சென்னை: தமிழக அரசு சார்பில் இன்று தலைவா படத்தை அதிகாரிகள் பார்க்கிறார்கள். சட்டம் ஒழுங்குப் பிரச்சினைக்குரிய காட்சிகள் இருந்தால் நீக்கும் வகையில் இந்த சிறப்புக் காட்சி அவர்களுக்கு காட்டப்படுகிறது.
விஜய் நடித்துள்ள தலைவா திரைப்படம் நாளை உலகமெங்கும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்தை வெளியிடும் தியேட்டர்களுக்கு வெடி குண்டு மிரட்டல் வந்ததாலும், பாதுகாப்பு தரமுடியாது என போலீசார் சொன்னதாலும் இந்தப் படத்தைத் திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் மறுத்துவிட்டனர். நேற்று முதல் முன்பதிவும் நிறுத்தப்பட்டுவிட்டது.
இதனால் படம் வெளியாவது குறித்து குழப்பமான சூழல் நிலவியது.
இந்நிலையில் படத்தை தமிழக அரசின் உள்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்குத் திரையிட்டுக் காட்ட தயாரிப்பாளர் முன்வந்தார். இன்று பிற்பகல் நுங்கம்பாக்கத்தில் உள்ள போர்பிரேம்ஸ் திரையரங்கில் இந்தக் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வரிவிலக்குப் பரிந்துரைப்புக் குழுவில் உள்ள இயக்குர் ஆர்வி உதயகுமார், பாடகி எல் ஆர் ஈஸ்வரி ஆகியோரும் அதிகாரிகளுடன் படம் பார்க்க வந்தனர். உளவுத் துறையைச் சேர்ந்த சிலரும் அரங்குக்கு வந்திருந்தனர்.
படம் முடிந்த பிறகு இந்தக் குழு பரிந்துரைக்கும் காட்சிகள், வசனங்களை நீக்க தயாரிப்பாளர் முன்வந்துள்ளார். அரசின் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்கவும் தயாராக இருப்பதால், படத்துக்கான முட்டுக்கட்டை விலகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Post a Comment