விஸ்வரூபம் பார்க்க கேரளாவில் அலை மோதும் தமிழக ரசிகர்கள்

|

Kamal Haasan Fans From Tamil Nadu Throng Kerala

குமுளி: கமல்ஹாசன் ரசிகர்கள் தொடர்ந்து கேரளாவுக்குப் படையெடுத்து வருகின்றனராம். தமிழகத்தில் காட்சிகளை வெட்டி விஸ்வரூபம் படம் வெளியாகவுள்ள நிலையிலும் அவர்கள் கேரளாவுக்குச் செல்வது சற்றும் குறையவில்லையாம். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கேரளாவில் குவிந்து வருகினனராம்.

தமிழகத்தில் விஸ்வரூபத்திற்கான தடை கிட்டத்தட்ட நீங்கி விட்டபோதிலும் படம் திரைக்கு வரமேலும் சில நாட்களாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் விஸ்வரூபம் படத்தைப் பார்க்க தொடர்ந்து வெளிமாநிலங்களுக்கு கமல்ஹாசன் ரசிகர்கள் படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக கேரளாவுக்குத்தான் கமல் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் படையெடுத்து வருகின்றனராம்.

கேரளாவில் வந்து குவியும் ரசிகர்களின் எண்ணிக்கையில் சற்றும் குறைச்சல் இல்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தை எந்த கட்டும் இல்லாமல் பார்க்க வேண்டும் என்பதற்காகவே அங்கு ரசிகர்கள் பெருமளவில் அலை மோதுகின்றனராம்.

கோவை மாவட்டத்தையொட்டியுள்ள கேரளப் பகுதிகளுக்கும், தேனி மாவட்டத்தையொட்டியுள்ள கேரளப் பகுதிகளிலும் கமல் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.

ஒருமுறை என்றில்லாமல் அடுத்தடுத்து பலமுறை படத்தைப் பார்த்து வருகின்றனராம் ரசிகர்கள். குமுளியில் உள்ள ஒரு திரையரங்கில் இன்று நூற்றுக்கணக்கான ரசிகர்கள் குவிந்து விட்டனர். இதனால் கவுண்ட்டரைத் திறந்த சில நிமிடங்களிலேயே ஹவுஸ் புல் ஆகி விட்டது.

படம் பார்க்க கம்பம், தேனி, ராமநாதபுரம், பரமக்குடி என்று பல்வேறு தென் மாவட்ட ஊர்களிலிருந்தும் ரசிகர்கள் குவி்ந்தனர். சில ரசிகர்கள் கூறுகையில், படத்தை எந்தவித கட்டும் இல்லாமல் பார்க்க முடியும் என்பதால் இங்கு வந்தோம். படத்தை எத்தனை முறை பார்க்க முடியுமோ அத்தனை முறை பார்ப்போம் என்றனர்.

குமுளி தியேட்டரில் கட்டணமும் மிகக் குறைவாக உள்ளதாலும், படத்தைப் பார்க்க எந்தப் பிரச்சினையும், சிக்கலும் இல்லை என்பதாலும் தொடர்ந்து இங்கு ரசிகர்கள் குவிந்து வருகின்றனராம்.

 

Post a Comment