சிவாஜி கணேசன் நடித்த சரஸ்வதி சபதம் படத்தின் தலைப்பை மீண்டும் பயன்படுத்த சிவாஜி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்தப் படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் சத்யன், ஜெய் உள்ளிட்ட அனைவரது வீடுகளையும் முற்றுகையிடுவோம் என்றும் எச்சரித்துள்ளனர்.
சிவாஜி கணேசன், பத்மினி, தேவிகா நடித்து 1966-ல் ரிலீசான பக்தி படம் ‘சரஸ்வதி சபதம்'. மிகப்பெரிய வெற்றிப் படம். பட்டி தொட்டியெல்லாம் இந்தப் படத்தின் கதை வசனம் ஒலிபரப்பானது அன்றைக்கு.
‘சரஸ்வதி சபதம்' பெயரில் தற்போது புதுபடம் தயாராகிறது. இதில் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார். சத்யன், வி.டி.வி. கணேஷ் உள்ளிட்ட காமெடி நடிகர்களும் நடிக்கின்றனர். கே.சந்துரு இப்படத்தை இயக்குகிறார்.
‘சரஸ்வதி சபதம்' தலைப்பை ஜெய் படத்துக்கு வைத்து இருப்பதற்கு சிவாஜி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சிவாஜி ரசிகர் மன்ற தலைவர் கே.வி.பி. பூமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:
சிவாஜி நடித்த காலத்தால் அழிக்க முடியாத காவிய படைப்பு ‘சரஸ்வதி சபதம்'. அந்த தலைப்பில் புதுப்படம் எடுப்பது அதில் நடித்த கலைஞர்களை அவமதிப்பதாகும். ஏற்கனவே விவேக் சிவாஜியின் அப்பர் வேடத்தில் நடித்ததை எதிர்த்தோம். அவர் திருத்தி கொண்டார்.
புது படத்துக்கு சரஸ்வதி சபதம் பெயர் வைக்ககூடாது மீறி வைத்தால் அதில் நடிக்கும் ஜெய், சத்யன் உள்ளிட்டோர் வீடுகளில் முற்றுகை போராட்டம் நடத்துவோம்," என்று கூறப்பட்டுள்ளது.
சிவாஜி சமூக நல பேரவை தலைவர் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் "சிவாஜி நடித்த புராண இதிகாச படங்களின் தலைப்புகளை புதுப்படங்களுக்கு சூட்டக்கூடாது. உத்தமபுத்திரன், கவுரவம், இருவர் உள்ளம் போன்ற தலைப்புகளைப் பயன்படுத்துவதை எதிர்க்கவில்லை. ‘திருவிளையாடல்' தலைப்பு வைக்க எதிர்த்தோம். அதை திருவிளையாடல் ஆரம்பம் என மாற்றினர்.
இப்போது ‘சரஸ்வதி சபதம்' தலைப்பு புதுப்படத்துக்கு சூட்டப்பட்டுள்ளது. கோவில் திருவிழாக்களில் இன்றும் சரஸ்வதி சபதம் வசனம் ஒளிபரப்பப்படுகிறது. இதே பெயரில் காதல் காமெடி படம் எடுப்பது இந்து தெய்வங்களையும், சிவாஜியையும் அவமதிக்கும் செயல். எனவே தலைப்பை மாற்றகோரி கோர்ட்டுக்கு செல்வோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment