யு ட்யூப் தளத்தில் கேட்டு ரசிக்கலாம்.

ராஜாவின் இசையை இப்போது வெளியிட்டுவரும் அகி மியூசிக்காரர்கள் இந்த தளத்தை உருவாக்கி, பாடல்களை பதிவேற்றி வருகின்றனர்.

இப்போதைக்கு ஆனந்தகும்மி, ஆண் பாவம், வருஷம் பதினாறு, ஆனந்த ராகம் போன்ற படங்களின் முழுப் பாடல்களையும் இந்தத் தளத்தில் பதிவேற்றியுள்ளனர்.

 

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் விடுதலை - முதல்வருக்கு தமிழ் திரையுலகினர் நன்றி!

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு 23 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் உள்பட 7 பேரை விடுவிக்க உத்தரவிட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழ் திரையுலகம் ஆதரவும் நன்றியும் தெரிவித்துள்ளது.

ஜெயலலிதாவின் விடுதலை உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் திரையுலகம் சார்பில், சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் இயக்குநர் பாரதிராஜா தலைமையில் கூட்டம் நடந்தது.

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் விடுதலை - முதல்வருக்கு தமிழ் திரையுலகினர் நன்றி!

இந்த கூட்டத்தில், இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், "உலக நாடுகள் அனைத்தும் தூக்குத் தண்டனையை எதிர்க்கும் சூழ்நிலையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி சதாசிவம் மிக சரியான தீர்ப்பை சொல்லி இருக்கிறார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்வது மாநில அரசின் முடிவு என்று அவர் தீர்ப்பு கூறியதும் முதல்வர் ஜெயலலிதா தாய்மை உணர்வுடன் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேர் உள்பட சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

இதற்காக உலக தமிழர்கள் அத்தனைபேரும், கண்ணீரால் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவிக்க வேண்டும். மறப்பதும், மன்னிப்பதும் மனித மாண்பு. முதல் முறையாக தமிழன் தலை நிமிர்ந்து நிற்பதற்கான ஒரு முடிவை முதல்வர் ஜெயலலிதா எடுத்திருக்கிறார். இதற்காக ஒட்டு மொத்த தமிழர்களும் அவருக்கு உறுதுணையாக நிற்பார்கள்," என்றார்.

சத்யராஜ்

நடிகர் சத்யராஜ் பேசும்போது, "தலைமை பதவியில் இருப்பவர்கள் வீரமும், விவேகமும் உள்ளவராக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். அந்த வீரமும் விவேகமும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இருக்கிறது. இதற்காக தமிழ் திரையுலகம் முழு மூச்சாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நிற்கும்," என்றார்.

கேயார்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கேயார் பேசுகையில், "உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், மனித நேயத்துடன் முடிவெடுத்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி. இதில் அரசியல் கிடையாது. எனவே தமிழ் திரையுலகை சார்ந்த நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து நமது முதல்வருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்," என்றார்.

இந்த கூட்டத்தில், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி, தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி, பொருளாளர் வீ.சேகர், தென்னிந்திய திரைப்பட சம்மேளன தலைவர் அமீர், செயலாளர் ஜி.சிவா, பொருளாளர் அங்கமுத்து சண்முகம், கவிஞர் தாமரை, பட அதிபர் சித்ரா லட்சுமணன், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் ஆகியோர் பேசினார்கள். இயக்குநர் கவுதமன் நன்றி கூறினார்.

 

த்ரிஷ்யம் ரீமேக்கில் சிம்ரன்.. ஓகே சொன்ன கமல்

கமல் - சிம்ரன்... ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் பரபரப்புக் கிசுகிசுக்களுக்கு பஞ்சம் வைக்காத ஜோடி. குறிப்பாக பஞ்ச தந்திரம் உருவான நாட்களில், தினம் ஒன்றல்ல.. பத்து கிசுகிசுக்கள் வரும் இந்த இருவர் பற்றியும்.

த்ரிஷ்யம் ரீமேக்கில் சிம்ரன்..  ஓகே சொன்ன கமல்

பின்னர் இருவருக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை என்றாகிப் போனது. சிம்ரன் திருமணமாகி குழந்தை பெற்று மீண்டும் நடிக்க வந்துவிட்டார்.

கமலும் தன் காதல் இளவரசன் ஸ்டேடஸை வேறு நடிகர்களுக்கு விட்டுக் கொடுத்துவிட்டார்.

இந்த சூழலில் மீண்டும் சிம்ரனுடன் ஜோடி சேர ஓகே சொல்லியிருக்கிறார் உலகநாயகன்.

மலையாளத்தில் மோகன்லால் - மீனா நடித்து பெரும் வெற்றிப் பெற்ற த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கில் கமலும் சிம்ரனும் மீண்டும் இணைகிறார்கள்.

சிம்ரனா நதியாவா என்று ஆரம்பத்தில் கொஞ்சம் யோசித்த கமல், கடைசியில் சிம்ரனே இருக்கட்டும் என்று கூறிவிட்டாராம்.

 

நடிகர் அம்பரீஷ் நலமுடன் உள்ளார்.. வதந்திகளை நம்ப வேண்டாம்! - மனைவி சுமலதா விளக்கம்

பெங்களூர்: பிரபல கன்னட நடிகரும் ரஜினியின் நெருங்கிய நண்பருமான அம்பரீஷ் உடல்நிலை இப்போது சீரடைந்துள்ளதாகவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவரது மனைவி சுமலதா கூறியுள்ளார்.

கர்நாடக மாநில வீட்டு வசதித்துறை அமைச்சராக இருப்பவர் நடிகர் அம்பரீஷ்.

நடிகர் அம்பரீஷ் நலமுடன் உள்ளார்.. வதந்திகளை நம்ப வேண்டாம்! - மனைவி சுமலதா விளக்கம்

புகைப்பழக்கம் காரணமாக அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. மேலும் அவரது உடல்நிலை நேற்று இரவு மோசமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நுரையீரலில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். நோய் தொற்றை அகற்ற டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிக்கின்றனர்.

அத்துடன் அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு உள்ளது. டியூப் மூலம் திரவ உணவு செலுத்தப்படுகிறது.

வதந்தி

இதற்கிடையே, அம்பரீஷ் உடல்நிலை குறைத்து பல்வேறு வதந்திகள் இன்று காலை பரவின. இவற்றை மறுத்த அவர் மனைவி சுமலதா, "அவரது உடல்நிலை இப்போது சரியாக இருக்கிறது. வதந்திகளை நம்ப வேண்டாம்," என்றார்.

அம்பரீஷ் கன்னட படங்களில் முன்னணி நடிகராக இருந்தவர். தமிழில் ரஜினி, ஸ்ரீதேவி நடித்த 'ப்ரியா' படத்திலும் நடித்துள்ளார். இதில் ஸ்ரீதேவிக்கு ஜோடியாக வந்தார். ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர். முன்னாள் கதாநாயகி சுமலதாவின் கணவர்.

கன்னடம், தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் 208 படங்கள் நடித்துள்ளார் அம்பரீ்ஷ்.

மூன்று முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அம்பரீஷ், கடந்த 2006லிருந்து 2008 வரை மத்திய அமைச்சராகவும் இருந்தார். காவிரி பிரச்சினைக்காக தன் பதவியை ராஜினாமா செய்தார். இப்போது கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினராகவும் வீட்டு வசதித்துறை அமைச்சராகவும் உள்ளார்.