மைசூர்: பிழைப்புக்காக திரையில் மட்டுமல்ல, நிஜத்திலும் எப்படியெல்லாம் வேஷம் போட வேண்டியிருக்கிறது நடிகர்களுக்கு… தன் சொந்த அடையாளம், பிறந்த ஊர் என எல்லாவற்றையுமே மறைக்க என்னவெல்லாம் குட்டிக்கரணம் அடிக்கிறார்கள்…!
இதோ அதற்கு நல்ல உதாரணம் கன்னட நடிகர் ரவிச்சந்திரன் (இன்னொருவரும் உண்டு… அவர் ‘தஞ்சை’ ரமேஷ் அரவிந்த்!).
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட்டால் கன்னட திரையுலகம் போராட்டத்தில் குதிக்கும் என்று அவர் ‘சவுண்ட்’ விட்டுள்ளார்.
மைசூரில் அவர் நிருபர்களிடம் பேசுகையில், “கர்நாடகாவில் மழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் பல பகுதிகளில் வறட்சி நிலவி வருகிறது. இதன் விளைவாக இங்குள்ள மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் ஏரி, குளங்கள், அணைகள் நீர் இல்லாமல் வறண்டு வருகிறது. தற்போது கர்நாடக அணைகளில் இருப்பு உள்ள நீர் குடிப்பதற்கே போதுமானதாக இல்லை (!?).
இந்த நிலையில், தமிழகத்தில் காவிரியிலிருந்து தண்ணீர் கேட்பது சரியல்ல. ஒரு வேளை கர்நாடக அரசின் விளக்கத்தை ஏற்காமல் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டால், கன்னட திரையுலகம் திரண்டு வந்து போராட்டத்தில் குதிக்கும். கர்நாடக அரசும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது.
வருகிற நாட்களில் கர்நாடகாவில் மழை பெய்து, அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகள் நிரம்பினால் மட்டுமே உபரி நீரை தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவோம். அதுவரை தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது,” என்றார்.
ரவிச்சந்திரன் பிறப்பால் ஒரு தமிழர். அவரது அப்பா பெயர் வீராசாமி. சொந்த ஊர் வேலூர்!!
Post a Comment