ஹைதராபாத்: நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இதை தடுப்பதில் காங்கிரஸ் அரசு தோல்வியடைந்துவிட்டது என்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் நடிகை ரோஜா குற்றம் சாட்டியுள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியாகாந்தி வெறும் உற்சவர் போல வலம் வருகிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரோஜா மேலும் கூறியதாவது:
டெல்லியில் மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டு உள்ளார். இதேபோல் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இந்த கொடுமைகளை தடுக்க கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். அரசியலிலும், அதிகாரத்திலும், உயர் பதவியில் இருக்கும் பெண்கள் இதனை தடுக்க முன் வரவேண்டும். ஆனால் அவர்கள் எதுவும் செய்யாமல் கோவில் உற்சவர் சிலை போல் உள்ளனர்.
மேலும் இந்த விசயத்தில் கருத்து கூறிய ஆந்திரமாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் சத்யநாராயாணாவை வன்மையாக கண்டிப்பதாகவும் ரோஜா கூறினார். ஆந்திராவில் உள்துறை மந்திரியாக இருக்கும் சபீதா இந்திரா ரெட்டி தொகுதியிலேயே ஒரு பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டு உள்ளார். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினாரே தவிர தடுக்க வழி இல்லை. பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுக்க ஆந்திர முதல்வர் கிரண்குமாரும் நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை.
உயர்ந்த பதவியில் இருப்போர் மற்றவர்களை போல இந்த சம்பவத்துக்கு நானும் வேதனைப்படுகிறேன் என்று சொல்வது வெட்ககேடானது. அதிகாரத்தில் இருப்பவர்கள் வேதனைப்பட்டால் பிரச்சினை தீர்ந்து விடுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இந்த விசயத்தில் சோனியாகாந்தி கோவில் உற்சவர் போல வலம் வருகிறார் என்றும் ரோஜா கூறியுள்ளார்.
Post a Comment