இளம் படைப்பாளிகளை உலகிற்கு அறிமுகம் செய்யும் வகையில் 10 நிமிடக் கதைகள் என்ற குறும்பட போட்டித் தொடரினை மக்கள் தொலைக்காட்சி நடத்தியது. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு, `இந்த குறும்படங்கள் ஒளிபரப்பாகி வருகிறது
கடந்த சில மாதங்களாக நடந்த இப்போட்டித் தொடரில் மொத்தம் இரண்டு சுற்றுகள் இடம் பெற்றன.
முதல் சுற்றில் இடம் பெற்ற குறும்படங்கள் அனைத்தையும் நடுவரின் பார்வைக்கு கொண்டு சென்று அவர்கள் அளித்த மதிப்பீடுகளின் அடிப்படையில் இரண்டாவது சுற்றுக்கு 15 குறும்படங்களை தேர்வு செய்தனர். தேர்வு செய்த குறும்பட குழுவினருக்கு புதிய தலைப்புகள் வழங்கி அதற்கேற்றாற்போல் குறும்படங்களை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அதன்படி பல்வேறு கதைக்களம் கொண்ட குறும்படங்கள் ஒளிபரப்பானதில் இருந்து சிறந்த மூன்று குறும்படங்கள் தேர்வாயின.
முதல் இடத்தை `நேருக்கு நேர்' என்ற குறும்படம் தட்டிச் சென்றது. இரண்டாவது இடத்தை `கண்டுபிடி' என்ற குறும்படமும், மூன்றாவது இடத்தை `அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்' என்ற குறும்படமும் தட்டிச் சென்றன. பரிசளிப்பு நிகழ்ச்சியில் மக்கள் தொலைக்காட்சியின் ஆலோசகரான சவுமியா அன்புமணி தலைமை தாங்கி, வெற்றி பெற்ற குறும்பட குழுவினருக்கு பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர்கள் வியட்நாம் வீடு சுந்தரம், ஞானராஜசேகரன், எஸ்.ஏ.சி.ராம்கி, விஜயபத்மா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று வெற்றி பெற்ற குறும்பட இயக்குநர்களை பாராட்டி பேசினர்.