சென்னை: விஸ்வரூபம் சர்ச்சை ஒருவழியாக ஓய்ந்துள்ளது. இதனால் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.
விஸ்வரூபம் சர்ச்சையால் தமிழகத்தில் திரையிட தடை விதிக்கப்பட்டது. இதனால் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்குப் போய் விஸ்வரூபம் படத்தைப் பார்த்து வந்தனர் கமல்ஹாசன் ரசிகர்கள்.
இந்நிலையில் சென்னையில் நேற்று நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து வழக்குகளை திரும்பப் பெறுவதாக கமல்ஹாசன் அறிவித்தார். சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும் படம் எப்போது தமிழகத்தில் திரையிடப்படும் என்பது குறித்தும் அவராகவே விளக்கம் அளித்தார். இது பற்றி அவர் கூறுகையில், விஸ்வரூபம் படத்தில் இருந்து சில ஒலி குறிப்புகளை நீக்குவதாக ஒப்புக் கொண்டு உள்ளேன். இதுபற்றி மத்திய சென்சார் போர்டிடம் தெரிவித்துவிட்டு, சட்டப்படி படத்தை வெளியிடுவதற்கான முயற்சிகளை எடுப்போம். எனக்கும் எனது ரசிகர்களுக்கும் முக்கியமான அறிவிப்பு படத்தை வெளியிடும் தேதி குறித்து சிலருடனும் தொழில்நுட்ப ரீதியாகவும் பேசி அறிவிக்கப்படும் என்றார்.
Post a Comment