கார்த்தி- லட்சுமி மேனன் நடித்துள்ள கொம்பன் படத்துக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
கொம்பன் படத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவு படுத்துவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகவும், கொம்பன் தலைப்பே குறிப்பிட்ட சாதியின் ஆதிக்கத் திமிரைக் காட்டுவதாகவும் கூறி புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி வழக்கு இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார்.
முதலில் படத்தின் சில காட்சிகளை நீக்கக் கோரியவர், அடுத்து படத்தையே தடை செய்ய வேண்டும் என்றார்.
இதைத் தொடர்ந்து படத்தை கிருஷ்ணசாமிக்கும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் உள்ளடங்கிய குழுவுக்கும் போட்டுக்காட்ட நீதிபதி உத்தரவிட்டார்.
ஆனால் படத்தை 3 நிமிடங்கள் கூட யாரும் பார்க்க முடியாத அளவுக்கு மோசமான சூழல் உருவானது திரையரங்கில்.
இந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படும் முன்பே படத்தை வெளியிட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அறிவிப்பு வெளியிட்டார்.
இதனால் 2ம் தேதி வெளியாக வேண்டிய கொம்பன் படம், ஒரு நாள் முன்னதாகவே இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் மதுரை நீதிமன்றத்தில் கொம்பன் பட வழக்கு இன்று பிற்பகல் 2 மணிக்கு மேல் விசாரணைக்கு வருவதால் தீர்ப்புக்கு பிறகு படத்தை வெளியிட முடிவு செய்தனர் திரையரங்க உரிமையாளர்கள்.
அதன்படி இந்த வழக்கு மதுரை நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கொம்பன் படத்தை வெளியிட தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்துவிட்டனர். படம் வெளியான பிறகு சர்ச்சைக்குரிய காட்சிகள் இருந்தால் வழக்கு தொடரலாம் என்றும் தீர்ப்பளித்துள்ளனர்.
இதையடுத்து கொம்பன் படம் திட்டமிட்டபடி இன்று மாலை வெளியாகிறது.
Post a Comment