ஒரு ஹீரோ அல்லது வில்லன் கோட் சூட்டில் நடித்த ஒரு படம் ஜெயித்துவிட்டால், அந்த கோட்டும் சூட்டும் பல படங்களுக்கு அவர்களை விடாமல் துரத்துவது தமிழ் சினிமா வழக்கம்.
கோட் சூட்டு மட்டுமல்ல... தலைப்பு, பேய் சமாச்சாரம் என அனைத்திலும் இந்த ஈயடிச்சான் காப்பி தொடர்கிறது.
தனி ஒருவன் படத்தின் இந்த பிரமாண்ட வெற்றிக்கு அந்தப் படத்தின் வில்லன் வேடத்தில் கலக்கிய அரவிந்த்சாமியும் ஒரு காரணம்.
அவருக்கு ஒருபக்கம் பாராட்டுகள் குவிகிறது. மறுபக்கம் இதே டைப் வில்லன் வாய்ப்புகளும் வருகின்றனவாம்.
இதுகுறித்து அரவிந்த்சாமி கூறுகையல், " வித்தியாசமான வேடங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. தனி ஒருவன் படத்தில் வில்லன் வேடம் என்றாலும் வித்தியாசமான, எனக்கு பிடித்தமான வேடம் என்பதால் நடிக்க ஒப்புக் கொண்டேன். நான் நினைத்ததுபோலவே ‘தனிஒருவன்' படம் நன்றாக வந்திருக்கிறது.
ஹீரோ - வில்லன் என்பதைவிட கதை ரசிக்கும்படி இருக்கவேண்டும். அது போன்ற கதை என்பதால் இதில் நடித்தேன். இயக்குநர் ராஜா என்னிடம் என்ன சொன்னாரோ அதை அப்படியே எடுத்தார். அதுதான் இந்த பெரிய வெற்றிக்குக் காரணம்.
இந்த படத்தில் நான் நடித்திருக்கும் வேடத்துக்கும் என் குணத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இந்த படம் எனக்கு புதிய அனுபவம். என்றாலும் தொடர்ந்து வில்லன் வேடத்தில் நடிக்க விருப்பம் இல்லை.
நானும் ஒரு கதை தயாரித்து வைத்திருக்கிறேன். அதை இயக்க வேண்டும் என்ற ஆசையும் உண்டு. இதற்கு கொஞ்சநாள் ஆகும்," என்றார்.
Post a Comment