உதிரிப்பூக்கள் சீரியலில் அமைதியான நடிப்பின் மூலம் அழகாக ஸ்கோர் செய்கிறார் நடிகை மானசா. தமிழ் சீரியலுக்கு இவர் புதியமுகம் என்றாலும் தெலுங்கு, மலையாளம் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிகர் விக்ராந்தின் மனைவி. விக்கிரமாதித்தன் இயக்கும் ‘உதிரிப்பூக்கள்' சீரியல் சூட்டிங்கில் பிஸியாக இருந்த மானசா தனது சீரியல் பயணம் தொடங்கிய கதையை நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.
சீரியல்னா காலையில் வந்தால் சாயுங்காலம் ஆச்சுன்னா கட்டாயம் வீட்டுக்குத் திரும்பிடலாம் என்ற உத் தரவாதம் இருக்கு. இந்த ஒரே காரணத்துக்காகதான் சீரியல் பக்கம் வர முடிவெடுத்தேன். எங்களுக்கு யஷ்வந்த் என்ற ஒன்றரை வயசு சின்ன பையன். அவன வீட்ல வெச்சுக்கிட்டு வெளியூர் ஷூட்டிங் எல்லாம் போக முடியாது.
நான் பிறந்து வளர்ந்தது முழுக்க சென்னைதான். சரளமா எனக்கு தமிழ்தான் வரும். அம்மா கனகதுர்கா ஒரு மலையாளி. அப்பா தெலுங்கு. அம்மா மலையாளத்தில் எழுபது படங்களுக்கு மேல நடிச்சிருக்காங்க. அப்பா பிரபலமான கேமராமேன். வீட்ல ரெண்டு மொழியோட ஆதிக்கம் இருந்தது. அதனால ரெண்டு லாங்வேஜும் கத்துக்க முடிஞ்சது.
வீட்ல அம்மா, அப்பா சினி ஃபீல்டுல இருந்தாலும் என்னோட எண்ட்ரி அவ்வளவு லேசில் நடக்கல. சிரமப்பட்டுதான் உள்ள வர வேண்டி இருந்தது.டெக்னிக்கலான விஷயத்தை கத்துக்கணும்னு எடிட்டிங் படிச்சேன். ஆனாலும், சின்ன வயசுல இருந்தே நடிப்பு மேல ஒரு ஈர்ப்பு. மலையாளத்திலும் தெலுங்கிலும்தான் சினிமா வாய்ப்புகள் வந்தது. நடிச்சேன். தமிழ்ல வரல. அதுக்கு காரணம் கண்டுபிடிக்க எல்லாம் நேரமும் இல்ல.
எங்கெல்லாம் புதுசு புதுசா ஹோட்டல் ஆரம்பிக்கிறாங்களோ அங்கெல்லாம் போய் மூக்குப் பிடிக்க சாப்பிடுறதுன்னா எனக்கு ரொம்ப இஷ்டம். தெருவோர தட்டுக் கடையில இருந்து பெரிய லெவல் ஸ்டார் ஹோட்டல் வரைக்கும் ருசிச்சு சாப்பிடுவேன். அப்புறம் படம் பார்ப்பதுன்னா உயிர். ஆனா விமர்சனம் பண்ண மாட்டேன்.
மானசா என்றால் ‘மனசுக்கு நெருக்கமானவர்' என்று அர்த்தம். நிச்சயம் தமிழ் ஆடியன்ஸின் மனசுக்கு நெருக்கமானவளாக ஒரு நாள் மாறுவேன் என்று சிரித்த முகத்தோடு கூறிவிட்டு சூட்டிங்கிற்கு தயாரானார் மானசா.
Post a Comment