ஐபிஎல் பண பரிவர்த்தனை: ஷாரூக்கானிடம் 7 மணி நேரம் அமலாக்கப் பிரிவினர் விசாரணை

|


டெல்லி: ஐபிஎல் வீரர்களை பல கோடி ரூபாய் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ள ஷாரூக்கானிடம், அந்தப் பணம் எந்த வழியில் வந்தது என அமலாக்கப் பிரிவினர் விசாரணை நடத்தினர்.

ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியில் பங்கேற்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளராக இருக்கிறார் நடிகர் ஷாருக்கான். இந்த அணிக்கு விளையாட சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு பலகோடி ரூபாய் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளார் ஷாரூக்கான்.

அணி வீரர்களின் பயிற்சி, பராமரிப்புக்காகவும் பெருந் தொகை செலவு செய்துள்ளார். கோடிக்கணக்கில் முதலீடு செய்து அமைத்துள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் நடந்த ஐ.பி.எல். போட்டியிலும் கலந்து கொண்டது. இதற்கும் கோடிக்கணக்கில் பண பரிமாற்றம் நடந்துள்ளது.

இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஷாருக்கானிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் திடீர் விசாரணை நடத்தினார்கள். சனிக்கிழமை 7 மணி நேரம் நடந்த இந்த விசாரணையின்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு செய்த முதலீடு எவ்வளவு? இதற்கான பணம் எப்படி வந்தது? இதன் மூலம் வந்த வருமானம் எவ்வளவு? வரிமுறையாக செலுத்தப்பட்டுள்ளதா? சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா சென்று விளையாடியதின் மூலம் கிடைத்த வருமானம், செலுத்திய வெளிநாட்டு வரி ஆகியவை குறித்தும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கேள்விகள் எழுப்பினர்.

நடிகை ஜூஹி சாவ்லாவின் கணவரின் நிறுவனத்திலிருந்து ஷாரூக்கானின் நிறுவனத்துக்கு பணம் கைமாறியுள்ளது. இதன் பின்னணி குறித்தும் விசாரித்தனர் அதிகாரிகள்.

அதற்கு ஷாருக்கான் பொறுமையாக பதில் அளித்தார். மேலும் கிரிக்கெட் வீரர்களை வாங்கியதற்கான ஒப்பந்த ஆவணங்கள், விளம்பரங்கள், எந்த வகையான பங்குகளை வைத்திருக்கிறார், லாப- நஷ்ட கணக்கு விவரம் ஆகியவற்றுக்கான முழு விவரங்களை 2 வாரங்களுக்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் உத்தர விட்டனர். இவற்றை நிச்சயம் ஒப்படைப்பதாகவும், அனைத்தையும் முறையாகவே தாம் செய்திருப்பதாகவும் ஷாரூக்கான் பதில் அளித்தார்.

விசாரணைக்கு ஷாரூக்கான் முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏற்கனவே முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிசாஸ்திரி, முன்னாள் பி.சி.சி.ஐ. தலைவர் சசாங்மனோகர் ஆகியோரிடம் ஐ.பி.எல். முறைகேடு தொடர்பாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.
 

Post a Comment