-முத்துராமலிங்கன்
'உத்தம வில்லரான' கமலுக்கு பத்திரிகையாளர்கள் மீது எப்போதும் அதீத பாசம். அதனால் மக்களுக்கு 2.30 மணிநேரம் போதும் என்று முடிவு செய்த படத்தை எங்களுக்கு மட்டும் 3 மணி நேரப்படமாக காண்பித்தார். அது கமல் கணக்கு.
‘என் சொந்த அந்தரங்கங்களை கிசுகிசுக்களாக எழுதிப் பொழைத்த புண்ணியவான்களே, உங்களுக்காக இந்தப் படம் சமர்ப்பணம்' என்று ஒரு நக்கல் கார்டு படத்தின் துவக்கத்தில் போடத் திட்டமிடப்பட்டு கடைசி நிமிடங்களில் அத்திட்டம் கைவிடப்பட்டதாக கமலுக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து கேள்விப்பட்டேன்.
அப்படி செய்திருந்தாலும் தப்பில்லை என்றுதான் படம் பார்க்கும்போது தோணியது. ஏனெனில் இனி பத்திரிகையாளர்கள் தனது காதல் கதைகளை கிசுகிசுக்களாக எழுத முடியாதபடிக்கு மொத்தத்தையும் அவரே எழுதிக்கொண்ட படமே ‘உத்தம வில்லன்'. (என்னா ஒரு வில்லத்தனம்?')
இது நடந்தது சுமார் பனிரெண்டு வருடங்களுக்கு முன்னால்...
நம்ம உத்தமர் கமல், நடிகை சிம்ரனுடன் தீவிர காதலில் இருந்த சமயம். நான் ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்த பத்திரிகை ஒன்றில் சின்னப் பயலுக சிலபேர் கமல் குறித்த வதந்திகளை, தங்களுக்கு அப்படிப்பட்ட வாய்ப்புகள் கிடைக்காத வயித்தெரிச்சலில், தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருந்தார்கள்.
ஒரு மனிதன் எவ்வளவு காலத்திற்குத்தான் வலிக்காத மாதிரியே நடிக்கமுடியும்?' நண்பர் ஒருவர் மூலம் எனக்கு பஞ்சாயத்துக்கு அழைப்பு விடுத்தார் கமல். நமக்கு பில்டிங், பேஸ்மெண்ட் ரெண்டுமே வீக் என்பதால், கடுமையான வசவுகளுக்கிடையே, ரெண்டு சாத்து விழுந்தாலும் வாங்கிக்கொள்ள தயாராகவே நான் அவரது ஆழ்வார்ப்பேட்டை இல்லத்துக்கு சென்றேன்.
உள்ளே வரும்படி அழைப்பு. கமல் மட்டும் தனித்து அமர்ந்திருந்தார். நான் வணக்கம் சொல்ல, பதில் வணக்கம் சொல்லாமல் அமைதியாக இருந்தார். சேரில் அமரும்படி சைகை செய்தார். சில நிமிடங்களில் பச்சைத் தண்ணீரும் (இப்பிடி அழுத்தமா சொல்லவேண்டியதா இருக்கு) தேநீரும் வந்தது. பழையபடி சாப்பிடும்படி சைகை. குடித்தேன். ‘அவரே அடிக்கமாட்டாரோ, யாராவது ஸ்டண்ட் யூனியன் ஆளுங்க வருவாங்களோ? ஆனா அந்த அளவுக்கு நாம ஒர்த் இல்லையே?' இப்படி சில வசன ஓட்டங்கள் ஓடிக்கொண்டிருக்க, சுமார் பத்து நிமிட மவுனத்திற்குப் பிறகு லேசாய் கையெடுத்து கும்பிட்டபடி ‘நீங்க போகலாம்' என்பது போல் கமல் அடுத்த அறைக்குள் போய்விட்டார்.
கமல் எப்போதுமே புரிகிற மாதிரி குழப்பி, சொல்ல வேண்டியதைச் சொல்லாமல் விட்டு, ‘இருந்தா நல்லாருக்கும் ஆனா இல்லை போல இருக்கே.. அப்புறம் நீங்களே மானே தேனே பொன்மானே போட்டு ஒரு முடிவுக்கு வந்துக்கங்க' போன்ற தில்லாலங்கடி டீலிங்குகளை இளம்பிராயத்திலிருந்தே கண்டும் கேட்டும் வளர்ந்தவனாகையால் பெரும் குழப்பங்களின்றி அலுவலகம் வந்து சேர்ந்தேன்.
அவரது மவுனத்துக்கு அர்த்தம் ‘ஏண்டா பொடிப்பயலே என் காதல் அனுபவங்களை சரியா புரிஞ்சிக்க உனக்கு வயசும் அறிவும் பத்தாது' என்பது போல, சுமார் பனிரெண்டு வருடங்களுக்குப் பிறகு ‘உத்தம வில்லன்' பார்த்தபோது புரிந்துகொண்டேன்.
