இப்ராகிம் ராவுத்தர் தயாரிக்கும் 'புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்'

|

ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படத் தயாரிப்பில் இறங்கியுள்ளார் இப்ராகிம் ராவுத்தர். படத்துக்குப் பெயர் 'புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்'

விஜயகாந்த் நடித்த உழவன் மகன், புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், பூந்தோட்ட காவல்காரன் உள்பட பல படங்களை தயாரித்தவர் இப்ராகிம் ராவுத்தர்.

சில ஆண்டுகளுக்கு முன் புலன் விசாரணை 2 என்ற படத்தைத் தயாரித்தார். ஆனால் அந்தப் படம் வெளிவரவில்லை.

புதிய படம்

பின்னர் இரண்டு முகம் என்ற படத்தை தயாரித்தார். அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து இப்போது, ‘புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்' என்ற பெயரில் புதிய படத்தை தயாரிக்கிறார்.

கிரிஷ்

இந்தப் படத்தில் நடிகை சங்கீதாவின் கணவரும், பாடகருமான கிரிஷ் கதாநாயகனாக நடித்துள்ளார்.

சிருஷ்டி டாங்கே

மும்பை அழகி சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் விஜய்பாபு, புதுமுகங்கள் ஜானகி, ஹாரீஸ் மூசா, நித்திஷ் மற்றும் பலரும் நடித்து இருக்கிறார்கள்.

ரஹைனா

செந்தில் மாறன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரஹ்மானின் சகோதரி ரஹைனா இசையமைத்து இருக்கிறார். தம்பி செய்யது இப்ராகிம் டைரக்டு செய்து இருக்கிறார். ராவுத்தர் பிலிம்ஸ் சார்பில் படம் தயாராகிறது. மதுரை, தென்காசி, குற்றாலம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட இந்தப் படம் மே மாதம் வெளிவர இருக்கிறது.

மதுரை காதல்

படத்தை பற்றி இயக்குநர் தம்பி செய்யது கூறுகையில், "கத்திக்கும், ரத்தத்துக்கும் பெயர் போன கலவர பூமியான மதுரையில் நடைபெறும் ஒரு மென்மையான காதல் கதை இது. எல்லோருக்குமே தங்கள் முதல் காதலில் இயலாமை இருக்கும். அந்த இயலாமையை நான் யதார்த்தமாக சொல்லியிருக்கிறேன்.

உண்மைச் சம்பவம்

காமத்தின் அரும்புதான் காதல் என்று நிறைய பேர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். காதல் வேறு, காமம் வேறு என்பதற்கான தீர்வையும் இந்த படத்தில் சொல்லியிருக்கிறேன். நான் உணர்ந்த உண்மை சம்பவங்களையே திரைக்கதையாக்கி இருக்கிறேன்,'' என்றார்.

 

Post a Comment