அட கொடுமையே... சென்சாருக்கு அனுப்பிய படப் பிரதியிலிருந்து வெளியான திருட்டு விசிடி!

|

திருட்டு விசிடி எங்கிருந்து வருகிறது... ?

அ. பிராஸஸிங் லேபிலிருந்து

ஆ. தியேட்டரிலிருந்து..

இ. வெளிநாட்டுப் பிரதியிலிருந்து

-இவற்றில் எது சரியான விடை என்று கேட்டால், குத்துமதிப்பாக, மூன்றுமே சரியான விடைதான் என்று கூறிவிடுவார்கள் தமிழ் சினிமாவில்.

இந்த இந்த விடைகளில் புதிதாக ஒன்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அது, 'சென்சாருக்கு அனுப்பப்படும் பிரதியிலிருந்து!'

கேரளாவில் சமீபத்தில் ரிலீசாகியுள்ள ப்ரேமம் என்ற மலையாளப் படத்தின் திருட்டு விசிடி இப்படித்தான் வெளியாகியிருக்கிறது. இதுதான் இன்றைய பரபரப்புச் செய்தி.

Pirated copies of 'Premam' leaked from Censor Board?

அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் நவீன் பாலி நடித்துள்ள ப்ரேமம், மலையாளப் பட உலகில் இந்த ஆண்டின் மிகப் பெரிய ப்ளாக்பஸ்டர். இதுவரை ரூ 30 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு.

இந்த நிலையில் படத்தின் திருட்டு விசிடி வெளியாகிவிட்டது. ஒரிஜினல் சிடி மாதிரியே தரமாக தயாரித்து புழக்கத்தில் விட்டுள்ளனர். சிடியைப் போட்டுப் பார்த்தவர்களுக்கு ஒரு அதிர்ச்சி... அதில் 'சென்சார் காப்பி' என்ற வாட்டர் மார்க் பளிச்சென்று தெரிகிறது.

அதாவது சென்சாருக்கு அனுப்பிய ஒரிஜினல் பிரதியிலிருந்து அப்படியே பதிவிறக்கு சிடியை தயாரித்துள்ளனர். இந்த திருட்டு வேலையைச் செய்தது யார்? சென்சார் குழு உறுப்பினர்களுக்கு இதில் ஏதும் பங்கிருக்குமா என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது.

இதுகுறித்து சைபர் பிரிவிலும் சென்சாரிலும் புகார் தெரிவித்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் அன்வர் ரஷீத்!

 

Post a Comment