பெங்களூர்: நேற்றைய முழு அடைப்பின்போது, அதை முன்னெடுத்த ஆளும் பாஜகவினருடன் கடும் மோதலில் ஈடுபட்டார் நடிகை குத்து ரம்யா எனப்படும் திவ்யா.
கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் திகந்த், நடிகை ரம்யா ஜோடியாக நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு மைசூர் லலிதா மகால் பேலஸ் மைதானத்தில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. படப்பிடிப்பு குழுவினர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் படப்பிடிப்புக்கான பணிகளை தொடங்குவதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டனர்.
படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகை ரம்யா காலை 9.30 மணி அளவில் படப்பிடிப்பு நடைபெறும் இடத்துக்கு காரில் வந்து இறங்கினார்.
அப்போது அங்கு வந்த பா.ஜனதா தொண்டர்கள், நடிகை ரம்யாவிடம், 'இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு நடைபெறுகிறது. சினிமா தியேட்டர்கள் கூட மூடப்பட்டுள்ளன. எனவே ஷூட்டிங் நடக்கக்கூடாது,' என்றனர்.
இதற்கு ரம்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். 'இந்த பந்தே சட்ட விரோதம்... நாங்கள் ஏன் படப்பிடிப்பை ரத்து செய்ய வேண்டும். இங்கு சுமார் 150 பேர் படப்பிடிப்பில் ஈடுபட்டு உள்ளனர். ஒரு நாள் படப்பிடிப்பை ரத்து செய்தால் அவர்களுக்கு யார் கூலி கொடுப்பது, நீங்கள் கொடுக்கிறீர்களா? ஆர்ப்பாட்டம் செய்வதாக இருந்தால் ரோட்டுக்கு போங்கள்,'' என்றார் கோபத்துடன்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து ரம்யா அங்கிருந்து சென்று காரில் ஏறினார். சிறிது நேரம் கழித்து மீண்டும் அங்கு வந்து அவர் ஆர்ப்பாட்டக் காரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
'பொதுமக்களுக்கு இப்படி தொந்தரவு கொடுப்பதை சகித்துக் கொள்ள முடியாது'', என்று கூறிவிட்டு, படப்பிடிப்பைத் தொடருமாறு கூறினார். இதனால் படப்பிடிப்பு குழுவினருக்கும், பா.ஜனதா வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பாஜகவினர் தொடர்ந்து ரம்யாவை திட்ட ஆரம்பித்தனர். ஆனால் அவர் அசரவில்லை. பதிலுக்கு பாஜகவினரை திட்டித் தீர்த்தார். இந்த பந்தால் மக்களுக்கு கஷ்டம், நாட்டுக்கு நஷ்டம். வேறு ஒரு பலனுமில்லை. இதில் கோபப்பட பாஜகவுக்கு உரிமையில்லை, என்றார்.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய இளம் தலைவர் ரம்யா என்பதும், அவர் மத்திய அமைச்சர் எஸ்எம் கிருஷ்ணாவின் உறவினர் என்பதும் தெரியுமல்லவா?
இல்லாவிட்டால் பாஜகவினர் இவ்வளவு பேச்சுக்களையும் கேட்டுக் கொண்டு சும்மாதான் போயிருப்பார்களா?
Post a Comment