வேண்டாம் வன்முறைக் காட்சிகள்! - தமிழ் சினிமா படைப்பாளிகளுக்கு நார்வே திரைப்பட விழாக் குழுவின் வேண்டு

|


தமிழ்ப் படைப்பாளிகளின் படங்கள் உலக அரங்கில் அனைத்து நாடுகளிலும் திரையிடப்பட, வன்முறைக் காட்சிகளைத் தவிர்க்க வேண்டும் என நார்வே திரைப்பட விழாக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து நார்வே திரைப்பட விழாவின் இயக்குநர் வசீகரன் இன்று விடுத்துள்ள அறிக்கை:

அன்பான தமிழ் சினிமா படைப்பாளிகளே...

உங்கள் படைப்புகள் ரசிகர்களின் சுகமான இளைப்பாறல்கள். இன்றைக்கு தமிழர்கள் இல்லாத நாடில்லை. அங்கெல்லாம் தமிழ் சினிமாவை கொண்டுசெல்வதும், கலை ரீதியாக மட்டுமல்ல, வர்த்தக ரீதியாகவும் தமிழ்ப் படைப்பாளிகளுக்கு உரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும் முயற்சியில் நார்வே தமிழ் திரைப்பட விழா குழு இறங்கியுள்ளது.

நார்வே தமிழ் திரைப்பட விழா தவிர, மற்ற நாடுகளில் நடக்கும் திரைப்பட விழாக்களிலும் தமிழ்ப் படங்களை எடுத்துச் செல்லும் முயற்சியையும் நாங்கள் முன்னெடுத்துள்ளோம். இது தவிர, தமிழ் சினிமாவுக்கென்று புதிய சந்தையை உலக நாடுகளில் உருவாக்குவதிலும் ஓரளவு வெற்றி கண்டு வருகிறோம்.

எங்களது இந்த முயற்சிக்கு தமிழ்ப் படைப்பாளிகளின் ஒத்துழைப்பு மிகவும் தேவைப்படுகிறது.

சர்வதேச அரங்கில் ஒவ்வொரு நாட்டிலும் ஒரு கலாச்சாரம், சமூகக் கட்டுப்பாடுகள் நிலவுகின்றன. அவற்றை மனதில் கொண்டு படமெடுக்கும்போது, மிக எளிதாக அந்த நாடுகளில் படங்களை திரையிட முடியும். எந்த தடையும் வராது.

உதாரணத்துக்கு வன்முறைக் காட்சிகள், மிகவும் உறுத்தலான சண்டை காட்சிகளுக்கு நார்வே போன்ற நாடுகளில் அனுமதியில்லை. அங்கு இந்த வயதுக்கு இந்த மாதிரி படங்கள், காட்சிகள்தான் பார்க்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. எனவே வன்முறை மற்றும் பாலுணர்வு காட்சிகள் அதிகமிருந்தால் அங்கே அதனை வயதில்லா படம் என்று முத்திரை குத்திவிடுவார்கள். அதாவது எந்த வயதுக்காரர்களும் பார்க்க முடியாத படமாகிவிடும்.

இதுபோன்ற கட்டுப்பாடுகள் ஜெர்மனி, ரஷ்யா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் நிறைய உள்ளது. இந்த முறை நமது திரைப்பட விழாவுக்கு தேர்வு செய்ய நினைத்த சில படங்களை, இம்மாதிரி காட்சிகள் காரணமாக தேர்வு செய்ய முடியாமல் போனது.

சர்வதேச சமூகச் சூழலைப் புரிந்து காட்சியமைப்பில் படைப்பாளிகள் கவனம் செலுத்தினால், அவர்களின் படங்களை உலகின் எந்த மூலையிலும் கொண்டுபோக முடியும். படைப்பாளிகளின் சுதந்திரத்தில் தலையிடுவதாகக் கருதாமல், தங்கள் படைப்புக்கள், ஆங்கிலம், இந்திப் படங்கள் மாதிரி அனைத்து தரப்பினரையும் போய்ச் சேர ஒரு டிப்ஸ் ஆக இந்த யோசனையை செவிமடுக்குமாறு கோருகிறோம்.

நார்வே தமிழ் திரைப்பட விழாக் குழு என்றென்றும் தமிழ்ப் படைப்புகள் மேம்பட்டு நிற்கவும், உலகளாவிய சந்தையில் முன்னணி வகிக்கவும் துணை நிற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

Post a Comment