சென்னை: இஸ்லாமியர்கள் பிரச்சினையை முடித்து விட்ட கமல்ஹாசன் அடுத்து பிராமணர்களிடமிருந்து புது எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளார். விஸ்வரூபம் படத்தில் பிராமணர்கள் இழிவுபடுத்தப்பட்டிருப்பதாக பிராமணர் சங்கம் ஒன்று கூறியுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோரிடம் அந்த சங்கம் புகார் மனுவைக் கொடுத்துள்ளது.
இதுதொடர்பாக புகார் மனுவைக் கொடுத்த அதன் தலைவர் ராமகிருஷ்ணன் கூறுகையில், விஸ்வரூபம் படத்தை அமெரிக்காவில் பார்த்த என் உறவினர் ஒருவர் அதிர்ச்சியடைந்து, தொடர்புகொண்டார். படத்தின் கதாநாயகி பிராமணப் பெண். அவருக்கு கமல் சிக்கன் சமைத்துக் கொடுப்பதுபோல் காட்சி வருகிறது.
இது எங்களின் உணர்வை புண்படுத்துகிறது. கமல் முற்போக்குவாதி, அறிவுஜிவி என்று சொல்லிக்கொண்டு மடத்தனமான வேலைகளில்தான் ஈடுபடுவார். அவரை நாங்கள் ஒருபோதும் பிராமணராக அங்கீகரித்தது கிடையாது.
பூணூல் என்பது சொறிந்துகொள்வதற்கு வசதியாக இருக்கிறது என்று ஒருமுறை கமல் தெரிவித்திருந்தார். அப்படிப்பட்டவர் எப்படி பிராமணராக இருக்க முடியும்.
விஸ்வரூபம் படத்திற்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையை தீர்க்க அங்கே இங்கே சென்று முட்டுவதைவிட ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்து தேங்காய் உடைத்திருந்தால் விஸ்வரூபத்தின் தடைகள் உடைபட்டு போயிருக்கும் என்றார்.
இன்னொரு பிராமணர் சங்கம் தடை கூடாது என்கிறது
இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் படத்துக்குத் தடை விதிக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், விஸ்வரூபம் படத்தில் பிராமணர்களை இழிவுபடுத்தியிருப்பதால் அப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று வேறு பிராமண சங்கத்தினர் புகார் தெரிவித்திருகின்றனர்.
அப்படி படத்தை தடை செய்யக்கூடாது. ஒருவனை அழவிட்டு கண்ணீரை வேடிக்கை பார்ப்பவன் பிராமணன் அல்ல. அதனால் படத்தை எதிர்க்கக்கூடாது. அவர் மிகுந்த பொருட் செலவில் படத்தை எடுத்திருப்பதால் தடை செய்யக்கூடாது.
ஆனால், கமலஹாசனை நாங்கள் ஒரு மனிதனாகவே மதிப்பது கிடையாது. தாய்நாட்டையும், தாய்மொழியையும், கலாச்சாரத்தையும் குழிதோண்டி புதைக்கும் பணியை கமல் காலம் காலமாக செய்து வருகிறார். தன் வீட்டு பெண்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படித்தான் உலகத்தில் இருக்கும் அத்தனை பெண்களும் இருப்பதாக கமல் கருதுகிறார்.
அவர் வீட்டு பெண்கள் எப்படி இருந்தாலும் இருந்து விட்டு போகட்டும், அதே நிலைப்பாட்டுடன் தேசத்தில் உள்ள அனைவரையும் எண்ணுதல் கூடாது. கமல் எங்களை இனத்தை கேவலப்படுத்தி காட்சி வைத்திருந்தால் அவர் அழிந்து போகவேண்டும் என்று நினைக்க மாட்டோம். அவராகவே தன் தவறை உணர வேண்டும் என்றார்.
Post a Comment