இது நம்ம ஆளு பட விவகாரத்தில் நயன்தாரா மீது டி ராஜேந்தர் கொடுத்த புகார் குறித்து நடிகர் சங்கம் விசாரணை மேற்கொண்டுள்ளது.
சிம்பு, நயன்தாரா ஜோடியாக நடிக்கும் படம் 'இது நம்ம ஆளு'. பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் முழுமையாக முடிந்து வெளியீட்டுக்கு தயாராக இருந்தாலும், படத்தில் இரு பாடல்களைச் சேர்க்க வேண்டும் என்பதால் காத்திருக்கின்றனர்.
இந்தப் பாடல் காட்சிகளுக்கு நயன்தாரா கால்ஷீட் தர மறுப்பதாகக் கூறி ‘இது நம்ம ஆளு' படத்தின் தயாரிப்பாளர் டி.ராஜேந்தர், தயாரிப்பாளர் சங்கத்தில் நயன்தாரா மீது புகார் கொடுத்துள்ளார். அதில், நயன்தாரா பாடல் காட்சியை முடித்துக் கொடுத்தால்தான் படத்தை வெளியே கொண்டுவரமுடியும். சம்பள பாக்கி முழுவதையும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்.
பாடல் காட்சியில் அவர் நடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த புகார் நடிகர் சங்கத்துக்கு அனுப்பப்பட்டது. நடிகர் சங்க தலைவர் சரத்குமார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
நயன்தாராவிடம் விளக்கம் கேட்டபோது, குறிப்பிட்ட இரு பாடல் காட்சிகளுக்காக தான் கொடுத்த கால்ஷீட்டை வீணடித்துவிட்டார்கள் என்று பதிலளித்துள்ளார்.
இப்போது வேறு படங்களில் பிஸியாக இருப்பதால் அவர்கள் கேட்கும் தேதியில் என்னால் நடிக்க முடியாது என்றும், வேறு தேதிகளை ஒதுக்க முயல்வதாகவும் நயன்தாரா கூறியுள்ளாராம்.
பிரச்சினையை சுமூகமாகத் தீர்க்க முயன்று வருவதாக நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
Post a Comment