லிங்கா பிரச்சினை... பெரும் தொகை தந்த ரஜினி... பிரித்துக் கொள்வதில் சண்டை!

|

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'லிங்கா' திரைப்படத்தால் நஷ்டம் ஏற்பட்டதாக விநியோகஸ்தர்கள் எழுப்பிய பிரச்னை முடிவுக்கு வந்துள்ளதாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த்- சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா நடித்த "லிங்கா' திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி வெளியானது.

வெளியான முதல் வாரத்திலிருந்து இந்தப் படத்துக்கு எதிரான பிரச்சாரத்தை அதன் விநியோகஸ்தர்கள் சிலர் ஆரம்பித்தனர். இந்தப் படத்தால் தங்களுக்குப் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறி பிச்சைப் போராட்டம் அறிவித்தனர்.

லிங்கா பிரச்சினை... பெரும் தொகை தந்த ரஜினி... பிரித்துக் கொள்வதில் சண்டை!

இப்பிரச்னையில் ரஜினிகாந்த் நேரடியாகத் தலையிட்டு தயாரிப்பாளர்களிடம் இருந்து நஷ்டத் தொகையைப் பெற்றுத்தர வேண்டும் என விநியோகஸ்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், இப்பிரச்னையை ரஜினிகாந்த் முடித்து வைத்துள்ளதாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சங்கத் தலைவர் கலைப்புலி தாணு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஒரு பெரிய தொகையை இழப்பீடாகக் கொடுத்து "லிங்கா' திரைப்படம் தொடர்பான பிரச்னைக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்தத் தகவலை 10 நாள்களுக்கு முன்பே "லிங்கா' படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மூலம் எங்களுக்குத் தெரிவித்து விட்டார். அந்தத் தொகையும் எங்களுக்கு வந்து விட்டது. எங்களிடம்தான் உள்ளது.

இந்தத் தொகையை விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் பிரித்துக் கொள்வதில்தான் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

எனவே, இனி இந்தப் பிரச்னைக்கும் ரஜினிகாந்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பிரச்னையை சுமுகமாக தீர்த்து வைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தமிழ்த் திரையுலகின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Post a Comment