சென்னை: நடிகர் அசோக், சுருதி ராமகிருஷ்ணன் மற்றும் மகேஸ்வரி ( அறிமுகம்) ஆகியோரின் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் கா கா கா. இயக்குநர் வெற்றிமாறனின் உதவியாளர் மனோன் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார்.
கோழி கூவுது படத்தில் அறிமுகமாகி அரை டஜன் படங்களிற்கு மேல் நடித்து முடித்து விட்டாலும், இன்னமும் தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க முடியாமல் தடுமாறுகிறார் நடிகர் அசோக்.
விரைவில் வெளியாகவிருக்கும் கா கா கா திரைப்படத்தை அசோக் மிகவும் எதிர்பார்க்கிறார், இந்நிலையில் படத்தின் கதை என்ன என்று இயக்குநர் மனோனிடம் கேட்டபோது ‘‘ஹாரர், த்ரில்லர் படங்களின் வரிசையில் இப்படம் முற்றிலும் மாறுபட்ட கதை அமைப்பில் உருவாகியுள்ளது.
படத்தில் ஒரு காக்காவும், பட்டுப்போன ஒரு மரமும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதையெல்லாம் கிராஃபிக்சில் உருவாக்கலாம் என்று நினைத்திருந்த எங்களுக்கு யதேச்சையாக பட்டுப்போன ஒரு மரம் கிடைத்தது.
அதை கிரேன் மூலம் வேரோடு பிடுங்கி வந்து படப்பிடிப்பு தளத்தில் நட்டு படப்பிடிப்பை நடத்தினோம். இதுபோன்று இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போது அந்த வீட்டில் சில அமானுஷ்ய சம்பவங்களும் நடந்தது.
இதுபோன்ற பல சுவாரசியமான சம்பவங்களுடன் உருவாகியுள்ளது ‘கா கா கா' படம், இப்படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான ஒரு படமாக அமையும்'' என்றார்.
காக்கா பிடித்தே காரியம் சாதிக்க நினைபவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் அவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக நடக்க வேண்டும் என்ற கருத்தை காதல் + காமெடி கலந்து சொல்லுவது தான் கா கா கா படத்தின் கதையாம்.
ஹாரர்+ திகில் மற்றும் அமானுஷ்யம் கலந்து எடுக்கப்பட்டிருக்கும் கா கா கா திரைப்படத்தை கிரண் பதிகொண்டா தயாரிக்க அம்ரித் இசையமைத்து இருக்கிறார். விரைவில் உங்கள் அபிமான வெள்ளித்திரைகளில் கா கா கா...
Post a Comment