எஸ். எஸ். ராஜமௌலி என்னும் திரை உலக ராட்சஷன்

|

Pani Rakshasudu Jakkanna S S Rajamouli
சினிமா நடிகர்கள் பற்றியும், நடிகைகள் பற்றியும் கொண்டாடும் மீடியாக்கள் இன்றைக்கு கொண்டாடுவது இயக்குநரை. எஸ்.எஸ்.ஆர் என்று அன்போடு அழைக்கப்படும் எஸ். எஸ். ராஜமௌலி இன்றைக்கு தெலுங்கு திரையுலகில் மட்டுமல்லாது தென்னிந்திய திரை உலகத்தின் மோஸ்ட் வாண்டட் இயக்குநர். சனிக்கிழமை மாலை நேரத்தில் சினிமாக்களை பார்க்கப்பிடிக்காமல் செய்தி சேனலை திருப்பியபோது புதிய தலைமுறை தொலைக்காட்சியில் எஸ்.எஸ். ராஜமௌலியின் வெற்றிப்பயணத்தின் தொகுப்பை ஒளிபரப்பினார்கள். அதுவே சுவரஸ்யம் மிக்க சினிமாவாக போல இருந்தது.

ஜூனியர் என்.டி.ஆர் ஐ வைத்து ஸ்டூடன்ட் நம்பர் 1 இயக்கியது தொடங்கி சாதாரண ஈ யை கதைக் கருவாக வைத்து மிரட்டியது வரை ஒவ்வொன்றாக எடுத்துக்காட்டினார்கள். நான் ஈ படம் பார்த்துவிட்டு யார் இந்த ராஜமௌலி என்று யோசித்த ரசிகர்கள் ராஜமௌலி என்றால் பணி ராட்சஷன் என்பதை புரிந்து கொண்டிருப்பார்கள். அப்படித்தான் செல்லமாய் அவர் அழைக்கப்படுகிறார். எந்த செயலானாலும் கடுமையாய் உழைத்து வெற்றியை ருசித்தபின்னர்தான் வேறு வேலையைப் பார்ப்பாராம்.

தனது முதல் படமான Student No: 1ல் ஆரம்பித்து தனது ஒன்பதாவது படமான ஈகா /நான் ஈ வரை ராஜமௌலி எடுத்துக்கொண்ட களன்கள், கதைகள், காதாபத்திரங்கள் என அனைத்தும் வேறு வேறு. ஆனால் வெற்றி மட்டும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

ராஜமொளலியின் திரைப்பட வெற்றிக்கு அவர் மட்டுமே பாடுபடவில்லை அவருடன் அவருடைய தகப்பனார், மனைவி, குழந்தைகள் என அனைவரும் ஒன்றினைந்து பாடுபடுகின்றனர் என்று அந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பினார்கள். திரைப்படத்துறையில் உள்ள எந்த இயக்குநருக்குமே கிடைக்காத பாக்கியம் இது.

எந்த வெற்றியும் எளிதில் கிடைத்து விடுவதில்லை. ராஜமௌலிக்கும் அப்படித்தான். ஆனால் அவர் இயக்கிய படங்களை ரீமேக் என்ற பெயரில் எடுத்து தமிழ் இயக்குநர்கள் சொதப்பிவிடுகின்றனர். இதில் ஒரு சில விதி விலக்கு. இந்த நிலை ‘நான் ஈ' திரைப்படத்திற்கும் வந்துவிடக்கூடாது என்று நினைத்துதான் ஒரே நேரத்தில் தெலுங்கிலும், தமிழிலும் வெளியிட்டாரோ என்னவோ. சலித்துப்போகுமளவிற்கு வெற்றியை ருசித்தும் சற்றும் தலைகனமில்லாத மனிதராக இருக்கும் எஸ்.எஸ்.ஆர் தென்னிந்திய திரை உலகின் வித்தியாசமான இயக்குநர் என்பதை புரிந்து கொள்ளமுடிந்தது.
 

Post a Comment