சென்னை: கமல்ஹாசன் நடித்த ‘உத்தம வில்லன்' திரைப்படம் இன்னமும் ரிலீஸ் ஆகாத காரணத்தால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். படத்திற்கான சிக்கல் தீர்ந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில் இன்னமும் படம் வெளியாகவில்லை. இதனால் உத்தமவில்லன் எப்போது படம் வெளியாகும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கமல்ஹாசன், பூஜாகுமார், ஆண்ட்ரியா, பார்வதி மேனன் ஆகியோர் நடித்து, ரமேஷ் அரவிந்த் டைரக்ஷனில், டைரக்டர் லிங்குசாமியின் தம்பி என்.சுபாஷ் சந்திரபோஸ் தயாரித்த படம், ‘உத்தம வில்லன்.' ரூ.55 கோடி செலவில் தயாரான பிரமாண்டமான படம் இது. தமிழ்நாடு முழுவதும் 400 தியேட்டர்களில் மே 1ஆம் தேதி இந்த படம் திரைக்கு வருவதாக இருந்தது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களிலும் படம் வெளிவர இருந்தது.
தியேட்டர்களை ‘கட் அவுட்' மற்றும் தோரணங்களால் ரசிகர்கள் அலங்கரித்து இருந்தார்கள். மே 1ஆம் தேதி காலை 8 மணிக்கே முதல் காட்சி நடைபெற இருந்ததால், 5 மணிக்கே ரசிகர்கள் தியேட்டர்கள் முன்பு கூடி விட்டார்கள்.
‘பைனான்ஸ்' பிரச்சினை காரணமாக, ‘உத்தம வில்லன்' படம் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது. காலை காட்சியும், பகல் காட்சியும் நடைபெறவில்லை. முன்பதிவு செய்திருந்த ரசிகர்களுக்கு தியேட்டர்களில் கட்டணத்தை திருப்பிக் கொடுத்தார்கள். ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்கள்.
பிரச்சினை என்ன?
உத்தம வில்லன்' படம் ‘பைனான்ஸ்' பிரச்சினையால் வெளிவர தாமதம் ஆன விவகாரம், தமிழ் பட உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. படத்தின் தயாரிப்பாளருக்கும், பைனான்சியர்களுக்கும் இடையே சென்னையில் உள்ள பிலிம்சேம்பர்' கட்டிடத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் தயாரிப்பாளர்கள் சார்பில் லிங்குசாமி, என்.சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய இருவரும் கலந்து கொண்டார்கள். பைனான்சியர்கள் சார்பில் அவர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது.
படம் வெளியாகவில்லை
காலை தொடங்கிய பேச்சுவார்த்தை மாலை 3 மணி வரை நடைபெற்றது. அதில், இரு தரப்பினருக்கும் இடையே சமரச உடன்பாடு ஏற்பட்டதாகவும், எனவே மாலை காட்சிக்கு, ‘உத்தம வில்லன்' படம் வெளிவந்து விடும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ‘உத்தம வில்லன்' படம் மாலை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், மாலை காட்சிகளும் ரத்து செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்கள்.
பத்திரிகையாளர்களுக்கு படம்
இதனிடையே நேற்று பத்திரிகையாளர்கள் காட்சி திரையிடப்பட்டது. அவர்களும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை எழுதிவருகின்றனர்.
கமல் திரும்பினார்
‘உத்தம வில்லன்' படம் திரையிடப்படுவதில் தொடர்ந்து சிக்கல் நீடிப்பதை தொடர்ந்து துபாயிலிருந்து நடிகர் கமல்ஹாசன் அவசரமாக சென்னை திரும்பியுள்ளார்.
இன்றும் தாமதம் ஏன்?
இதனிடையே உத்தம வில்லன் படம் தொடர்பாக நிதி பிரச்சனையில் ஒருசில ஆவணங்களில் கையெழுத்து பெறப்பட்ட பின்னர் திரையிடப்படும் என்று தகவல் வெளியானது. ஒருவழியாக சிக்கல் தீர்ந்துவிட்டது என்றும் இன்று படம் 11 மணிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டது. இதனையடுத்து ரசிகர்கள் கமலின் கட் அவுட்களுக்கு அபிஷேகம் செய்தனர். ஆனாலும் அறிவித்த இன்றும் படம் வெளியாகவில்லை.
ரசிகர்கள் விரக்தி
இதனால் விரக்கியடைந்த ரசிகர்கள், கமல் படத்தை பார்க்காமல் இந்த இடத்தை விட்டு நகரப்போவதில்லை என்று தெரிவித்துள்ளனர். கடைசியாக வந்த தகவலின்படி படம் 1 மணிக்கு வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment