சேலம்: கோச்சடையான் திருட்டு டிவிடிகளைப் பறிமுதல் செய்த ரஜினி ரசிகர்கள்!

|

சேலம்: சேலத்தில் ஒரு கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கோச்சடையான் திரைப்பட திருட்டு டிவிடிக்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

ரஜினிகாந்த் ரசிகர்கள் அதிரடியாக கடைக்குள் புகுந்து டிவிடிக்கள் விற்பனை செய்யப்படுவதைக் கண்டறிந்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சேலம்: கோச்சடையான் திருட்டு டிவிடிகளைப் பறிமுதல் செய்த ரஜினி ரசிகர்கள்!

ரஜினியின் கோச்சடையான் திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியானது. இந் நிலையில், சேலம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள மெய்யனூர், ஆலமரக்காடு பகுதியில் உள்ள ஒரு டி.வி.டி. விற்பனைக் கடையில், கோச்சடையான் திரைப்பட திருட்டு டி.வி.டி.க்கள் விற்பனை செய்யப்படுவதாக ரஜினி ரசிகர்களுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் பழனிவேலு, நிர்வாகிகள் சித்தேஸ்வரன், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் சனிக்கிழமை காலை சம்பந்தப்பட்ட கடைக்குச் சென்று கோச்சடையான் டி.வி.டிக்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா? என்று சோதனை போட்டனர்.

அங்கு சுமார் 500 கோச்சடையான் திரைப்பட டி.வி.டி.க்கள் இருந்தது தெரிய வந்தது.

ரஜினி ரசிகர்கள் வருவதை அறிந்ததும் கடை உரிமையாளர் பூபதி, விற்பனையாளர் மோகன் ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து பள்ளப்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த ஆய்வாளர் சரவணன், உரிமம் பெறாத டிவிடிக்களை பறிமுதல் செய்தார். மேலும், தலைமறைவான இருவரையும் கைது செய்யத் தேடி வருகிறார்.

 

Post a Comment