'7ஆம் அறிவு' படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடந்தது. அப்போது நடிகர் சூர்யா கூறியதாவது: நடிக்க வந்து 13 வருடங்களாகி விட்டது. என் படத்துக்கான வியாபார எல்லையை '7 ஆம் அறிவு' மூலம் உணர்ந்து பிரமித்தேன். இப்படம் தொடர்பான இரு தரப்பு விமர்சனங்களையும் ஒரே மாதிரியான கண்ணோட்டத்தில் பார்க்கிறேன். படம் பெரிய வெற்றி பெற்றது குறித்து சந்தோஷம். உலகமே வியக்கும் வகையில் ஒரு படைப்பை வழங்கியிருக்கிறோம். போதி தர்மர் தமிழரா இல்லையா என்று கேட்கிறார்கள். அதுபற்றி விவாதிக்க விரும்பவில்லை. நன்கு ஆராய்ந்த பிறகுதான் அவரை பற்றிய சம்பவங்களை படமாக்கி இருக்கிறோம். விளம்பரத்துக்காக அவரை நாங்கள் பயன்படுத்தவில்லை. உலகில் வாழும் எல்லா தமிழர்களும் ஒன்றுதான். அவர்கள் மீது அக்கறை செலுத்த வேண்டும். அனுதாபப்பட வேண்டும். மலேசியா, இலங்கை மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் '7 ஆம் அறிவு'க்கு அமோக ஆதரவு அளித்துள்ளனர். அடுத்து கே.வி. ஆனந்த் இயக்கும் 'மாற்றான்' படத்தில் நடிக்கிறேன். இதுவரை எந்த நடிகருக்கும் கிடைக்காத கேரக்டர் இது. ஒவ்வொரு படத்திலும் புதுப்புது முயற்சிகள் செய்ய துடிக்கிறேன். கொடி வைத்து ரசிகர் மன்றம் வளர்க்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இவ்வாறு சூர்யா கூறினார்.
Post a Comment