சென்னை: உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இந்த ஆண்டு கலந்து கொண்டு கோச்சடையான் பட டிரைலரை வெளியிடுகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி.
பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச படவிழா நடைபெறுகிறது. இதில் உலகப் புகழ்பெற்ற திரைப்படங்களுடன், இந்திய திரைப்படங்களும் திரையிடப்படுகின்றன.
வழக்கமாக பாலிவுட் திரை நட்சத்திரங்கள்தான் இந்த விழாவில் பெருமளவு கலந்து கொள்வார்கள்.
ஆனால் இந்த ஆண்டு, கேன்ஸ் விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார். இதற்காக மே மாதம் அவர் பிரான்ஸ் செல்கிறார்.
அவர் இரு வேடங்களில் நடித்து திரைக்கு வர தயாராக இருக்கும் ‘கோச்சடையான்' படத்தின் டிரெய்லர் இதில் வெளியிடப்படுகிறது.
கேன்ஸ் பட விழாவில் ரஜினிகாந்த் கலந்துகொள்வதை படத்தின் இணை தயாரிப்பாளரான முரளிமனோகர் உறுதி செய்துள்ளார். ‘கோச்சடையான்' படம் இந்திய சினிமாவில் புதிய தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட படமாக இருக்கும் என்றும், படம் வெளியாகும் தேதி மே மாதம் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
சமீபத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ரஜினிகாந்த் நீண்ட தூரம் பயணம் செய்யக்கூடாது என்று டாக்டர்கள் ஆலோசனை கூறினார்கள். இப்போது அவர் அனைத்து வகையிலும் நலமுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கிறார். எனவே கேன்ஸ் பட விழாவில் கலந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறார்.
இந்த விழாவில் நடிகர் அமிதாப்பச்சனும் கலந்து கொள்கிறார். அமிதாப்பச்சன் முதல் முறையாக ‘தி கிரேட் கேட்ஸ்பி' என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படம் கேன்ஸ் படவிழாவில் திரையிடப்படுவதால், சிறப்பு அழைப்பாளராக அவர் கேன்ஸ் செல்கிறார்.
Post a Comment