ஹைதராபாத்: நாகர்ஜுனா - அமலா தம்பதிகளின் இளைய மகன் அகில் அக்கினி ஹீரோவாக அறிமுகமாகும் பெயரிடப்படாத திரைப்படம் ஆந்திராவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதன் விநியோக உரிமையில் சாதனைகள் படைக்கப்பட்டு வருகிறதாம்.
தெலுங்கு உலகின் சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா, நடிகை அமலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நாக சைதன்யா மற்றும் அகில் அக்கினி என 2 மகன்கள் இருக்கின்றனர்.
இதில் நாக சைதன்யா ஏற்கனவே ஹீரோவாக அறிமுகமாகி காலூன்றி விட்டார், தற்போது இந்த தம்பதிகளின் இளைய மகன் அகில் அக்கினி பெயரிப்படாத ஒரு புதிய தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.
தெலுங்கின் பிரபல இயக்குநர் வி.வி.விநாயக் இயக்கி வரும் இப்படத்திற்கு அனூப் ரூபென்ஸ் உடன் இணைந்து தமன் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் நாயகனாக அறிமுகமாகும் அகில் இதற்கு முன்பு மனம் திரைப்படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் வந்து சென்றிருக்கிறார்.
இவர் வேறு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. நடித்துக் கொண்டிருக்கும் படமும் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் படத்திற்கு ஏக கிராக்கி ஏற்பட்டுள்ளது. படத்தின் விநியோக பிசினஸ் சூடு பிடித்துள்ளது.
ஆந்திர பிராந்திய விநியோக உரிமை சுமார் 18 கோடிக்கு விலைபோயிருக்கிறது. அறிமுக நடிகர் ஒருவரின் திரைப்படம் இந்த அளவு விலை போவது தெலுங்கு தேசத்தில் இதுவே முதல்முறையாம். அதேபோல நிஜாம் உள்ளிட்ட பிற பகுதிகளிலும் பெரும விலைக்கு பட விநியோக உரிமை போயுள்ளதாக கூறுகிறார்கள்.
Post a Comment