சிவாஜி தொகுதியில் பிரச்சாரம் செய்ய விரும்பிய ரஜினி - கமல்: பிரபு வெளியிட்ட தகவல்

|

Rajini Kamal Wish Campaign Nadigar Thilagam Says Prabhu

சென்னை: சிவாஜி கணேசன் போட்டியிட்ட திருவையாறு தொகுதியில் ரஜினியும் கமலும் பிரச்சாரம் செய்ய விரும்பியதாக நடிகர் பிரபு கூறினார்.

நடிகர்திலகம் சிவாஜி கணேசன் நடித்த கர்ணன் படம் 1964-ல் ரிலீஸ் ஆனது. இப்படத்தை டிஜிட்டலில் புதுப்பித்து கடந்த மார்ச் 16-ந்தேதி தமிழகம் முழுவதும் மீண்டும் ரிலீஸ் செய்தனர்.

மொத்தம் 72 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. 30 திரையரங்குகளில் 25 நாட்களும், 14 திரையரங்குகளில் 50 நாட்களும், 3 திரையரங்குகளில் 75 நாட்களும் ஓடியது. சென்னையில் உள்ள சத்யம் தியேட்டரில் 150 நாட்கள் ஓடியது.

48 வருடங்களுக்கு பிறகு மறு வெளியீட்டில் சாதனை படைத்த ‘கர்ணன்' படத்தின் 150-வது நாள் வெற்றி விழாவை அகில இந்திய சிவாஜி மன்றம் தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நேற்று இரவு நடத்தியது. மன்ற தலைவர் கே.வி.பி. பூமிநாதன் தலைமை தாங்கினார். சாந்தி சொக்கலிங்கம் வரவேற்று பேசினார்.

சிவாஜி மகன்கள் நடிகர் பிரபு, ராம்குமார், சேரன், விக்ரம்பிரபு மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர். இயக்குனர் பி.வாசு, நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன், இசை அமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன், பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் உள்ளிட்ட திரையுலகினர் பலர் பங்கேற்றனர்.

‘கர்ணன்' படத்தில் நடித்த நடிகர் - நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் வாரிசுகளுக்கு நடிகர் பிரபு கேடயம் வழங்கினார்.

விழாவில் அவர் பேசுகையில், "கர்ணன் படம் 48 வருடங்களுக்கு பிறகு 150 நாட்கள் ஓடி சாதனை படைத்ததை சிவாஜி மீது கொண்ட ரசிகர்கள் இங்கு விழாவாக நடத்துகிறார்கள்.

சமீபத்தில் விமான நிலையத்தில் ஒரு பெண் என்னை சந்தித்து நீங்கள் சிவாஜி மகனா? என்று கேட்டார். சிவாஜி போல் எவராலும் நடிக்க முடியாது என்று சொன்னார். அப்பா மீது வைத்துள்ள பாசத்தை கண்டு மெய்சிலிர்த்தேன்.

அப்பா மறைந்து 11 வருடங்கள் ஆகின்றன. இன்றைக்கும் அவரது ரசிகர்கள் என்னுடன் இருக்கிறார்கள். இது எனக்கு பெரிய பலம்.

ரஜினி - கமல்

என் மகன் விக்ரம் பிரபு நடித்த ‘கும்கி' பாடல் வெளியீட்டு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்றனர். அப்பா மீதுள்ள பிரியத்தினால் நேரில் வந்து வாழ்த்தினார்கள்.

திருவையாறு தொகுதி தேர்தலில் சிவாஜி தோல்வி அடைந்திருக்ககூடாது. நாங்கள் இருவரும் அந்த தொகுதிக்கு வந்து சிவாஜியை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்ய விரும்பினோம். ஆனால் முடியவில்லை. அதைச் செய்திருக்க வேண்டும் என்று அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

சிவாஜி மேல் இருவரும் எந்த அளவுக்கு பாசம் வைத்துள்ளார்கள் என்பதை இதன் மூலம் தெரிஞ்சுக்கலாம்.

பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி சிவாஜியின் தீவிர ரசிகர். அவர்தான் முதன் முதலில் சிவாஜிக்கு சிலை வைத்தார். இந்த விழாவுக்கு வாழ்த்துச் செய்தியும் அனுப்பி உள்ளார்.

சிறு வயதில் இருந்தே நான் பார்த்த பலர் இந்த விழாவுக்கு வந்துள்ளனர். அவர்களின் ஆதரவு எனக்கு தொடர்ந்து இருக்க வேண்டும்.

சிவாஜிக்கு மணி மண்டபம் கட்டவேண்டும் என்று பலர் இங்கு பேசினர். நாமே அதைகே கட்டலாம். ஆனால் மணி மண்டபத்துக்கு அங்கீகாரம் வேண்டும். எனவே பெரியவர்கள் அதை விரைவில் கட்டுவார்கள். கண்டிப்பாக அது நடக்கும்," என்றார்.

 

Post a Comment