சென்னை: முஸ்லீம்களை இழிவுபடுத்தும் காட்சிகள் கொண்ட விஸ்வரூபம் படத்தை திரையிட நிச்சயம் அனுமதிக்க மாட்டோம் என முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் 30 பேர் அறிவித்துள்ளனர்.
இஸ்லாமிய சமூக மற்றும் அரசியல் கூட்டமைப்பு சார்பில், அதன் ஒருங்கிணைப்பாளர் ஹனீபா தலைமையில், 24-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் 30 பேர், நேற்று மாலை 3 மணி அளவில் சென்னை நகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மற்றும் கூடுதல் கமிஷனர்களை சந்தித்து பேசினார்கள்.
இந்த பேச்சுவார்த்தையில், மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. எம்.எச்.ஜவாஹிருல்லாவும் கலந்து கொண்டார்.
பேச்சுவார்த்தை முடிந்தவுடன், செய்தியாளர்களைச் சந்தித்த இஸ்லாமிய தலைவர்கள் கூறுகையில், "நடிகர் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்' படத்தை பார்த்தோம். அந்த படம் இஸ்லாமிய மக்களை இழிவுபடுத்துவதாக உள்ளது. ஒட்டுமொத்த முஸ்லீம்களையும் தீவிரவாதிகளைப்போல் சித்தரித்து அந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு இந்திய அரசின் உளவு அமைப்பான ரா அமைப்பு அதிகாரி பயிற்சி கொடுப்பதுபோல காட்சிகள் உள்ளன. மேலும் இஸ்லாமிய மத கோட்பாடுகளையும் தவறாக அந்த படத்தில் காட்டியுள்ளார் கமல்.
தமிழகத்தில் மட்டும் அல்லாமல், இந்தியா முழுவதும் இந்த படத்தை திரையிட அனுமதிக்கக்கூடாது. இந்த படம் வெளிவந்தால், தேசிய ஒருமைப்பாட்ட நாசமாகிவிடும். ஏற்கெனவே மோசமான நிலையை நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கிறது.
வருகிற 25-ந்தேதி அந்த படத்தை வெளியிடவிடாமல் தமிழக அரசும், மத்திய அரசும் தடை செய்ய வேண்டும். போலீஸ் கமிஷனரிடம் எங்கள் நிலையை எடுத்து கூறிவிட்டோம். அடுத்து உள்துறை செயலாளரை நாளை (இன்று) சந்திக்க உள்ளோம்.
உயிரைக் கொடுத்தாவது...
படத்தை அரசு தடை செய்யாவிட்டால், நாங்கள் உயிரை கொடுத்தாவது, படம் வெளிவரவிடாமல் தடுப்போம். இந்த படத்தை வெளியிட அனுமதி கொடுத்த தணிக்கை குழு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
25-ந் தேதிக்குள் இதற்கு ஒரு நல்ல முடிவு காண அரசை கேட்டுக்கொள்கிறோம். தமிழக முதல்வர் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறோம்," என்றனர்.
Post a Comment