முந்தானை முடிச்சு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இதில் விஜய் டிவி லொள்ளுசபா புகழ் ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார். இதற்கு மாப்பிள்ளை விநாயகர் என்று பெயர் வைத்திருக்கின்றனர்.
நடிகர் பாக்யராஜ்-ஊர்வசி நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘முந்தானை முடிச்சு'. இந்த படத்தை பாக்யராஜ் இயக்கியிருந்தார். இளையராஜா இசையில் அனைத்து பாடல்களும் பயங்கர ஹிட்டாகின. இப்படத்தில் வரும் முருங்கைக்காய் சமாச்சாரம் தமிழ்நாட்டின் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. இந்த படத்திற்கு பிறகு முருங்கைக்காய் விற்பனை அதிகரித்தது வேறு சமாச்சாரம். இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.
இந்த படத்தில் விஜய் டிவியில் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி, தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் ஜீவா கதாநாயகன் ஆகிறார். இவருக்கு ஜோடியாக ரஷ்மி கவுதம் நடிக்கிறார்.
இந்த படத்தில் முதல் பகுதியில் நடித்த பாக்யராஜ், ஊர்வசி இருவரும் ஜீவாவின் பெற்றோர்களாக நடிக்கிறார்கள். மேலும் பாண்டியராஜன், சந்தானம் இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.இவர்களைத் தவிர எப்.எம். பாலாஜி, மனோபாலா, சிங்கமுத்து போன்ற காமெடிநாயகர்களும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.
மொத்தத்தில் இது முந்தானை முடிச்சு பார்ட் 2 காமெடி பட்டாசாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்திற்கு ‘மாப்பிள்ளை விநாயகர்' என்று பெயரிட்டிருக்கிறார்கள். படப்பிடிப்பு காரைக்குடியில் நடக்கிறது. ‘டூ' படத்தை இயக்கிய ஸ்ரீராம் பத்மநாபன் இயக்குகிறார். அபிஷேக் இசையமைக்கிறார்.
ஏற்கனவே சந்தானம், பவர்ஸ்டார் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் பாக்கியராஜ் படத்தின் ரீமேக் என்று கூறப்பட்டது. பிரச்சினையும் ஏற்பட்டது. இப்போது பாக்கியராஜ் நடித்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது அதில் பாக்கியராஜூடன் சந்தானம் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment