கத்தி, புலிப்பார்வையைத் திரையிட்டால் வெள்ளைத் திரைகள் கிழித்தெறியப்படும் - மாணவர் அமைப்பு ஆவேசம்

|

கத்தி, புலிப்பார்வை படங்களை நிச்சயம் திரையிட விடமாட்டோம். மீறி திரையிட்டால் வெள்ளைத் திரைகள் கிழித்தெறியப்படும், என தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர் இந்த அமைப்பினைச் சேர்ந்த செம்பியன், பிரபாகரன், மாறன், பிரதீப் குமார் மற்றும் ஜோதிலிங்கம் ஆகியோர்.

அப்போது அவர்கள் கூறுகையில், "கத்தி, புலிப் பார்வை படங்கள் ஈழ விடுதலைக்கு எதிராக இருக்கின்றன, அப்படி காட்சிகள் உள்ளன என்று கூறி நாங்கள் எதிர்க்கவில்லை. அந்தப் படத்தைத் தயாரிப்பவர் ராஜபக்சேவின் கூட்டாளியான லைக்கா நிறுவனத்தின் அதிபர் சுபாஷ்கரன் அல்லிராஜா என்பதால்தான் எதிர்க்கிறோம்.

கத்தி, புலிப்பார்வையைத் திரையிட்டால் வெள்ளைத் திரைகள் கிழித்தெறியப்படும் - மாணவர் அமைப்பு ஆவேசம்

இலங்கைக்கு பொருளாதார ரீதியாக உதவும் லைக்கா நிறுவனம் தமிழகத்தில் கால்பதிக்க விடக் கூடாது. இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றும் வகையில், கத்தி படத்துக்கு தமிழக அரசே தடை விதிக்க வேண்டும்.

இன்னொரு படமான புலிப் பார்வையில், எங்கள் தம்பி பாலச்சந்திரனை சிறார் போராளியாகச் சித்தரித்துள்ளனர். சுப்பிரமணிய சாமி போன்றவர்கள் சொன்ன அதே தவறான கருத்தை உறுதிப்படுத்துவது மாதிரி காட்சிகளை அமைத்துள்ளனர். இது இனப்படுகொலைக்கான ஆதாரங்களை மழுங்கடிக்கச் செய்யும் செயல்.

எனவே இந்த இரு படங்களையும் தமிழகத்தில் வெளியிட அனுமதிக்க மாட்டோம். மீறி அனுமதித்தால், தியேட்டர்களின் வெள்ளைத் திரைகள் கிழித்தெறியப்படும்."

-இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

 

Post a Comment