நடிகர் சாந்தனு பெயரில் போலி ஃபேஸ்புக் அக்கவுண்ட்: மோசடி செய்து பணம் பறித்த இளைஞர் கைது

|

நடிகர் சாந்தனு பெயரில் போலி ஃபேஸ்புக் அக்கவுண்ட்: மோசடி செய்து பணம் பறித்த இளைஞர் கைது

சென்னை: நடிகர் சாந்தனு பெயரில் போலி ஃபேஸ்புக் அக்கவுண்ட் தொடங்கி அவரது ரசிகையிடம் ஆயிரக்கணக்கில் பண மோசடி செய்ததாக சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

நடிகர் பாக்கியராஜியின் மகனும், நடிகருமான சாந்தனு கடந்த மாதம் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் தனது பெயரில் ஃபேஸ்புக் இணையளத்தில் போலி பக்கம் உருவாக்கப்பட்டு, தனது ரசிகர்-ரசிகைகளிடம் மோசடி நடைபெறுவதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை பெற்ற பெருநகர காவல்துறை ஆணையர் எஸ்.ஜார்ஜ், அப் புகார் மீது நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து சைபர் குற்றப்பிரிவின் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணையில் இந்த மோசடியில் ஈடுபடுவது சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த சலாலுதீன் மகன் ரியாஸ்கான் (22) என்பது தெரியவந்தது. மேலும் அவர் சாந்தனுவின் ரசிகையை ஏமாற்றி ரூ. 10 ஆயிரம் வாங்கியிருப்பதும் கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து ரியாஸ்கானை போலீஸார் தேடி வந்தனர்.

கேரளத்தில் தலைமறைவாக இருந்த ரியாஸ்கான் திங்கள்கிழமை சென்னை வந்தார். இதனையறிந்த போலீஸார் ரியாஸ்கானை உடனடியாக கைது செய்தனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் பிரபல தனியார் டி.டி.எச். சேவை நிறுவனத்தில் வேலை செய்வது தெரியவந்தது. மேலும் அவர், அனிதா என்ற பெண்ணிடம் ஃபேஸ்புக் மூலம் சாந்தனு தொடர்பு கொள்வதுபோல கொண்டு தான் நடித்த திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்ததால், பண நெருக்கடியில் இருப்பதாகவும், தனக்கு ரூ. 10 ஆயிரம் வேண்டும் என கேட்டுள்ளார். தனது நண்பரை அனுப்பிவைப்பதாகவும், பணத்தை அவரிடம் கொடுக்குமாறும் சாட் செய்துள்ளார். அதை நம்பிய அனிதா அந்த பணத்தை கொடுத்துள்ளார். ரூ. 10 ஆயிரத்தை அனிதாவிடம் நேரில் சென்று ரியாஸ்கானே சென்று வாங்கியுள்ளார். அப்போது ரியாஸ்கான், தான் சாந்தனுவின் நெருங்கிய நண்பர் எனக் கூறி அனிதாவை ஏமாற்றினாராம்.

இது தொடர்பாக ரியாஸ்கானிடம் போலீஸார் மேலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

Post a Comment