"நேர்மறை எண்ணம் கொண்டவர்களை கொடிய விஷம் கூட கொல்ல முடியாது... எதிர்மறை எண்ணம் கொண்டவர்களை எந்த மருந்தாலும் குணப்படுத்த முடியாது" என்று ஒரு கருத்து உண்டு. ஆனால் இன்றைக்கு பலரும், இந்த டானிக் குடித்தால் ஆரோக்கியம் அதிகமாகும்... இந்த பானம் குடித்தால் உயரமாக வளரலாம்... என்று கூறப்படுவதை நம்பி வாங்கி உபயோகிக்கின்றனர்.
நோய்களுக்கு செலவு செய்தது போய் இன்றைக்கு நோய் வராமல் பாதுகாத்துக் கொள்வதற்காக சந்தையில் விற்கும் பல பொருட்களை வாங்கி உபயோகிக்கின்றனர் இன்றைய மக்கள்.
மூளை வளர்ச்சிக்கு இதை குடிங்க... கொழுப்பை கரைக்க இதை சாப்பிடுங்க என்று சந்தையில் எத்தனையோ பொருட்கள் விற்பனையில் குவிந்து வருகின்றன. பிஎம்ஐ ரிப்போர்ட் பார்த்து உயரத்துக்கு ஏற்ற வெயிட் இல்லையே என்று யாராவது கூறினால் போதும் உடனே பதறிப்போய் எதையாவது செய்து உடம்பை கவனிக்கத் தொடங்கிவிடுவார்கள்.
ஜிம் போவது தொடங்கி வீட்டையே ஜிம் ஆக மாற்றுவது என அதீத அக்கறை எடுத்துக்கொள்கின்றனர். இதுபோன்ற அதீத அக்கறை கூட சில சமயம் ஆபத்தை விளைவித்துவிடும்.
இதுபோன்று ஆரோக்கியத்தில் அதீத அக்கறை எடுத்துக்கொள்பவர்களும், வாழும் வரை வாழ்வோம் அதற்காக மெனக்கெட வேண்டாம் என்ற கருத்துடையவர்களும் விஜய் டிவியின் நேற்றைய நீயா நானா நிகழ்ச்சியில் பங்கேற்று விவாதித்தனர்.
ஏரோபிக்ஸ் டான்ஸ்
உடல் ஆரோக்கியத்திற்காக அரிசி சோறு சாப்பிடுவதை விட்டுவிட்டேன் என்று கூறினார் ஒருவர். பழங்கள் காய்கறிகள் அதிகம் சாப்பிடுவதாக கூறினார் மற்றொருவர். ஜிம் போவதாக சிலரும், ஏரோபிக்ஸ் நடனம் ஆடுவதாக ஒரு பெண்மணியும் கூறினர். சொன்னதோடு மட்டுமல்லாது நடனமாடியே காண்பித்தார் அந்த பெண்மணி.
ஆரோக்கிய உணவு
கொழுப்பில்லாத பால், தோல் இல்லாத கோழி, கைக் குத்தல் அரிசி, 6 உணவு எடுத்துக்கொள்வதாக கூறினார் ஒரு பெண். உணவுக்கு பதிலாக மாத்திரை சாப்பிடுவதாக கூறி அதிரவைத்தார் ஒரு இளைஞர். தொப்பை குறைய ஆயுர்வேத எண்ணெய் தடவிக்கொண்டு தோட்ட வேலை செய்வதாக கூறினார்.
இதெல்லாம் காமெடியா இருக்கே
ஆனால் இதுபோன்று ஆரோக்கியத்திற்காக செய்யப்படும் நடவடிக்கைகள் எல்லாம் காசுக்கு பிடித்த கேடுதான் எல்லாமே காமெடியாக இருக்கும் என்று கூறி நக்கலடித்தனர் மற்றொரு தரப்பினர்.
நிறைய நாள் இருக்கணும்னு ஆசை
வீட்டை விட்டு கிளம்பும் போதே டானிக், மருந்து என பத்திரமாக கிளம்புகின்றனர். இதற்குக் காரணம் நீண்ட நாள் வாழவேண்டும் என்ற ஆசைதான் என்றனர். நோய் எதுவும் வரக்கூடாது என்பதற்காகவே இதுபோன்ற ஆரோக்கியமான வழிமுறைகளை கடைபிடிப்பதாக வருவதாக பலரும் கூறினார்.
இதெல்லாம் மார்க்கெட்டிங்தான்
ஆனால் இதெல்லாம் தங்களின் வருமானத்தை பெருக்குவதற்காக செய்யப்படும் வியாபாரம்தான் என்றனர் எதிர் அணியினர். மனிதர்களை அச்சுறுத்தி, அவர்களை நோயாளிகளாக்குகின்றனர் என்று குற்றம் சாட்டினார் மருத்துவர் ஒருவர். குண்டானவர்களை ஒல்லியாக்கவும், கருப்பானவர்களை சிவப்பாக்கவும் இன்றைக்கு பல மருந்துகள் விற்பனைக்கு வருகின்றன.
ஊடகங்கள் மூலம் பாதிப்பு
குண்டாக இருந்தால் கொழுப்பு அதிகமாகிறது. எனவே நோய் வந்துவிடும் என்று கூறுகின்றனர். மருத்துவர்கள் கூறுவது, ஊடகங்களில் தெரிவிக்கும் செய்திகளால்தான் இதுபோன்று அச்சப்படுவதாக தெரிவித்தனர். இன்டர்நெட்டில் எத்தனையோ இருக்கிறது அதைப் படித்து அவற்றை பின்பற்றுவதாக கூறினர் ஆரோக்கியத்தின் மீது அக்கறைக் கொண்டவர்கள்.
உணவில் இருக்கிறது மருந்து
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய டாக்டர் கீதா அசோக், நம்முடைய சமையலறையிலேயே பல பொருட்கள் இருக்கின்றன என்றார். மூங்கில் உணவுப் பொருட்கள் சத்தான உணவு என்றார். விளம்பரம் பார்த்து அவற்றை சாப்பிடவேண்டிய அவசியம் இல்லை என்றார். நடைமுறையில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவே போதும் என்றார் அவர்.
உணவுக்கும் ஆயுளுக்கும் தொடர்பில்லை
எத்தனையோ பக்குவமாக சாப்பிட்டு பல உடற்பயிற்சி செய்து பாதுகாப்பாக இருக்கும் பலர் குறைந்த வயதிலேயே மரணத்தை தழுவியிருக்கின்றனர். அதேசமயம் உடற்பயிற்சி இன்றியோ, சரியான உணவுகள் இன்றியோ வாழும் பலரும் 80 வயதுவரை ஆரோக்கியமாக வாழ்வதாக கூறினார் மற்றொரு சிறப்பு விருந்தினர் எழுத்தாளர் அபிலாஷ்.
அழகுக்கு முக்கியத்துவம்...
முன்பெல்லாம் இளம்பெண்கள் நன்றாக குண்டாகவேண்டும் என்று சத்தான உணவுகளை கொடுத்து வந்தனர். ஆனால் இன்றைய இளம் பெண்கள் உடல் இளைக்க உணவுகளை தவிர்க்கின்றனர். இதனால் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மயக்கம் போட்டு விழும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்றார்.
உடல் ஆரோக்கியம் என்பது மனதோடு தொடர்புடையது. மனம் ஆரோக்கியமாக இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்ற உண்மைக் கருத்தை கூறி நிறைவு செய்தார் நிகழ்ச்சித் தொகுப்பாளர் கோபிநாத்.
Post a Comment