‘இணையங்களில் ‘உத்தம வில்லன்' படக் கதையை இதுவரை பல லட்சம் பேர் எழுதிவிட்டார்கள் என்பதால் நான் கண்டிப்பாக எழுத வேண்டியதில்லை. போக இது அப்படம் குறித்த விமர்சனமும் அல்ல.
மனிதர்களின் வாழ்க்கையை ஒரு காதல் ஒரு திருமணம் என்பதோடு முடித்துவிட முடியாது. அவ்வாறு காண்பிக்கப்படும் சித்திரங்களெல்லாம் படு போலித்தனமானவை. நின்ன காதல், ஓடிய காதல், சொன்ன காதல், சொல்ல முடியாமல் மனசுக்குள் மென்ன காதல் என்று எல்லோரும் பல வெரைட்டிகளைக் கடந்து வந்தவர்கள்தாம்.
நிகழ்காலத்தில் கடுமையாக அவதூறு செய்யப்படும் காதல்களை கொஞ்சம் காலம் கடந்து சீர்தூக்கிப் பார்த்தால் கண்களில் வெள்ளம் மடை திறக்க பரவசத்துடன் பார்ப்பீர்கள் என்பது மறுபடியும் கமல் கணக்கு. இதில் கமல் பாதி வெற்றி பெற்றிருக்கிறார். வயதான காதல் மன்னர்கள் படத்தைப் போற்றிப் பாடடி பெண்ணே' என்கிறார்கள். இதில் சில ரஜினி ரசிகர்களும் அடக்கம்.
இன்னொரு குரூப்போ கமலுக்கு நட்டு கழண்டு விட்டது. அதனால் சொந்தக் கதையை எடுத்து சூனியம் வைத்துக் கொள்கிறார் என்று வசை பாடுகிறார்கள்.
தவறாமல் விமர்சனங்களை வைத்துக் கொண்டே கமலை வெகுவாக ரசித்து வந்தவன் நான். ‘உத்தம வில்லனை' என்னைப் பொறுத்தவரை கமலின் மிக முக்கியமான படங்களில் ஒன்றாகவே பார்க்கிறேன். வாணி, சரிகா, சிம்ரன் (அதுதான் டாக்டராக வரும் ஆண்ட்ரியா கேரக்டர்) தொடங்கி இடையில் சொல்ல மறந்த அல்லது சொல்லவிரும்பாத சிலர்களின் வழியாக கவுதமி வரை அனைவருக்கும் கமல் வழங்கும் தன்னிலை விளக்கமாகவே நான் இப்படத்தைப் பார்க்கிறேன்.
கூடவே அவரது பாவமன்னிப்பு கோரலும் அனைத்து காட்சிகளிலும் இருந்துகொண்டே இருக்கிறது. வேறு யாருக்கு வரும் இந்த துணிச்சல்?
ஆண்ட்ரியாவுக்கும் தனக்கும் இருக்கும் கள்ளக்காதல் யாருக்கும் தெரியக் கூடாதென்று ட்ரைவரிடமும் நண்பரிடமும் சத்தியம் வாங்கி, அதைக் காட்சியாக்கி, ஊருக்கெல்லாம் சொல்கிற தைரியம் கமலைத் தவிர யாருக்கு வரும்?
மேனேஜரால் இரு கடிதங்கள் மட்டுமே மறைக்கப்பட்ட மனோன்மணி-ரஞ்சன் காதல் கதை, அவர்களுக்குப் பிறந்த பெண் குழந்தை வளர்ந்து கல்லூரி மாணவியாய் (பார்வதியிடம் டச்-அப் பாய் வேலை கிடைக்குமா?) எதிரில் வந்து பார்வையால் சுட்டுப் பொசுக்குவது கிளாஸிக் எபிசோட் என்றால், பாலசந்தர் மற்றும் பழம்புராண ஃப்ளாஷ்பேக் படு அபத்தம். நல்ல சமாச்சாரங்களுக்கு மத்தியில் பல படங்களில் இவ்வகையான ஆர்வக் கோளாறு முயற்சிகள் கமலின் ரத்தத்தோடு கலந்தவை.
மனோரஞ்சன் என்ற மாபெரும் கலைஞன் மரணித்தால் மட்டுமே அவனது பழைய காதல்களை மக்கள் மன்னித்து ஏற்றுக்கொள்வார்கள் என்ற சாமர்த்திய ஸ்கிரிப்டில் கமல் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார்.
மற்றவர்கள் எப்படியோ இந்த ‘மரண' க்ளைமாக்ஸை நான் புரிந்துகொண்ட விதம், வயதாகிவிட்டதால் ‘காதல் மன்னன்' கமல், தன் காதல் கணக்கை ‘உத்தம வில்லன்' படத்தோடு முடித்துக்கொண்டார், இனி அவருக்கு காதலிக்க நேரமில்லை' என்பதாகத்தான்.
'அப்ப இனிமே உங்களைப் பத்தி கிசுகிசு எழுதாம நாங்க எப்பிடி பொழைக்கிறது கமல்? சொல்லுங்க மன்னா சொல்லுங்க!
(தொடர்வேன்...)
Post a Comment