திருவனந்தபுரம்: ஐபிஎல் சூதாட்ட வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், சினிமாவில் குதிக்கிறார். ஒரு பெரிய பட்ஜெட் படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.
ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டவர் ஸ்ரீசாந்த். இந்த வழக்கிலிருந்து சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டார்.
இருப்பினும் அவர் மீதான வாழ்நாள் தடையை நீக்கி கிரிக்கெட் வாரியம் மறுத்து விட்டதால் மீண்டும் கிரிக்கெட் பக்கம் திரும்பிப் பார்க்க முடியாத நிலையில் ஸ்ரீசாந்த் உள்ளார்.
இந்த நிலையில் சினிமா வாய்ப்பு அவரைத் தேடி வந்திருக்கிறது. ஒரே சமயத்தில், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் இப்படம் தயாரிக்கப்படுகிறது.
தயாரிப்பாளர் சனாயாடி ரெட்டி இயக்கும் இந்தப்படம், ஐ.பி.எல். மற்றும் கிரிக்கெட் வீரரைப் பற்றிய கதைக்கருவை மையமாகக் கொண்டு உருவாகிறது.
ஸ்ரீசாந்த் நடிக்க உள்ள இப்படம் செப்டம்பரில் தொடங்கி 6 மாதத்தில் அனைத்து பணிகளையும் முடிக்க திட்டமிட்டிருப்பதாக ரெட்டி தெரிவித்திருக்கிறார். மேலும் இப்படம் 14 இந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
படத்தைப் பற்றி ஸ்ரீசாந்த் கூறும்போது தென்னிந்தியாவில் தனக்கு இது முதல் படம் என்று கூறிய ஸ்ரீசாந்த், இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிப்புத்துறையில் நல்ல எதிர்காலத்தை எதிர்நோக்கியிருப்பதாக தெரிவித்தார்.
ஸ்ரீசாந்த் ஏற்கனவே ஒரு நல்ல டான்ஸர், நல்ல பாடகரும் கூட. எனவே சினிமாவில் அவர் சகலகலாவல்லவனாக வலம் வருவாரா என்பதை (வழக்கம் போல) பொறுத்திருந்து பார்ப்போம்.
Post a Comment