கபாலி தலைப்பு பிரச்சினை... சீக்கிரம் சரி செஞ்சுடுவோம்! - கலைப்புலி தாணு

|

கபாலி படத் தலைப்பு பிரச்சினை விரைவில் சரி செய்யப்படும் என்று தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அறிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கும் புதிய படத்தின் தலைப்பு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

படத் தலைப்பு கபாலி என அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே, அதே தலைப்பில் வேறு ஒரு படம் உருவாகிக் கொண்டிருப்பதும், அண்மையில்தான் அதன் பாடல் வெளியீடு கூட நடந்தது என்ற தகவலும் வெளியாகின.

Kabali titler issue will be solved, says Thaanu

இது படக்குழு மற்றும் ரஜினி ரசிகர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியது. கபாலி என்ற தலைப்பை முழுமையாகக் கொண்டாட முடியவில்லையே என ஆதங்கப்பட்டனர் ரசிகர்கள்.

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக உள்ள தாணுவின் படத்துக்கே இப்படி தலைப்பு பிரச்சினை வரலாமா? தயாரிப்பாளர் சங்க லிஸ்டில் சரி பார்க்காமல் போனது எப்படி என்று திரையுலகினர் கேட்கிறார்கள்.

இன்னொன்று, ரஜினியின் 40 ஆண்டு திரை வாழ்க்கையில் தலைப்புப் பிரச்சினை என்று வந்ததே இல்லை.

இதைப் பற்றி கலைப்புலிதாணுவிடம் கேட்டபோது, "எங்கள் படத்துக்கு கபாலி என்று பெயர் வைக்கலாம் என்று முடிவு செய்தவுடன், தயாரிப்பாளர்கள் சங்கம், சேம்பர், கில்டு ஆகிய எல்லா இடங்களிலும் விசாரித்துப் பார்த்தோம். ஓப்பனாகத்தான் இருந்தது. அதனால் நாங்கள் வைத்துவிட்டோம்.

அதன் பின்னர்தான் இப்படி ஒருபடம் இருப்பது தெரியவந்தது. ஆனால் இதுவரை அந்தப் படம் சம்பந்தப்பட்ட யாரும் எங்களைத் தொடர்பு கொள்ளவில்லை. அந்தத் தலைப்பை அவர்கள் புதுப்பிக்காமல் விட்டதால்தான் ஓப்பனாக இருந்திருக்கிறது. எங்கள் பக்கம் தவறு இல்லை என்றாலும் இப்படி நடந்தது வருத்தத்துக்குரிய விசயம்தான். விரைவில் சரி செய்துவிடுவோம்," என்றார்.

 

Post a Comment