விருதுநகர்: இசை அமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையில் ஸ்ரீஆண்டாள் எனும் ஆல்பம் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடக்கும் விழாவில் வெளியிடப்படுகிறது.
பிரபல இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா, ஸ்ரீவில்லிப்புத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்திற்கு வந்தார். அவரை வேந்தர் ஸ்ரீதரன், பதிவாளர் டாக்டர் வாசுதேவன் ஆகியோர் வரவேற்றனர்.
பின்பு கார்த்திக் ராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சிறு வயதில் என் தாய் ஆண்டாளின் மகிமை குறித்து கதை மூலம் எனக்கு விளக்குவார். அதில் இருந்தே நான் ஆண்டாளின் பக்தனாகிவிட்டேன். இந்த பாடல் தொகுப்பினை என் தாயாருக்கு சமர்ப்பிக்கின்றேன்.
கோதை ஆண்டாள் குறித்து 12 பாடல் அடங்கிய இசை ஆல்பம் தயார் செய்துள்ளோம். முதலில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் தமிழக பிரபலங்கள் முன்னிலையில் இம்மாத இறுதியில் ஆல்பம் வெளியிட உள்ளோம். இதற்கு பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். திருப்பாவை பாடல் பாடிய ஆண்டாளை பற்றி இந்த பாடல் தொகுப்பு வெளியிடுவது பெரிய புண்ணியம்.
பின்பு, அதே தினம் ஆண்டாள் சன்னதியில் பெரும் விழா எடுத்து ஆல்பம் வெளியிடப்படும். இதில் உள்ள 12 பாடல்களை எனது தந்தை இளையராஜா, தம்பி யுவன் சங்கர் ராஜா, வயலின் வித்வான் கண்ணன், குமரேஷ் ஆகியோர் பாடி உள்ளனர். 6 மாத காலம் இந்த ஆல்பம் உருவாக உழைத்தோம். இசை கேட்டால் மனம் இதமாகும். இசை ஒரு கடல். இந்த ஆல்பம் மூலம் கிடைக்கும் வருவாய் அனைத்தும் ஆண்டாள் கோவில் திருப்பணிக்கே கொடுக்க உள்ளோம் என்றார்.
Post a Comment