மும்பை: புற்று நோயால் பாதிக்கப்பட்ட பிரபல இந்திப் பாடகர் மற்றும் இசையமைப்பாளர் ஆதேஷ் ஸ்ரீவத்சவா தனது 40 வயதில் மரணமடைந்தார்.
இந்தித் திரையுலகில் 90-களில் பாடகராக அறிமுகமானவர் ஆதேஷ் ஸ்ரீவத்சவா.
தன்னுடைய ஒப்பற்ற இசையறிவால் படிப்படியாக முன்னேறி நூற்றுக்கும் மேற்பட்ட இந்தித் திரைப்படங்களுக்கு பின்னணி இசை மற்றும் பாடல்களை இசையமைத்தார்.
கடந்த 2010-ம் ஆண்டு இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தது முதல் முறையாக தெரியவந்தது. இதைத் தொடர்ந்து உடனடியாக ‘கீமோதெரபி' சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனளித்து அவர் வெகு விரைவாகவே குணமடைந்தார்.
புதிய படங்களுக்கு இசையமைத்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் மீண்டும் புற்றுநோயின் தீவிரத்தால் பாதிப்படைந்து மும்பையின் அந்தேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், இந்த முறை எந்த சிகிச்சையும் ஆதேஷுக்கு கைகொடுக்கவில்லை. இதனால், நேற்று நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.
ஷகிரா, ஏகான் உட்பட பல்வேறு உலகலாவிய நட்சத்திரங்களுடனும் இவர் பணிபுரிந்திருந்தார். இவரது இசையமைப்பில் சல்தே சல்தே, பாக்பன் மற்றும் கபி குஷி கபி கம் போன்ற படங்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்தன.
குழந்தைகளை பாலியல் தொழிலாளிகள் ஆக்குவது பற்றிய குறும்படம் ஒன்றையும் இயக்கியுள்ளார்.
ஆதேஷுக்கு நேற்றுதான் பிறந்த நாள். அன்றுதான் அவரது இசையில் உருவான ‘வெல்கம் பேக்' படம் வெளியாகி பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. அதற்குள் இவரது மரணம் குடும்பத்தினர் மட்டுமின்றி திரையுலகினர் மற்றும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Post a Comment